Friday, April 9, 2010

உறுபசி (1) : தீரா வலியின் ருசி


உறுபசி
ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன் 
பதிப்பகம்: உயிர்மை
விலை: ரூ. 75/-'நாற்பத்தி இரண்டே வயதில், கல்யாணமாகிய ஓரிரு வருடங்களிலேயே,  அரசாங்க ஆசுபத்திரியில் இறந்து போகிறான் சம்பத்', என அதிர்ச்சியுடன் நாவல் ஆரம்பம் ஆகிறது.  அவன் இறுதிக் காரியங்களை முடித்த கையுடன், அவனது நண்பர்கள் துரைசாமி, அழகர், மாரியப்பன், மற்றும் சம்பத்தின் மனைவி ஜெயந்தி ஆகியோரின்  நினைவுகளின் வாயிலாக (flashback), சம்பத்தின் வாழ்க்கைப் பரிணாமத்தைக்  கொஞ்சம், கொஞ்சமாக விவரித்துக் கொண்டே செல்கிறார் ஆசிரியர் எஸ்.ரா.

கதையின் முதல் தளம், புறவயமான நிகழ்வுகள்.  நால்வரும் கல்லூரியில் பெண்களே இல்லாத தமிழ்ப் பிரிவில், ஒன்றாகப் படித்தவர்கள்.  
சின்ன வயதில் தன் கிராமத்தில் பண்டாரம் பாடும் தமிழ் பாட்டின் அழகை ருசித்து வளர்ந்த சம்பத், தமிழ்ப் பிரிவில் விரும்பிச் சேர்ந்தவன். மற்றவர்கள், பிற பிரிவுகளில் இடம் கிடைக்காததாலும், அரசியல் குடும்பத்தில் இருந்து வந்த காரணத்தாலும், அதே பிரிவில் சேர்ந்தவர்கள்.   எஸ். ரா.  ஒவ்வொரு நண்பரின் வாழ்க்கையையும், குறிப்பாக மாரியப்பனின் வாழ்க்கையை, மிகச் சுருக்கமாக, ஆனால் நுட்பமாக, போகிற போக்கில் திறமையாகச் சொல்லி விடுகிறார்.  கல்லூரிப் படிப்புக்குப் பின், சம்பத்தைத் தவிர மற்ற மூவரும் படித்ததற்குச் சம்பந்தம் இல்லாத வேலையைச் செய்யும் சமரசத்தை மிக விரைவில் செய்து கொள்கிறார்கள். சம்பத் மட்டும் எந்த வேலையிலும் தொடர்ந்து இல்லாமல், பிடித்தமும் இல்லாமல்,  லௌகீக விஷயங்களில் பெரும் தோல்வி அடைந்தவனாக இருக்கிறான்.  அவன் வாழ்க்கையில் நசித்துச் சாவது அர்த்தமில்லாதது போல் தோன்றுகிறது.  அது ஏன் என புரிந்து கொள்ள, சம்பத்தின் அகவயப் பரிணாமத்தை அறிந்து கொள்வது அவசியம். இதை எஸ்.ரா. மிக நேர்த்தியாக, சின்ன, சின்ன விஷயங்கள் மூலம் வெளிக் கொணர்கிறார்.

கதையின் முக்கியமான இரண்டாவது தளம், சம்பத்தின் அகவியல்புகளைப் பற்றியது.  சம்பத், தன் நண்பன் அழகரிடம் இருந்து லைட்டரை வாங்கி சிகரட்டைப் பற்ற வைத்த பின்,  "லைட்டர்களில் எரியும் நெருப்பு தீக்குச்சியின் நெருப்பு போல நெருக்கம் தருவதில்லை.  உலகில் உள்ள எல்லா தீக்குச்சிகளும் மிகப் பதட்டமாகவே எரிகின்றன", எனக் கூறுகிறான்.  பதட்டத்தோடு எரியும் நெருப்பை கவனிக்கும் நுண்ணுணர்வு கொண்டவன், சம்பத். சம்பத்தின் மனிதாபிமானத்தை, அவன் தங்கியிருந்த விடுதியில் வேலை பார்க்கும்  பையன், நாராயணன் சம்பத்துடன் உரிமையோடு கொண்டாடும் உறவில் சித்தரிக்கிறார்.  இந்த மென்மையான இயல்புடையவனை, பதின்பருவத்தில் நடக்கும் ஒரு துயர நிகழ்ச்சி மிகவும் பாதிக்கிறது (அது என்னவென்று புத்தகத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்).   நன்கு சுருதி மீட்டப்பட்ட வீணையில் ஆலமரம் விழுந்ததைப் போன்ற அதிர்ச்சி கொள்கிறது, அவனது நுண்ணிய மனம்.  ஆழமான காயத்தை அவனது பிஞ்சு மனத்தில் அறைந்து பதிக்கிறது.  அவனுள் இருந்த ரணத்தின் ஆழத்தைப் புரிந்து கொண்டு அவனைத் தேற்றி வெளிக் கொண்டுவரும் பக்குவமோ, இம்மாதிரி விஷயங்களை எப்படி அணுகுவது என்ற அனுபவமோ அவனது  குடும்பத்திற்கு இல்லை.  சம்பத்திற்குத், தானே புரிந்து கொண்டு தன்னைத் தேற்றிக் கொள்ளும் முதிர்ச்சியும் இல்லாத வயது.  தன் ரணத்தின் வலிகளை, அதனால் விளையும் பயங்களை, தன்னை யாரும் நெருங்க முடியாத மூர்க்கப் போர்வையால் மூடி மறைத்துக் கொள்கிறான்.  கொஞ்சம் சந்தோஷமாக இருந்தாலும், அவன் உள்ளே உறைந்திருக்கும் ரணம் உக்கிரமாய்த் தலை தூக்கி, "நீ இந்த சந்தோஷத்திற்கு லாயக்கற்றவன்", என்று சம்பத்தை பின் தள்ளுகிறது.  அந்த உக்கிரமான பின் தள்ளுதலை அவன் தனக்கு உரித்தான தண்டனையாகக் கருதுகிறான்.  கொஞ்சம் கொஞ்சமாக அது தரும் வலியை விரும்புவனாகக் கூட ஆகி விடுகிறான்.   வாழ்க்கையில் எப்படியாவது ஒரு பிடிப்போடு வாழ வேண்டும் என்று விழையும் சம்பத்திற்கும், எந்த சந்தோஷத்திற்கும் நீ உரித்தானவனில்லை என்று அறைந்து சொல்லும் அவனது உளச்சிக்கலுக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் நாவலின் முக்கிய சாரம். இத்தீராப் பசியைக் கடைசியில் தீர்க்கும் தீனி சம்பத்தின் உயிர் தான்.  இந்த உளச்சிக்கலின் உக்கிரத்தை எஸ். ரா, எளிய வார்த்தைகளைக் கொண்டு அலாதியாக விவரிக்கிறார்.

சம்பத் போன்றவர்களை நம் வாழ்க்கையில், ஏன், நம் குடும்பத்தில் கூட பார்த்திருப்போம்.  கைதூக்கிவிட ஆளிருந்தும் சதா குற்ற உணர்ச்சியுடன் மேலேறி வர மறுப்பவர் எத்தனை பேர்.  எப்பொழுதும் தேரை எதிர்த்திசையில் இழுப்பவர்கள் தம்மைச் சுற்றியிருப்பவர்களுக்குத் துன்பமே தருகிறார்கள், அதில் குரூர நிறைவும் அடைகிறார்கள்.

சம்பத்தின் சாவை, எஸ். ரா. விவரித்திருக்கும் விதம் படிப்பவர்களின் உள்ளத்தை நெருடும்.  சாவின் உக்கிரத்தை, சாவின் முடிவுத்தன்மையை,  எந்த மிகை உணர்ச்சியும் இல்லாமல் உண்மையான வார்த்தைகளால் பதிவு செய்திருக்கிறார்.   மிக உக்கிரமான, உணர்வுபூர்வமாக ஒன்றிய  நிகழ்வுகளில் கூட, சாதாரண பௌதீகத் தேவைகள் முண்டியடித்து ஒருவனின் கவனத்தைக் கோரும் விசித்திரத்தை நாவலில் கோடிட்டுக் காட்டுகிறார். உதாரணமாக,  சம்பத் இறந்தவுடன் நெஞ்சம் பதைபதைத்து, கண் கலங்கிய சம்பத்தின் மனைவிக்கு,  சம்பத்தின் உடலை வீட்டில் கொண்டு வைத்த கொஞ்ச நேரத்திலேயே பசிக்கிறது, தூக்கம் கண்ணைக் கட்டுகிறது, மூத்திரம் வருகிறது.  சம்பத்தின் மரணத்துக்கு வருந்தி மூசுமூசுவென்று உண்மையிலேயே வருந்தி அழும் மாரியப்பன் கூட, சாவு வீட்டிற்கு வருவதற்கு முன்னால் சாப்பிட்டுவிட்டுத் தான் வருகிறான்.

சம்பத் போன்ற நுண்ணுணர்வு கொண்டவர்கள் வாழ்க்கையின் அபத்தங்களை எதிர்கொள்ள முடியாமல் சிதறி வீழும் அதே வேளையில், பெரும்பாலனவர்கள் வாழ்க்கையின் அபத்தங்களைக் கொஞ்சம் மங்கிய உணர்வுகளுடன் எளிதாக எதிர் கொண்டும், சமரசம் செய்து கொண்டும் வாழ்கிறார்களே என்ற கேள்வியும் எழுகிறது.  ஒரு வேளை, வாழ்க்கையின் அபத்தங்களையும் மீறி வாழ்பவர்கள் தான் தைரியசாலிகளோ, சிதைந்து போகிறவர்கள் கோழையான சுயநலவாதிகளோ? இப்படி, இந்த நாவலை எஸ். ரா கட்டமைத்திருக்கும் விதம், வாழ்க்கையை பல முற்றிலும் முரண்பட்ட கோணங்களில் இருந்து பார்க்கும் சாத்தியங்களை அளிக்கிறது.

இந்த நாவலில் அங்கங்கே சமூகத்தின் இயங்கு விதிகளைத் தொட்டுச் செல்கிறார் எஸ். ரா.  சம்பத்தும், மாரியப்பனும் சின்ன கிராமத்தில் பிறந்தவர்கள். தத்தம் குடும்பத்தில் முதல் முறையாக கல்லூரிக்கு சென்றவர்கள்.  தம் மகன் படித்து முடித்து, நல்ல சம்பளம் வாங்கி,  நம்மைப் பார்த்து கொள்வான் என்ற பெற்றோரின் எதிர்பார்ப்புப் பொய்க்கும்போது, அவர்கள் அடையும் பெரும் ஏமாற்றம்.  இளமையின் துடிப்புடன் கல்லூரிக்கு வந்த நால்வருக்குமே, என்னடா ஒரு பெண் கூட தமிழ்ப் பிரிவில் இல்லையே என்ற ஆதங்கம்.  ஒரு பெண்ணிடம் இயல்பாகக் கூட பேச வாய்ப்பு இல்லாத, பேச வாய்ப்புக் கிடைத்தாலும் தடுமாறும் பையன்களின் பதற்றம். பதற்றத்தை உண்டு பண்ணிய சமூகச் சூழல்.  இவை அனைத்தையும் கதையின் மைய சாரத்துடன், எந்த நெருடலையும் உண்டு பண்ணாமல் இயல்பாய் வெட்டியும், ஒட்டியும் லாவகமாய்க் கொண்டு செல்கிறார் எஸ். ரா.   நண்பர்கள் இடையே இருக்கும் சமூக அந்தஸ்து வேறுபாடுகளையும், அதன் விளைவாய் வரும் பொறாமைகளையும், இறுக்கத்தையும் இயல்பான தொனியில் பதிவு செய்கிறார்.  அவர்கள் பயணத்தில் நாமும் ஒருவராகி ஒன்றி விட முடிகிறது.

குறை எனச் சொல்ல வேண்டுமென்றால், ஒரு நல்ல காப்பி எடிட்டரால் தவிர்த்திருக்கக் கூடிய சில விஷயங்கள் இந்த முதல் அச்சில் வந்திருப்பதைக் கூறலாம்.1

நாவலைப் படிக்கும் போது, நாவலின் சாரத்தை எஸ்.ராமகிருஷ்ணன், மிகவும் அதீதமாக உணர்ந்து, குறுகிய காலத்தில் எழுதி இருக்கிறார் என்று தோன்றியது.  முதல் முறை படித்த போது, கோட்டை விட்ட விஷயங்களை, இரண்டாவது முறை படிக்கும் போது உணர்ந்தேன்.  எஸ். ரா. நாவல் முழுதும், அங்கும், இங்கும் சம்பத்தின் வாழ்க்கையில் சில குறிப்புகளைக் கோடிட்டுக் காட்டி விட்டு விட்டு விடுகிறார்.  அந்தக் கோடுகளை, கண்டு பிடித்துச் சேர்த்து, வெற்றிடங்களை நிரப்பும் வேலையை வாசகரிடம் விட்டு விடுகிறார்.  ஆகவே, இந்த நாவல் பல்வேறு வாசிப்புகளுக்கான சாத்தியங்களைக் கொண்ட நாவல்.  சம்பத்தின் வாழ்க்கையை எளிதில் வரையறை செய்து விட முடியாது.  வாசிப்பின் கவனத்திற்கேற்ப மனத்தைக் கவரும் நல்ல நாவல்.

பி.கு: இந்த நாவலை நான், எனக்குத் தெரிந்த, திருமதி. மீனா நா. சுவாமி அவர்களிடம் கொடுத்தேன். திரு. வேதாத்திரி மகிரிஷி இயக்கத்தில் நெடுங்காலமாய் பேராசிரியராய் இருப்பவர். நல்ல வாசகர்.  அவர்கள் எழுதி அனுப்பிய கீழ்கண்ட மதிப்புரை  இந்த நாவலை வேறொரு கோணத்தில் காண்கிறது.


1 Flashback முறையில் கதை அமைந்துள்ளதால், சில இடங்களில் கதை சொல்லி (narrator), மூன்றாம் மனிதராய் இருக்கிறார் (மாரியப்பன், பக்கம் 55/56), இரண்டு பத்தி தள்ளி, சுயமாய் கதை சொல்லுபவராகி விடுகிறார் (narrator switches between first person, and third person). சம்பத் மகாலிங்க மலைக்கு சென்ற போது வயது 12 என்று முதல் பாராவிலும், 14 என்று அடுத்த பாராவிலும் (ப. 62) வருகிறது. இப்படி, சில சின்னத் தவிர்த்திருக்கக்கூடிய பிழைகள்.

6 comments:

ஹரன்பிரசன்னா said...

மாதம் இரண்டு மதிப்புரைகளாவது வந்தால் இதனை ஒரு பெரிய தகவல் தளமாக மாற்றிவிடலாம். வாழ்த்துகள்.

Raja M said...

இது ஒரு கூட்டு முயற்சி. தொடர்ந்து எழுத முயல்கிறோம். ஊக்கமூட்டும் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி.

Jegadeesh Kumar said...

ஹ.பி. சொன்னது சரிதான். மேலும் புத்தக மதிப்புரைகளன்றி, இலக்கியம் மற்றும் விமர்சனக் கட்டுரைகளும் இருந்தால் மகிழ்வேன்.
என் வலைப்பூவுக்கு வந்து வாழ்த்தியதற்கு நன்றி.

Anonymous said...

buy this book @ http://www.myangadi.com/urupasi-uyirmmai-pathippagam

Anonymous said...

Amazing review! This made me wanna read the book all over again!

Anonymous said...

Amazing review! This made me wanna read the book all over again!

Post a Comment