Friday, May 14, 2010

பாலகாண்டம் - இலட்சுமணப்பெருமாள்


பாலகாண்டம் 
ஆசிரியர்: இலட்சுமணப்பெருமாள்
பரிந்துரை: சண்முகம்
பதிப்பகம்: தமிழினி
பக்கங்கள்: 160


"என்னமாப் படம் பிடிக்கிறார் விசயங்களை"   என்று கி. ராசநாரயணனே வியக்கும் எழுத்தாளர் இலட்சுமணப் பெருமாள்.


இவரது சிறுவயதிலே,   இவருடைய முதிலித்தாய், காதில் வண்டிக்கம்மல் ஆட ஆட கதை கதையாய்ச் சொல்லி வளர்த்திருக்கிறாள்.    அதற்கு பின்னர் என்ன என்ன வேலையெல்லாம் செய்து வளர்ந்திருக்கிறார் பாருங்கள்:    கூலி விவசாயம்,    மைக்செட் தொழிலாளி,    பால் பண்ணையில வேல,    நிப்புக் கம்பெனி தொழிலாளி,    பஸ்ல கண்டக்டர்,    லாரியில கிளீனர்,    மேடையில வில்லிசைக் கச்சேரி,    தீப்பெட்டி  உற்பத்தியாளி,   பெட்டிக்கடை வியாபாரி...


இவருடைய நண்பர்களிடம் நடக்கிற பேச்சில்,    தன்னுடய அனுபவங்களையெல்லாம் வேடிக்கையாய்ச்சொல்ல,   அதை எழுத்தில் கொண்டுவரணுமென்று அவர்கள் சொல்ல,   கரிசல் சிறுகதைத் தொகுப்பாய் 'பாலகாண்டம்'     படைக்கப் பட்டிருக்கிறது.


'ஊமங்காடை'   முதல் சிறுகதை.   சிரிப்பாணியாய்த் தொடங்கி,    விசித்திரமாய் முன்னேறி,   கடைசியில் பொன்ராசு தன் நெஞ்சை இரண்டு கைகளால் தடவித் தடவி பார்க்கும் போது,   நம் மனதை ஏதோ மாயக் கைகள் புகுந்து பிசைந்தது போல சஞ்சலப்பட வைத்துவிடுகிறது.


தெருவில் பொட்டையுடன் கூடும் ஆண் நாயைக்,   'குறி' பார்த்து அடிக்கும் 'நல்ல'   பழக்கங்களைக் கொண்ட நம் சமூகத்தில், ஆண் நாய் உணரும் ஆற்றாமையை,   'ஒட்டுப்படை'   என்னும் கதையில் வருகிற கீ காட்டு தாத்தா உணர்ந்திருக்கக்கூடும்.    இந்தக் கதையை கி.ரா,    'படிச்சித்தாம் அதத் தெரிஞ்சக்கணும் நீங்க'    என்கிறார்.    எனக்குப் மிகப்பிடித்த சிறுகதைகள் பத்தை தெரிவு செய்வேன்  என்றால்,   அதில் இக்கதை கட்டாயம் அடங்கும்.


மக்கள் வழி வந்த சொல்கதைகள் இவரது 'கதை சொல்லியின் கதை' யில் மிக நேர்த்தியாய் கையாளப்பட்டிருக்கிறது.    பாராயணம் கெங்கவநாயக்கர் ஊருக்கே கதை சொல்லி.   வாயிலுள்ள வெத்திலைக் கலவையை கலையம்சத்தோடு பீய்ச்சியடித்தபின்,   சாவதானத்தோடு "அதாவதப்பா".... "ஹர்ர்ர்"  என்று காறி விட்டு,   இராமாயணத்திலிருந்து ஒரு கதையை எடுத்து விடுவார்.   ராமனை மறித்த பரசுரம்மனை சாதுரியத்தோடு ராமன் மடக்கும்போது,     "அற்றாத் தாயோழி .....ஙா......"   என்று கதை கேட்கும்  மனுசர்கள் அவ்வளவு சூடாகிப்போவார்கள்.    அடேயப்பா,   என்னமாய் காளிமுத்துவை ஓட்டுகிறார் ! எவ்வளவு ஓட்டப்பட்டாலும்,   மீண்டும் மீண்டும் காளிமுத்து வெள்ளந்தியாய் அவரிடமே கதை கேட்க வருகிறான் ! அப்படி சொல்லப்படும் கதைதான் 'சிரவணன்'   அக்கதையில் உள்ளது,   அவருடய வாழ்க்கையிலுள்ள ஒரு முடிச்சு.   அம்முடிச்சு இராமாயணத்தில் லக்குவன் மனைவி ஊர்மிளா வரை தொட்டுச்செல்வது என்று கி.ரா பின்னுரையில் விளக்குவது,   பல அடுக்குகள் கொண்ட இந்த கணமான கதையின் சிறப்பாம்சம்.   பணத்தைப் பற்றிக் கவலைப்படாத,   செல்வந்தரான கெங்கவனாயக்கர் தன் மனைவியை மட்டும் " என் பணப்பெட்டீ..." எனக் கூறுவது நம் கருத்தில் கூரியதாய்த் தைக்கும்  சொற்பிரயோகம்.


'அரைச்சண்டியர்' ல் வரும் சாவண்ணாவைப் படித்துத்தான் நகைச்சுவை நடிகர் வடிவேலு தன் 'பாணி'யை வகுத்துக் கொண்டாரோ என்ற எண்ணம் ஏற்படுவது சகஜம்தான்.   ஒவ்வொரு ஊரிலும் சாவண்ணாவைப் போன்ற வேடிக்கை மனிதர்கள் நிஜம்தான்.    சாவண்ணாவின் "வெண்ணே! சாராயம் சும்மா கொடுக்கிறவன் மாதிரிதான்"  என்பது போன்ற சவுடால்களையும்,   வாயிலே குத்து வாங்கிக்கொண்டு ரத்தம் கசியும் போதும் "அழிஞ்சிதடா    இன்னக்கி வெள்ளக்கரை ரோடு.   டேய் ...."   என்ற உதார்களையும் வெகுவாய் நம்மை ரசிக்கும்படி செய்து,   அதே மூச்சில்,   ஒன்னாம் வாய்ப்பாட்டை கேட்கும் தன் சிறுபையனுக்கு அதை வாங்கித்தர முடியாமல் அவன் அல்லாடுவது,  அவன்பால் பச்சாதாபம் கொள்ளச் செய்கிறது.


'சாகஸம்'   கதையில்,   அன்றைக்கு எப்படியாவது சோற்றை வடித்து சாப்பிட்டாகவேண்டும் என்ற உறுதியுடன் இருக்கிறான் அய்யங்கண்ணு.   இவன் அடுப்பு விற்று மக்கள் வாங்கின காலமெல்லாம் மலையேறிப் போக, ஒரு புது உத்தியை கைவசம் வைத்திருக்கிறான்.   அது தான் இந்த 'சர்க்கஸ்'.   மனைவி அசோதை,  இதைக் கேட்டு அரண்டே போய் விடுகிறாள்,    ஏனெனில் அவளும் இதில் பங்கு கொண்டாகவேண்டும்.  இருந்தாலும் என்ன செய்ய ?   அவனுக்கு அவள் வயிறார கடைசியாக எப்பொழுது வட்டிலில் சோற்றைப் போட்டு பசியாற்றிருக்கிறாள் என்பது நினைவுக்கு வரவில்லை.   அதன் பின்னர் நடப்பது தான் இந்த சாகஸம்.  நெடுநாட்களுக்கு இந்த கதையை மறக்க முடியாது.


'ராப்பாடிகள்' - செல்லம்மாள் புதிதாய் 'தொழிலுக்கு'  வந்தவள்.   நெடுஞ்சாலையோரத்தில், இரவு முழுக்க லாரி ஓட்டுனர்களிடம் வாடிக்கை.    'கஸ்டமர்களை'  திருப்தியும் படுத்த வேண்டும்,   அதை துரிதமாகவும்  செய்ய வேண்டும்.   இல்லையேல்,   பிடறியில் ரெண்டு போடுவதற்கு காளப்பாண்டி சிறிதும் தயக்கம் காட்டுவதில்லை.   வீட்டில் ரெண்டு நாட்களாக சின்னஞ்சிறுசுகளுக்கு வயிறு நிறைகிறது.    'விவரம்'    புரியாமல் செல்லம்மாளின் அம்மா,   இன்னொரு தங்கையையும் கூட்டிச் செல்ல சொல்கிறாள்.


இதைத்தவிர,   பாலகாண்டம்,   வடு,   நீதம்,   ஆதாரம்,   எருக்கலை என்று பல நேர்த்தியாய்ச் செதுக்கப்பட்ட கதைகள்.   (ஊமங்காடை,   நீதம்,   ஒட்டுப்படை,   முதிலித்தாய் போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தம்தான்  என்ன ?. நல்ல தமிழ் அகராதி நாவல் படிப்போருக்கு அவசியம். போலும் !   )


கரிசல் காட்டு மண்ணையும் மக்களையும் எழுத்தில் படம் பிடிப்பதற்கு,   கி.ரா தலைமுறைக்குப்   பின்  இலட்சுமணப்பெருமாள் போன்றோர் பிரகாசமான வரவு.    இவரிடம் இன்னும் அதிகமாய்,   வளமையாய் கரிசல் படைப்புகளை வரும் நாட்களில் தாராளமாய் எதிர்பார்க்கலாம்.   தேடிக் கண்டுபிடித்து   வாசிக்கப்பட வேண்டியவர்   இலட்சுமணப்பெருமாள்.

2 comments:

Unknown said...

சமீபத்தில் வம்சி பதிப்பகம் இவருடையக் கதைகளை தொகுப்பாக வெளியிட்டுள்ளார்கள். அதில் இந்தக் கதைகளெல்லாம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். சிற்சில காரணங்களால் வாசிப்பு தடைப்பட்டுள்ளது. நிதானமாக வாசிக்க வேண்டும்.

Anonymous said...

Buy Tamil Books Online @ http://www.myangadi.com/

Post a Comment