Wednesday, June 23, 2010

கடல்புரத்தில் - மாற்றத்தின் ஓயா அலைகள்

கடல்புரத்தில்  
ஆசிரியர்: வண்ணநிலவன்
பதிப்பகம்: கிழக்கு
பரிந்துரை: கரிகாலன்


பல நூற்றாண்டு காலங்களாக வல்லத்தில் (படகில்) ஏறி, கடலில் மீன் பிடித்து வாழ்ந்த  மணப்பாட்டு கிராமத்து மக்களின் வாழ்க்கையைப் பற்றிய நாவல். நாவலின் முக்கிய கதா பாத்திரங்கள் பிலோமிக் குட்டியும், அவள் குடும்பமும்.  பிலோமிக் குட்டியின் அப்பச்சி குருஸ், அண்ணன் செபஸ்தி, அம்மை மரியா, அவர்களது வாழ்க்கையை ஒட்டி எளிய கதையாக தோன்றும் இந்த நாவல் பல தளங்களில் மனத்தைக் கவரும் நாவல்.



ஒரு சிறு குடும்பப் பிரச்னையில் ஆரம்பிக்கறது நாவல்.  வாத்தியார் வேலைக்குப் படித்து பக்கத்து ஊரில் வேலை செய்யும் செபஸ்திக்கு ஒரு தொழில் தொடங்க முதலீடு தேவை.  அதற்காக அப்பச்சி குரூசிடம், வல்லத்தையும் வீட்டையும் விற்று விட்டுத் தன்னுடன் வரச் சொல்லி அடிபோடுகிறான்.  வர மறுக்கும் அப்பச்சியிடம் செபஸ்தி, கோபத்துடன் கேட்கிறான்,    "அப்பம், நீர் என்னை ஏன் படிக்க வச்சீர்?  ஒம்மப் போல மீன் பிடிக்க வல்லம் கட்டிக் கொண்டு கடலுக்கு போயிருப்பேனே.  ஏன் நீரு என்னையப் படிக்க வச்சிரு...",   என.   இது தான் கதையின் முதல் வரியும், நாவலின் சாரமும்.  தலைமுறை, தலைமுறையாய் கடலை நம்பி மீன் பிடித்து வாழ்ந்து வந்த வாழ்க்கை முறை, நவீன யுகத்தின் அதிவேக மாற்றங்களைச் சந்திக்கும் போது நிகழும் உரசல்களின் நிழலில் நிகழ்கிறது இந்த நாவல்.

வண்ணநிலவன், மணப்பாட்டுக் கிராமத்தவர்களுக்கும் கடலுக்கும் உள்ள ஆழமான உறவை நாவலின் போக்கில் இணைத்து, இயல்பாய்ச் சித்தரிக்கிறார்.  குரூசுக்குக் கடல் வெறும் தொழில் செய்யும், பணம் பண்ணும் இடம் இல்லை.  வியாபாரம் செய்ய விரும்பி, வல்லத்தை விற்கச் சொல்லும் தன மகனிடம் சொல்கிறான் குரூஸ்,   " பறையன், வெயபாரஞ் செய்யப் பொறந்தவன் இல்ல; வல்லம் வலிக்க பொறந்தவன்.  பறையன் கடல்ல பொறந்து கடல்ல தான் சாகனும்.... எனக்குப் பொறவு வல்லத்த என்னமுஞ் செய்யி..."   என்று.  இன்னொரு இடத்தில், பிலோமிக் குட்டி நினைவு கூறுகிறாள்:   "கடல்புரத்தில் எந்தக் குடும்பத்தில் குழந்தை பிறந்தாலும், முதலில் தன் அம்மையின் முலையை சப்புவது கிடையாது.  பூமியில் விழுந்ததும் வாயில் உவர்ப்பான கடல் தண்ணீரைத்தான் ஊற்றுகிறார்கள்... அநாதி காலம் தொட்டே அவர்களது வாழ்க்கை கடலுடனே பிண்ணிப் பிணைந்து கிடக்கிறது".    வண்ண நிலவன் இம்மக்களின் வாழ்க்கையின் எல்லா உணர்ச்சிகளையும், கடலுடனே இணைத்துச் சொல்லுகிறார்.  இம்மக்கள் சந்தோஷப்படும் போது கடல் ஆர்ப்பரிக்கிறது, ஆத்திரப்படும் போது கடல் இரைகிறது, வருந்தும் மனம் சாந்தியடைய விழையும் போது தன் எழுச்சி மிக்க அலைகளால் ஆசிர்வதிக்கிறது, என பல கடல் சார்ந்த உவமைகள்.  வண்ண நிலவனின் வசீகரமான எழுத்து, நெத்திலிக் கருவாட்டின் வாடையையும், உப்புக் காற்றின் ஸ்பரிசத்தையும், கடலின் ஓசையையும், கடல்புரத்து மக்களின் வாழ்க்கையையும் நம்மில் உணர்வு பூர்வமாக கலந்து விடச் செய்கின்றது. 

கடலை நம்பி வாழும் லௌகீக வாழ்க்கை மிகவும் சிரமமானது.  கடலின் சீற்றம் அதிகம் இருக்கும் நாட்களில் சாயபுமார்களிடம் கடன் பட்டுத் தான் அன்றைய பொழுதை கழிக்க வேண்டும்.  பட்ட கடனை அடைப்பதற்கு, கொண்டு வரும் மீன்களைப் பாதி விலையில் சாயபுமார்களுக்கு விற்க வேண்டும்.  இல்லையென்றால் அடுத்த முறை கடன் கேட்கும் போது கிடைக்காது என உழைப்புச் சுரண்டலை சுட்டிக் காட்டுகிறார்.  இந்த கடினமான வாழ்க்கையை இந்த மக்களால் எப்படி எதிர் கொள்ள முடிகிறது?  இந்த மக்களிடம் இருக்கும் பரஸ்பர அன்பும், ஸ்நேஹமும் தான்.   இதை வண்ண நிலவனின் வார்த்தைகளைக் கொண்டு தான் விளக்க முடியும். உதாரணமாக,   "பிலோமி ரஞ்சிக்குப் பிடித்தமான சூட்டில் காபி போட்டுக் கொடுத்தாள்.  ரஞ்சி அவள் அன்பில் நனைந்து போய் வார்த்தையாடாமல் வாங்கிக் குடித்தாள்.   பிலோமியின் கையைப் பிடித்து எழுந்த போது ரஞ்சிக்கு நெஞ்சே கீழே விழுந்து விட்ட மாதிரி இருந்தது.  அந்தக் கை எவ்வளவு நேசத்தை வாரிக் கொடுக்கிற கை.  இந்த ஸ்நேஹமெல்லாம் என்ன விலை பெரும்?  வீட்டுக்கு வெளியே ஆர்ப்பரிக்கிற கடலையே கை நீட்டிக் கொடுத்தால் கூட தகுதியானது தானா? ... மனுஷர்களுள் மிகவும் கொடியவர்கள் என்று சொல்கிறோமே அவர்களுக்கும் இது போல ஒரு ஸ்நேகிதம் அறிமுகமில்லாமலா இருக்க முடியும்? இதெல்லாம் எவ்வளவு பரந்தது, ஆழமானது; ... எவ்வளவு கொடுமையாக வாழ்க்கை வருத்தினாலும் இங்கே யாரும் சாகப் பிரியப்படவில்லை.  அதற்கு இந்த ஸ்நேகங்களும், பிரியங்களும் தான் காரணம்."  


அதே போல், பிலோமிக் குட்டி ரஞ்சியின் மீது கொண்ட அன்பும், அளவு கடந்தது.  பிலோமிக் குட்டி ரஞ்சியின் கணவனைப் பார்க்கும் போது :  "ரஞ்சியின் கணவனின் உடம்பு கரடு முரடானது... அவ்வளவு பெரிய உடம்பும் ரஞ்சியுடையது தான்",   என நினைத்து சந்தோஷப் படுகிறாள்.  தன் தோழியை, தோழியின் கணவனுடன் பகிர்ந்து கொள்வதாய் நினைக்கிறாள்.  எப்படிப்பட்ட அன்பு பாருங்கள்?  பிலோமிக் குட்டிக்கும் அவள்  தோழி ரஞ்சிக்கும்  இடையே இருக்கும் அன்பையும், ஸ்நேஹத்தையும் வண்ணநிலவன் விவரிக்கும் விதம் நம்மை அவர்கள் மீது பொறாமை கொள்ள வைக்கிறது.  தரகனாரிடம், தமயனிடம், அப்பச்சியிடம், ரஞ்சியிடம் என்று எல்லோரிடத்திலும் பிலோமிக் குட்டியின் வாழ்வில் இப்படிப்பட்ட நேசம் நிறைந்த உறவுகள்.     இப்படிப் பட்ட அன்பான உறவுகளின் சூழலில் வளர்ந்ததால் தானோ என்னவோ, பிலோமிக் குட்டியால், மற்றவரை எளிதில் மனச்சலனம் அடைய வைக்கும் பிரச்னைகளுக்கு கூட  பிறர் கண்களுக்கு புலப்படாத  தீர்வுகளை காணமுடிகிறது.  உதாரணமாக, தன் மனத்தைக் கவர்ந்த சாமிதாஸ், இன்னொரு பெண்ணை மணம் புரிய நேரும் போதும் கூட அவளால் சாமிதாசை மனமார மன்னிக்க முடிகிறது.   தன் அம்மையுடன் உறவு கொண்டிருந்த வாத்தியுடனும் கூட தன் தாயின் மறைவுக்குப் பிறகு அவளால் புதிய உறவை உருவாக்க முடிகிறது.  மென்மையான உறவுகள், தன் காதலன்/காதலி பிறரைத் திருமணம் செய்தவுடன் முடிய வேண்டும் என்று யார் சொன்னது?   


ஒரே வருடத்தில், பிலோமியின் வாழ்வில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன.  அம்மை இறந்து விடுகிறாள்.  அப்பச்சி மன நிலை பிறழ்ந்து குழந்தை போல ஆகி விடுகிறார்.  தான் மனமார விரும்பிய சாமிதாஸ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான்.  பரம்பரைச் சொத்தான வல்லத்தை கூட வேலை செய்த சிலுவை எடுத்துக் கொள்கிறான். அக்காவும், அண்ணனும் தத்தம் வாழ்க்கையை கவனிக்க வெளியூர் சென்று விடுகிறார்கள்.  தனியே நிற்கும் பிலோமிக் குட்டி, இந்த மாற்றங்களை தனக்கே உரிய முறையில் நேசம் நிறைந்த மனதுடன் எதிர் கொள்கிறாள்.   வண்ணநிலவனின் எழுத்து மனதை நெகிழ வைக்கிறது. 


நெகிழ்ச்சியான உணர்வுப் பூர்வமான தளத்திலேயே இந்த நாவல் முடிந்திருந்தால் ஒரு நல்ல நாவலாக மட்டுமே இருந்திருக்கும்.  வண்ண நிலவன், இந்த நாவலின் உட்கருத்தை இன்னொரு தளத்திற்கு கொண்டு செல்கிறார்.  இந்த நாவலின் மையப் போராட்டம், பறையர்களின் தொன்மையான மீன் பிடி வாழ்க்கை, நவீன யுகத்தின் மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பது தான்.  கடலில் வல்லம் கொண்டு, தங்கள் தேவைக்கேற்ப மீன் பிடித்து வாழ்ந்து வந்த பறையர் மத்தியில், ஒரு சிலர் மட்டும் நவீன லாஞ்சிகள் வாங்கி விட்டார்கள்.   வல்லங்கள், கிழிந்து தைக்கப்பட்ட பாய்களுடனும், அடைக்கப்பட்ட ஒட்டைகளுடனும், மனிதனின் உடல் வலுவின் எல்லைக்குட்பட்டு, கடலம்மையின் தயவில்  மிதந்து சென்று வந்து கொண்டிருந்தன.  லாஞ்சிகள், எந்த அலையையும் எதிர் கொண்டு, யந்திரத்தின் உதவியால், கடலில் நெடுந்தூரம் சென்று, மீன்களை அள்ளிக் கொண்டு வரும் சக்தி வாய்ந்தவை.  லாஞ்சிகள் வந்தவுடனே பறையர்களிடம் பெரும் வேறுபாடு வந்து விடுகிறது. காரணம்,   "வல்லத்துக்காரர்களுக்கும் மீன்கள் கிடைக்கின்றன.  ஆனால் மிகக் குறைவாக.  லாஞ்சிகள் நிறைமாத கர்ப்பிணி போல மடி நிறைந்து கரைக்கு வருகின்றன."   லாஞ்சிகள் வாங்குவதற்கு, சாயபுகளிடம் வாங்கிய கடனை அடைப்பதற்கு, குறைந்த விலையில் மீன்களை தரகர்களிடம் விற்க வேண்டி உள்ளது. அதே விலைக்கு குறைந்த அளவு மீன் பிடிக்கும் வல்லத்துக் காரர்களும் விற்க வேண்டி உள்ளது.  இந்தச் சுரண்டலில் லாபம் அடைவது மீனவர்கள் அல்ல.  லாஞ்சி இல்லாதவர்களுக்கு லாஞ்சி வாங்க ஆசை.  லாஞ்சி உள்ளவர்கள் மேல் பொறாமை.  இந்தப் போராட்டம், அந்த சமுதாயத்தையே பிளக்கிறது.  அந்தச் சச்சரவு, உச்சத்துக்குப் போகும் போது, அந்த ஊரில், அனைவராலும் மதிக்கப்படும் பவுளுத் தத்தா சொல்லுகிறார்:   "லே.. மக்கா, இந்தப் பறையக்குடியல அழிக்யதுக்காவத்தான் இந்த லாஞ்சிகல வாங்கியிருக்கீயோ.  பறையனுக்கு ஆச கூடாதுலே.  ஆச கொண்ட பறையன் உருப்பட மாட்டான்"  .   நவீன யுகத்தின் உருவகம் லாஞ்சிகள்.  பிரச்னை லாஞ்சிகளிடம் இல்லை.  அந்த லாஞ்சிகள் பறையர்களின் மனதில் உண்டு பண்ணும் ஆசையினால் தான்.  அந்த ஆசை தான், லாஞ்சிகள் வந்தவுடன், கடலை அம்மையாகப் பாவித்து வந்த சமூகம் கொண்டாடும் பண்டிகை தினத்தன்றும் லாஞ்சியை எடுத்துக் கொண்டு கடலுக்கு போகச் சொல்கிறது.  ஒவ்வொரு வருடமும் இன்னும் தொலைதூரம் கடலில் சென்று கடலின் செல்வத்தை அள்ளிக் கொண்டு வரச் செய்கிறது.  அந்தப் போராட்டம் இன்று வரை, நம் கண் முன்னால் இன்றும் தொடர்கிறது. கடல்வாழ் உயிரினங்கள், மனிதர்களின் பேராசையால், அறியாமையால், சப்தமின்றி அழிந்து கொண்டு இருக்கின்றன. 

ஒரு காலத்தில் கடலில் மீன்கள் எங்கும் நிரம்பி வழிந்தன.  இதைப் பற்றி, Callum Roberts, என்ற எழுத்தாளர் அண்மையில் எழுதிய, "The unnatural history of the sea" என்ற புத்தகத்தில், பான்னிங் என்ற கப்பல் தலைவன், எதிர்பாராத விதமாக பசிபிக் பெருங்கடலில் ஒரு தீவுத் தொடரை கண்டுபிடித்த போது வருமாறு எழுதியதாகக் குறிப்பிடுகிறார்:   "என் கூட வந்தவர்கள் தீவின் கரையில் இறங்கி தேங்காய்களைப்  பொருக்கி கொண்டு இருந்தபோது,  நான் அமர்ந்திருந்த படகைச் சுற்றி அடர்த்தியான மீன்கள்.  என் ஈட்டியை என் கையை விட்டு எடுக்காமலே ஈட்டியால் குத்தி ஒரு இரண்டு கிலோ மீன்களை எளிதாகப் பிடித்தேன்".  அப்படியானால் எவ்வளவு மீன் இருந்திருக்கும்? எண்ணிப் பாருங்கள்?  இன்றைய நிலை என்ன?   
உலகில் உள்ள 17 இயற்கையான பெருங்கடல் மீன் பிறப்பிடங்களில் (fisheries), 15 முற்றிலும்   சூறையாடப்பட்ட சூழலில் உள்ளன.    


வண்ணநிலவன் மணப்பாட்டு கிராமத்து மக்களை மனதில் கொண்டு எழுதிய  வார்த்தைகள், ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு பிறகு, உலகம் உணர்ந்து கொண்டிருக்கும் கடல் சூரையாட்டதின் வரவைக் கோடி காட்டின.    "Empty Oceans, Empty Nets", என்ற படத்தின் சிறு தொகுதியைப் பாருங்கள்.   உங்கள் கண் முன், மணப்பாட்டின் கடலோரத்தில், குரூசும், ஐசக்கும் போட்ட சண்டை  30 வருடங்களுக்கு பின்னும் அட்சர சுத்தமாய் எதிரொலிக்கிறது.  


நாவலின் முடிவில், நாவலை எங்கே குடும்பத்தில் இரண்டு தலைமுறைக்குள் நடக்கும் சச்சரவாய் ஆரம்பித்தாரோ அந்த அடிப்படை சச்சரவு அந்த சமூகத்திற்கே பொருந்தக் கூடிய சச்சரவு என  உணர்த்தும் வகையில் முடிக்கிறார்.  ஊர்ப் பெரியவர், பவுளுப் பாட்டா, இப்படி நொந்து கொள்கிறார்:    "இந்த லாஞ்சிகள் அவர்களை வாழ்விக்க கடலை சுற்றி வருகிறதா, இல்லை நசிக்கச் செய்ய உறுமிக் கொண்டு அலைகிறதா என்று யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை"  , என.  இதை ஒரு படி மேலே கொண்டு செல்லும் போது, உலகளவில் நாம் அனைவரும் கடல்புரத்தில் தான் வாழ்ந்து வருகிறோம் என எண்ணத் தோன்றுகிறது.  இப்போதும் கூட, நாமும்  நம்மைச் சுற்றித் துரிதமாய் மாறி வரும் நவீன உலகத்தை எப்படி சரியான முறையில் எதிர் கொள்வது என்று தெரியாமல் தடுமாறுகிறோம்.  ஒரு புறம், நவீன யுகத்தின் வசதிகள் நம்மை ஈர்க்கின்றன, மறு புறம் அந்த வசதிகளை அடைய நாம் பல விஷயங்களை, தொன்மையான வழிமுறைகளை மிக வேகமாக இழக்க வேண்டியுள்ளது.  அடைந்தது பெரிதா, இழந்தது பெரிதா என்று தெரியாமல் நாம் தடுமாறிக் கொண்டே இருக்கிறோம்.  நவீன யுகத்தின் வசதிகளை அடைந்தவர்களுக்கும், அடைய வாய்ப்பில்லாமல் வெளியிருந்து பார்ப்பவர்களுக்கும் உள்ள இடைவெளி பெருகப் பெருக, சமுதாய அளவில் உரசல்கள் ஏற்படுகின்றன.   இந்த தடுமாற்றங்களையும், உரசல்களையும் எதிர் கொள்ள அன்பார்ந்த மனநிலை கொண்ட நோக்கு தேவை என்பதை பிலோமிக் குட்டியும், பவுளுப் பாட்டாவும் உணர்த்துகிறார்கள். 


இந்தச் சின்னஞ்சிறு நாவலில் (127 பக்கங்களில்) வண்ண நிலவன் பல தளங்களைத் தொட்டுச் செல்கிறார்.  இந்த நாவலைப் பற்றி இன்னும் நிறைய விஷயங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். நெகிழ்ச்சியான எழுத்துக்கள் நிரம்பி இருந்தாலும், உணர்ச்சிகளை மட்டும் தூண்டும் எழுத்தல்ல இது.  உங்கள் தர்க்கத்தையும், சிந்தனையையும் கோரும் நாவல்.  படித்து முடித்த பின்னர் நீண்ட காலம் மனதில் நிற்கும் நாவல்.  பல் வேறு வாசிப்புகளுக்கு இடமளிக்கும் நாவல்.  தமிழில் எழுதப் பட்ட நல்ல நாவல்களின் வரிசையில், 'கடல்புரத்தில்' நாவலுக்கு ஒரு இடம் நிச்சயம் உண்டு.   ஏறத்தாழ முப்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய நாவல்அதன் பொலிவு மாறாமல் இன்றும் இருப்பது, வண்ண நிலவனின் எழுத்தின் அழியாத்தன்மையை உணர்த்துகிறது. 

5 comments:

ராம்ஜி_யாஹூ said...

Thanks for sharing.

This is appreciated by all readers.

Jegadeesh Kumar said...

கடல் புரத்தில் வாங்கிவந்திருக்கிறேன். இன்னும் படிக்கவில்லை. ஆழமும் வ்ரிவும் கொண்ட மதிப்புரை உங்களுடையது.
உங்களைப் போலவே நானும் ஆழமாக வாசிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும்.

Raja M said...

ராம்ஜி, ஜெகதீஷ்:


உங்களது ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கு நன்றி. ஜெகதீஷ், நான் உங்களுடைய எழுத்தை ரசித்து படித்து வருகிறேன். உங்களுடைய குள்ளச் சித்தன் சரித்திரம் பரிந்துரையும், சண்முகத்தின் பரிந்துரையையும் படித்ததில் அடுத்து அதை படிக்க ஆவலாய் உள்ளேன்.

Anonymous said...

வண்ணநிலவனின் சிறுகதைகள் சில இதழ்களில் படித்திருக்கிறேன். நாவல்கள் படித்ததில்லை. தங்களின் பதிவு நாவலைப் படிக்கத் தூண்டுவதாக உள்ளது. எளிய அருமையான நடையில் தங்களை முன்னிறுத்தாமல் எழுத்தாளரை முன் நிறுத்தி எழுதியுள்ளீர்கள். எளிய அன்பில் முகிழ்க்கும் உறவுகளே நவீனச்சிக்கல்களுக்கான தீர்வு என நாவல் வழி அருமையாக எழுதியுள்ள தங்களுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Anonymous said...

buy this book @ http://www.myangadi.com/kadalpurathil-kizhaku-pathipagam

Post a Comment