Wednesday, June 30, 2010

கண்ணீரும் புன்னகையும் – சந்திரபாபுவின் வாழ்வு


கண்ணீரும் புன்னகையும்
ஆசிரியர்:  முகில்
பதிப்பகம்:  கிழக்கு
பரிந்துரை:  ஜெகதீஷ் குமார்



சந்திரபாபு என்கிற மகா ஆளுமையின் தாக்கம் முப்பது வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஏற்பட்டிருப்பதென்பது இன்றியமையாததொரு நிகழ்வாகும். என் பதின்பருவத்தில் சந்திரபாபுவின் தத்துவப் பாடல்களை எனக்கு முந்தைய தலைமுறையினர் கொண்டாடிக் கொண்டிருந்ததைக் கண்டிருக்கிறேன். நகைச்சுவை நடிகர் என்ற பிம்பத்தையும் தாண்டி ஒரு தலைமுறைத் தமிழர்களின் பிரியத்துக்குரியவராகவும், பலரின் ஆற்றாமைகளையும், சோகங்களையும் பிரதிநிதித்துவப் படுத்துபவராகவும் இருந்திருக்கிறார் பாபு.
கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘கண்ணீரும் புன்னகையும்’ என்ற புத்தகத்தை சமீபத்தில் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எதற்காகவும், யாருக்காகவும் தன் தனித்துவத்தை விட்டுக் கொடுக்காது வாழ்ந்த ஒரு கலைஞனின் வாழ்வில்
அவனைத் தொடர்ந்த சோதனைகளும், துயரங்களும் எளிமையான மொழியில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு நேர்மையான கலைஞனை எப்படித் தேவை தீர்ந்ததும் வீசி எரியப்பட்டுவிடுகிற எச்சில் இலையைப் போல, திரையுலகம் அவரை பயன்படுத்திவிட்டுத் தூக்கி எரிந்துவிட்டது என்பதற்குச் சான்றான நிகழ்வுகள் அதன் பக்கங்களில் விரிகின்றன. கோடிக்கணக்கான ரசிகர்களை வசியப்படுத்தி வைத்திருக்கும், அவர்களது வாழ்வின் போக்கை நிர்ணயம் செய்யும் வல்லமை கொண்ட கதாநாயகர்களின்  முகப்பூச்சுக்குப் பின்னே மறைந்திருக்கும் கோரமுகங்கள், அவர்கள் கடைவாயில் வழியும் ரத்தம் காணப்படுமாறு உரித்துக் காட்டப்பட்டுள்ளன. காமிரா முன் தவிர வேறெங்கும் நடிக்கத் தெரியாத, பிறருக்குத் தொந்தரவில்லாமல் தன் இச்சைப்படி வாழ நினைக்கும் ஒரு நேர்மையான மனிதனைச் சமூகம் எவ்வாறு புறந்தள்ளி விடுகிறது என்பதற்கு பாபுவின் வாழ்க்கை ஒரு உதாரணம்.

மிகுந்த வறுமையில்தான் துவங்கியிருக்கிறது அவரது வாழ்க்கை. கொலைப் பட்டினியிலும் தன் தனித்துவத்தை இழக்காத மனிதர் அவர். தான் நடித்த காலத்தில் கதாநாயகனுக்கு ஈடாக ஊதியம் பெற்ற ஒரே நகைச்சுவை நடிகர் அவர். செல்லுமிடமெங்கும் ரசிகர் கூட்டம் அவர் பாடல்களைக் கேட்டு ஆரவாரித்திருக்கிறது. முதன்முதலாக ஒரு நகைச்சுவை நடிகரின் பாடல்கள் தொகுப்பாக வெளியிடப்பட்டது சந்திரபாபுவுக்குத்தான். திரைத்துறையில் குறுகிய காலத்தில் புகழின் உச்சியை அடைந்த போதிலும் அவரது சொந்த வாழ்க்கையில் துரோகங்களும், ஏமாற்றங்களும், சோகங்களுமே சூழ்ந்துகொண்டிருந்தன. கட்டிய மனைவி ஏற்கனவே ஒருவனைக் காதலித்திருந்தது தெரியவந்ததும் அவளை அவனிடமே அனுப்பி வைக்கிற ஆண்மை மிகுந்தவராக இருந்திருக்கிறார். பாபுவின் வாழ்வின் நிகழ்ந்த இந்த சோகத்தைத்தான் பின்னாளில் பாக்யராஜ் அந்த ஏழு நாட்கள் என்ற பெயரில் திரைப்படமாக எடுத்திருக்கிறார். மனைவியைப் பிரிந்தபிறகே அவரது குடிப்பழக்கம் அதிகமாகி, அதற்கு அவர் அடிமையாகி அவரது முடிவுக்கே வழிவகுக்கிறது.
       
ஒரு திரைப்படத்தில் உறங்கிக் கொண்டிருக்கும்  சந்திரபாபுவின் முகத்தில் எலிகள் ஏறிவிளையாடும்போது அவர் படும் பாட்டை கண்டு விழுந்து விழுந்து சிரித்ததும், இப்படியும் நடிக்க முடியுமா என்று பிரமித்துப் போய் நின்றதும் இன்னும் நினைவிருக்கிறது. Slapstic வகைக் காமெடிக்கு முதலும் கடைசியுமான ஒரே தமிழ் நடிகர் சந்திரபாபு என்றே சொல்லலாம். அடுத்ததாக நாகேஷ் கொஞ்சம் கிட்டத்தில் வருகிறார். பாபுவின் உரையாடல் வெளிப்பாடு ரசிக்கத்தக்கது. அவரது எல்லாப் படங்களையும் நான் பார்த்ததில்லையென்றாலும் அவரது ஆளுமையின் தாக்கத்திற்குள்ளாவதற்கு அவர் வந்துபோகும் சில காட்சிகளும், மெய்யாலுமே காலத்தால் அழியாத அவரது பாடல்களுமே போதும்.

சந்திரபாபு மது அருந்துகிற அழகை இந்தப் புத்தகத்தில் வர்ணித்திருப்பதைப் படித்தாலே நமக்கும் ஆசை வந்துவிடும். சுத்தமாகக் குளித்து முடித்துவிட்டு, தூய்மையான பூப்போட்ட லுங்கி அணிந்துகொண்டு, வெள்ளை முழுக்கை சட்டையை அணிந்து பட்டன்களைத் திறந்துவிட்டபடி கைகளைச் சுருட்டிவிட்டுக்கொண்டு, ஒரு கையில் சிகரெட்டும், இன்னொரு கையில் மதுகோப்பையையும் வைத்துக் கொண்டு, சோஃபாவில் சம்மணமிட்டு அமர்ந்தபடி நிதானமாக அனுபவித்து மது அருந்துவாராம். பின்னாளில் போதைக்கு அடிமையாகிவிட்ட நடிகை சாவித்திரியும், எழுத்தாளர் ஜெயகாந்தனும் இவருக்கு ‘தண்ணி பார்ட்னர்’களாக இருந்திருக்கிறார்கள். (சந்திரபாபுவுடனான தனது நட்பு பற்றி ஓர் இலக்கியவாதியின் சினிமா அனுபவங்களில் ஜெயகாந்தன் எழுதியிருக்கிறார்). எல்லாரையும் மிஸ்டர் போட்டு அழைக்கும் பழக்கம் இருந்திருக்கிறது சந்திரபாபுவுக்கு. மிஸ்டர் எம்.ஜி.ஆர், மிஸ்டர் சிவாஜி என்றுதான் கூப்பிடுவாராம். மனதில் தோன்றுவதை வெளிப்படையாகப் பேசுவதோ, செய்துவிடுவதோ சந்திரபாபுவின் பண்புகளில் ஒன்று. ஒருமுறை அவரது கலைநிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அந்நாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் ரசிக்கும் திறமையைக் கண்டு, துள்ளிக் குதித்து அவர் மடியிலமர்ந்து அவர் தாடையைப் பிடித்துக் கொஞ்சி ‘ரசிகன்டா நீ!’ என்று பாராட்டினாராம்.

எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி ஆகிய மூன்று திரை ஆளுமைகளையும் தனது பேட்டி ஒன்றின் வழியாக பகைத்துக் கொண்டதன் மூலம் திரையுலகில் அவர்களால் ஒதுக்கப்படுகிறார். எம்ஜிஆர் மருத்துவமனை கட்டுவது  பற்றிய கேள்விக்கு அவர் பேசாமல் நடிப்பதை நிறுத்திவிட்டு மருத்துவமனைக்குக் கம்பவுண்டராகப் போகலாம் என்கிறார். சொந்தமாகத் திரைப்படம் தயாரிக்கும் உந்துதலேற்பட்டு அதற்கு எம்ஜிஆரின் கால்ஷீட்டும் வாங்கியபின் தன்னை மதிக்காத சந்திரபாபுவைப் பழிவாங்குவதற்காக எம்ஜிஆர் படப்பிடிப்புக்கு வராமல் தவிர்த்து, படமே நின்று போகிறது. பொருளாதார ரீதியில் மரணஅடி விழுந்து அதற்கப்புறம் எழுந்திருக்கவே முடிவதில்லை சந்திரபாவுக்கு.

அவரது குரலுக்கும், ஆளுமைக்கும் மயங்கியவர்களும், என்போன்று அவர் பற்றிய கேள்வி ஞானத்தால் அவர் மீது பிரமை கொண்டவர்களும், இப்படி ஒரு நபர் உண்மையில் வாழ்ந்து மறைந்திருக்கிறாரா என்று அறிய நினைக்கிறவர்களும் கண்டிப்பாக வாங்கி வாசிக்க வேண்டிய புத்தகம் இது. 

6 comments:

Raja M said...

நல்ல பரிந்துரை. தமிழில் சிவாஜி, எம்.ஜி.ஆர் போன்ற ஆளுமைகளைப் பற்றிய உண்மையான வரலாற்றுக் குறிப்புகள் அதிகம் இருப்பதாகத் தெரியவில்லை. பெரும்பாலும் துதி பாடும் (hagiography) அல்லது வசை பாடும் வகையறாவைச் சேர்ந்த புத்தகங்களே இருப்பது துரதிர்ஷ்டம்.

சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு, மற்றும் ஜெயகாந்தனின் குறிப்புகள், போன்ற புத்தகங்கள், அவர்கள் சமகாலத்தில் வாழ்ந்த இத்தகைய ஆளுமைகளின் முழு பரிணாமத்தையும் புரிந்து கொள்ள மிகவும் உதவும். சந்தர்ப்பம் கிடைக்கும் போது அவசியம் படிக்க வேண்டும். பகிர்வுக்கு நன்றி.

Jegadeesh Kumar said...

மிக்க நன்றி திரு. கரிகாலன்.

clayhorse said...

ஜெயகாந்தனின் 'ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்' அற்புதமான பதிவு. அதில் சந்திரபாபுவுடனான நட்பை அழகாக சொல்லியிருப்பார். திரையின் வில்லன்களும் காமேடியன்களும்தான் நிஜத்தில் கதாநாயகர்களாக இருந்திருக்கிறார்கள். கண்ணதாசனின் 'வனவாசம்' ஒரு மாதிரி கிசு கிசு பாணியில் அமைந்திருப்பதால், பழைய அரசியல் கதைகள் தெரியாதவர்களுக்குப் புரிவது கடினம். தெரிந்திருந்தால் மிக சுவாரஸ்யமான புத்தகம் அது. தமிழ்நாட்டின் அரசியல் சீர் கெட்ட வரலாறு அதில் பதிந்திருக்கிறது. -- பாஸ்கி

முகில் said...

என்னுடைய புத்தகத்துக்கான தங்களுடைய அழகான விமரிசனத்துக்கு நன்றி

- முகில்

Unknown said...

எஸ்.எஸ்.ராஜேந்திரன் கதாநாயகனாக பல படங்களில் நடித்துக்கொண்டிருந்த நேரம்.(இந்த 3 தலைங்களும் அப்போ (அவ்வளவா)இல்ல.)திரையுலகில் பெரியாரின் சீடர்கள் இருவர்.ஒன்னு.எஸ்.எஸ்.ஆர்.2 .எம்.ஆர்.ராதா.கதாநாயகர் சம்பளம்,முப்பது,நாப்பதாயிரம்தான்.ஒரு படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க சந்திரபாபு ஒரு லட்ச ரூபா கேட்டது கோடம்பாக்கத்தில் பெரிய பேச்சாக இருந்தது.நல்ல மனிதர்.எல்லாமா சேந்து ஒரு வழி பண்ணிட்டாங்க.கோ.பா.க்கத்தில் இதெல்லாம் சாதாரணமப்பா.

Anonymous said...

Buy Tamil Books Online @ http://www.myangadi.com/

Post a Comment