பண்டைய இந்தியா : பண்பாடும் நாகரிகமும் ஆசிரியர்: டி.டி.கோசாம்பி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
தமிழாக்கம்: ஆர். எஸ். நாராயணன் (எஸ்.ஆர்.என். சத்யா)
பரிந்துரை: சண்முகம் / கரிகாலன்
பாகம் 5
நிலப்பிரபுத்துவத்தின் வாசலில்
மகதப் பேரரசு ஒரு சில நூற்றாண்டுகளிலேயே மிக விரைவாக எழுந்தது. அசோகரின் காலத்தில் அதன் உச்சத்தை அடைந்தது. மகதப் பேரரசு பின் பற்றிய அரசியல் கொள்கைகள் ஆட்சி நீடித்து நிலைப்பதற்கான வழியை வகுத்தது. அசோகரின் ஆட்சியில் உச்சத்தில் இருந்த மகதப் பேரரசு, அடுத்த பதினைந்து நூற்றாண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக சீரழிந்தது. அந்தச் சீரழிவின் முடிவில் இந்தியாவில் நிலப் பிரபுத்துவத்தின் விதைகள் விதைக்கப்பட்டு முளை விடத் துவங்கின என்கிறார் கோசாம்பி. கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இருந்து, கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரையான வரலாற்றின் சாரத்தை இந்தப் பகுதியில் பார்ப்போம். இந்த காலகட்டத்தில் நிகழ்ந்த மாறுதல்கள் தற்கால இந்தியாவில் காணலாம். குறிப்பாக முன்று விஷயங்களைக் குறிப்பிடுகிறார் கோசாம்பி. அவை: 1 இந்தியாவை கட்டமைத்ததில் சமயத்தின் பங்கு; 2 . நிலப்பிரபுத்துவத்தின் தொடக்கம்; 3. பக்தியும் விசுவாசமும். இவற்றை விரிவாகக் காண்போம்:
1 . இந்தியாவைக் கட்டமைத்ததில் புரோகிதத்தின் பங்கு
இக்காலத்தில் புத்த மதத்தின் வளர்ச்சி, பலிகளையும், சடங்குகளையும் போற்றி வளர்த்து வந்த பழைய பிராமண வாழ்க்கை முறையை முற்றிலும் வலுவிழக்க வைத்து விட்டது. இருப்பினும், பழங்குடிகளின் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்த, பிறப்பு, இறப்பு, அறுவடை, திருமணம் போன்ற நிகழ்சிகளில் சடங்குகளுக்கு முக்கியத்துவம் இருந்தது. சடங்குகளை வெறுத்த பெளத்தர்களோ, ஆசிவர்களோ இந்த வேலைகளை செய்ய முனையவில்லை. இந்த வேலைகளை சடங்குகளில் மிகவும் பரிச்சயம் இருந்த புரோகிதர்கள் ஆர்வத்துடன் எடுத்து நடத்த ஆரம்பித்தனர்.