Monday, June 20, 2011

பண்டைய இந்தியாவில் புரட்சியும், எதிர்ப்புரட்சியும் : அம்பேத்கர் - பாகம் 1




பண்டைய இந்தியாவில் புரட்சியும், எதிர்ப்புரட்சியும்
ஆசிரியர்: பாபாசாகேப் அம்பேத்கர் - பாகம் 1
பரிந்துரை: சண்முகம்


ஆரியர்களின் வரவு - ஆரிய சமூகம் - யாகபலிகள் - புத்தர் வருகை - மனுஸ்மிருதி - சதுர்வர்ண முறை - சாதிச்சமூகம் - சாதியும் தேசமும் - இந்தியாவில் விஞ்ஞானம் - படிப்படியான சமத்துவமின்மை - பௌத்தத்தின் வீழ்ச்சியும் நலிவும் - இந்து சமய இலக்கியங்கள் - பகவத்கீதை - பெண்களின் நிலை


 அம்பேத்கர் பல கால கட்டங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகை நூல் இது. இந்திய அரசியல் சாசனத்தை வடித்தவராகிய அம்பேத்கர் ஒரு வரலாற்று ஆய்வாளரும் கூட. பண்டைய இந்தியா குறித்த அவரது ஆய்வுகளும் கருத்துக்களும் இந்திய சமூக வரலாற்றைத தெரிந்து கொள்ள விரும்பும் எவருக்கும் இன்றியமையாதது.

பண்டைய இந்திய சமூகத்தில் நடந்தவற்றை நமக்குத தெரியப்படுத்துவதில் முக்கிய ஆவணமாய் இருப்பது மனுஸ்மிருதி. இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலும் பழமையானது. இந்த ஸ்மிருதிகளையும் பண்டைய இந்து மற்றும் பௌத்த சமய, இலக்கிய ஆக்கங்களையும் ஆவணங்களாக தன ஆய்வுக்குப பயன்படுத்தி தன கருத்துக்களை முன்வைக்கிறார் அம்பேத்கர்.


முதலில், அம்பேத்கரின் ஆரியர்களின் வரவு குறித்த நிலைப்பாடு, என்னை சற்றே அயர வைத்தது: 'ஆரியர்கள் இந்தியாவுக்கு வெளியிலிருந்து வந்து இந்நாட்டுக்குடிகளைத் தாக்கினர் என்பதற்கு ஆதாரம் இல்லை. ஆரியர்களுக்கு இந்தியா தாய்நாடு என்பதற்கே நிறைய சான்றுகள் இருக்கின்றன' என்கிறார். மேலும் ஆரியர்கள் போர்த்தொழில் கொண்ட மக்கள் என்று கருதுவது கடினமானது. எண்ணற்ற வேள்விகளைச் செய்து சன்மானங்களைப் பெற்று, புரோகிதத்தையே பிரதானத் தொழிலாகக் கொண்ட ஆரியர்கள் போராளிகள் அல்ல, விஷேசமான தொழிலாளிகள் !

இத்தகைய உரமற்ற மக்கள் சூத்திரர்களை வென்றிருக்க முடியாது. சொல்லப்போனால் அவர்கள் சூத்திரர்களை வெல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால் சூத்திரர்களும் ஆரியர்களே. அதாவது ஆரிய வாழ்க்கை நெறிகளில் நம்பிக்கைகொண்டு ஆரியர் வழிநடந்தவர்கள் தாம் சூத்திரர்கள். பின்னாளில் கௌடில்யரின் அர்த்தசாஸ்த்திரத்தில் சூத்திரர் ஆரியரே என்று அழைக்கப்பட்டனர்.

யாகம் அல்லது வேள்வி அல்லது பலி என்பது ஆரிய மதத்தின் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தது. பலன் எதிர்பாராத காணிக்கையை பிராமணீய இந்தியா அறியாது. பலியிடும் சடங்கு அச்சமும் மதிப்பும் தரும் முறையில் நடத்தப்பட்டது. ஒவ்வொரு சொல்லின் உச்சரிப்பும் அழுத்தமும் மிக முக்கியமானதாயிருந்தது. பலிகளுக்கு ஐந்து விலங்குகள் தெரிவு செய்யப்பட்டிருந்தன. அதில் முதலிடம் மனிதனுக்கு, ஆனால் மிகுந்த செலவு செய்தற்குரியது. அடுத்து குதிரை. இதற்கும் அதிக செலவாகும். விவசாயத்திற்கு பயன்பட்ட பசுக்களும் காளைகளும் தான், மிக அதிக அளவு பலி தரப்பட்டவை.

பௌத்த இலக்கியத்தின் வாயிலாக கசாப்புக்காரர்களாகச செயல்பட்ட அந்தணர் பற்றி அறிய முடிகிறது. கோசலநாட்டு மன்னன் பசேனதி கொடுத்த பலியில் 500 எருது 500 காளை, 500 பசுக்கள் 500 செம்மறி ஆட்டுக்குட்டி ஆகியவை பலியிடுவதற்காக கம்பங்களில் கட்டப்பட்டிருந்தன. அந்தணர் இட்ட கட்டளையை கண்ணில் நீர் ததும்ப அரசனின் ஏவலாட்கள் நிறைவேற்றினார்களாம். பலிக்குப பிறகு வறுத்த இறைச்சியை உண்டு, மது அருந்துவதும் நடைபெற்றது. பின்னர் சூதாட்டமும், திறந்த வெளியில் உடலுறவும் என்று ஒழுக்கக்கேடாகவும் மாறியது.

புத்தர் பிறந்த போது இருந்த சமுதாயச் சூழ்நிலை இதுவே. இந்தச சமுதாயச் சீர்கேட்டை எதிர்த்துத் தான் புத்தர் போராடினார். உலகின் எல்லா உயிர்களின் மீதும் அஹிம்சையைப போதித்து, வேத வேள்விகளையும் பலிகளையும் கண்டித்து, சூத்திரர்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை வழங்கி ( அதுவும் இவையனைத்தையும் கடவுளின் தேவையின்றி ! ) , சதுர்வர்ண நடைமுறைக்கு எதிர்ப்புரட்ச்சியாய் எழுந்ததுதான் பௌத்தம். இந்திய சமூக சீர்திருத்த வரலாற்றில் முதன்மையானவரும் மிக உயர்ந்தவருமானவர் புத்தரே என்கிறார் அம்பேத்கர்.

இந்தப் பின்புலத்தில் மனுஸ்மிருத்திக்கு வருவோம்.

மனுஸ்மிருதி பிரம்மா மனுவுக்கு வெளிப்படுத்தியதாகவும், மனு அதை மனிதர்களுக்கு வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்து சமூகத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றங்களைக் காட்டும் ஆவணமாக இருக்கிறது. மனுஸ்மிருதியில் அதை இயற்றியவர் பெயர் இல்லை. ஆனால் நாரத ஸ்மிருதியில், மனுஸ்மிருதியை இயற்றியவர் சுமதி பார்க்கவா என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மனுஸ்மிருதி என்ற சட்டத்தொகுப்பு கி.மு 170 -ல் எழுதப் பட்டிருக்கலாம்.

மனுஸ்மிருதி ஏன் தோன்றியது ? சுருக்கமாய், ஆரிய வைதீக மரபின் ஆதிக்கத்தை எதிர்த்த பௌத்தம், சமூகத்தின் மீது செலுத்திய ஆதிக்கத்தை தகர்த்தெறியத் தோன்றியதே மனுஸ்மிருதி. சதுர் வர்ணத்தை எதிர்த்த மௌரியர்களின் புத்தமத அரசுக்கு எதிரான பிராமணீயப் புரட்சியின் விளைவே மனுஸ்மிருதி, இது பிராமணீய அரசனான புஷ்யமித்திரன் சட்டமாகப பிரகடனப் படுத்தியிருக்கலாம்.


சதுர்வர்ண மற்றும் சாதி அமைப்பின் தோற்றத்தைப பற்றி அம்பேத்கர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

இந்துக்கள், தங்களுடைய ஆரிய முன்னோர்கள் உருவாக்கிய சதுர்வர்ண முறையைத தனித்தன்மை வாய்ந்த ஒன்றாகக் கருதுகிறார்கள். ஆனால் பண்டைய உலகம் முழுதிலும் இந்த முறை இருந்திருக்கிறது பண்டைக்கால எகிப்த்தியர்கள், பாரசீகர்கள் ஆகியோரிடையே இந்த முறை வழங்கி வந்திருக்கிறது. பிளாட்டோ, சதுர்வர்ண முறையை சிறந்த சமூக இலட்சிய அமைப்பாகக் கருதினார். ( இலட்சிய அமைப்பு என்றால், ஒரு தேசம் போல உயர்ந்த நோக்குடைய, அனைவருக்கும் பயனளிக்கும் அமைப்பு எனலாம். )

பண்டைக்கால வருண முறை நெளிவு சுழிவு கொண்டதாகவும் திறந்த அமைப்பாகவும் இருந்தது. வருணங்கள் நான்கு என்று இருந்த போதிலும், வருணங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் வலுவான பந்தங்களான கலப்பு மணமும், கலந்து உண்ணுதல் ஆகிய இரண்டு நல்ல அம்சங்கள் முழு அளவில் செயல்பட்டு வந்தன. மேலும் வருண முறை, சமூகத்தின் குறிக்கோளாக, ஓர் மரபாக மட்டுமே இருந்தது. அரசின் சட்டமாக இருக்கவில்லை.

ஆனால், வருண முறையிலிருந்து சாதி முறைக்கு மாற்றியதில் பிராமணீயத்தின் சுயநல நோக்கமுள்ள செயல், இந்தியாவைச சீரழிவு மிகுந்த பாதையில் இன்றளவும் மீளஇயலாதபடிக்கு திசை திருப்பிவிட்டது. அதாவது அந்தஸ்த்தையும் தொழிலையும் பரம்பரையாக வரும்படி சாதி முறை மாற்றிவிட்டது. இந்த மாற்றம் பல கட்டங்களாகச செய்து முடிக்கப்பட்டது என்று கிடைத்த ஆவணங்களை வைத்து யுகம் செய்கிறார் அம்பேத்கர். சொல்லப்போனால் மூன்று கட்டங்கள்.

முதல் கட்டத்தில், வருணம், நான்கு வருடங்கள் (யுகம்) மட்டுமே நீடித்தது, அதாவது வருணம் என்பது பிறப்பால் தீர்மாணிக்கப் படவில்லை. ரிஷிகளும் பெரியோர்களும் அடங்கிய குழு ஒருவருடைய நடத்தையைக்கொண்டு வருணத்தைத் தீர்மாணித்தது. நான்கு வருடங்களுக்குப பிறகு, மீண்டும் பரிசீலனை. ஒருவருடைய ஆயுட்காலத்தில், ஒரு 'யுகத்தில்' பிராமணனாய் இருந்த ஒருவன் அடுத்த நான்கு வருடத்தில் சூத்திரனாய் மாறவும், சூத்திரனாய் இருந்த ஒருவன் பிராமணனாய் மாறவும் வழியிருந்தது.

இரண்டாவது கட்டமாக, இந்த நான்கு வருடம் என்பது ஆயுட்காலம் முழுதும் என்று மாறியது. ஆனால், இன்னும் பரம்பரையாக அது தொடரவில்லை. குருகுலத்தில் ஒரு மாணவனின் பன்னிரெண்டாவது வயதில், தகுதியின் அடிப்படையில், குருவால் நிர்ணயம் செய்யப்பட்டு, 'உபநயனம்' என்னும் சடங்கால் வர்ணம் வகுக்கப்பட்டு, வாழ்நாள் முழுதும் நீடித்தது.

மூன்றாவது கட்டமாக, குருகுலத்தில், குருவால் நிர்ணயிக்கப்பட்ட வர்ணம், மாற்றியமைக்கப்பட்டு தந்தையே தன் வர்ணத்தை தன வாரிசுகளுக்குப வழங்கி, (பிறப்பின் அடிப்படையில் தொடரச்செய்து) தகுதியைப புறந்தள்ளியது.

ஆனால், இங்கு ஒரு கேள்வி எழுகிறது. பல்வேறு பழங்குடி இனத்தில், பலவகையான தொழில்கள் செய்து கொண்டிருந்த இனக்குழுக்களில் இருந்து உருவானது தான் சாதி என்று அறிகிறோம். இந்தியாவில் சதுர்வருண அமைப்பு ஆழமாக வேரூன்றிய சமய - சமூக அமைப்பாக இயங்கியதால், பழங்குடி இனக்குழுக்கள் வருண அமைப்புக்குள் இணைய, ஆதிக்க சக்திகளான மதகுருமார்கள்-பிராமணர்கள் அரசர்கள்-க்ஷத்திரியர்கள் ஆகியோரால் நிர்பந்திக்கப்பட்டு, சாதியாக உருமாற்றம் பெற்றனவோ ? உலகின் மற்ற இடங்களில் பழங்குடி இனக்குழுக்கள் இருந்தாலும் வலுவான வருண அமைப்போ (அல்லது அதற்கு நிகரான அமைப்போ) இல்லாது போனதால் தான், இந்த சாதி இந்தியாவைத் தவிர எங்கும் தோன்றவில்லையோ ?
இந்த சாதி, தேசியத்துக்கும் இடையூறாக இருக்கிறது என்று அம்பேத்கர் சொல்வது கவனிக்கத்தக்கது.

ஒரு தேசம் என்பது புவியியல், பண்பாடு மற்றும் பொருளாதார அடிப்படையில் மாத்திரமே ஒற்றுமையாக இருக்க முடியாது. இவையனைத்தையும் மீறி, "சேர்ந்திருக்கும் வேட்கை" என்பது மிகவும் முக்கியமானது. சாதிப்பற்று, இந்த வேட்கையை, இந்திய சமூகத்தை என்றைக்குமே ஒரு முழுமையான அமைப்பாக வளர விடாமல், சில சாதிக் குழுக்களின் தொகுப்பாக மாத்திரமே நீடிக்க வைத்தது. எந்த ஒரு சமூகத்திலும், குழுக்கள் இருக்கும். அதே போல் தான் சாதியும். அதில் தவறென்ன ? இருக்கிறது.

ஒரு சமூகத்தில் பல குழுக்கள் இருக்கலாம். குழுக்கள் இணைந்தவகையாகவும் தம்மிடையே பரஸ்பர நலன்கள் பேணுவகையாகவும் இருக்கின்றனவா என்பது தான் கேள்வி. நாட்டுரிமை என்பது அகச்சார்பான உளவியல் உணர்வு. 'நாம் எல்லோரும் ஒரே வகை. அனைவரும் ஒன்றுபட்டு நிற்கிறோம் ' என்ற உணர்வு. ஆனால், ஒரு குழு தனிமையாகவும் தனிப்பட்டதாகவும் அதாவது சாதி போல இருந்தால், அதனுடைய சமூகவிரோத உணர்வு மேலோங்குகிறது. ஒரு குழு 'தனக்கு மட்டும் சொந்தமான' நலன்களை கொண்டிருப்பதால், மற்ற குழுக்களுடன் முழுமையாகக் கலந்துறவாட முடியாமல்போய், அத்தகைய உறவின் மூலம் முன்னேற்றமடைவதற்குப் பதிலாக, தன்னிடமுள்ளதைக் காப்பாற்றிக் கொள்வதே அதன் முக்கிய நோக்கமாக மாறி, சமூகமே ஒன்றிலிருந்து ஒன்று தனிமைப்பட்டு, சாதிக்குழுக்களாக, நலிவுற்று பிளந்துபட்டு நிற்கிறது.

சாதி என்னும் நஞ்சின் விளைவு, அவர்களை சாதிமுறைக்கு எதிராக மட்டுமின்றி, இந்தியாவை ஆக்கிரமிப்பு செய்த வெளிநாட்டினருக்கு எதிராகவும் செயல்பட முடியாமல் செய்துவிட்டது என்கிறார் அம்பேத்கர்.


பண்டைய இந்தியா விஞ்ஞானத்தில் முன்னேற்றம் அடையாததன் காரணத்தை அம்பேத்கர் விளக்குகிறார்:

புத்த மதத்தின் பிக்குகள் அமைப்பும், வேத கால பிராமண அமைப்பும் ஒரே நோக்கத்துக்காக ஏற்படுத்தப்பட்டன. சமூகத்தின் தலைசிறந்த பிரிவாக இருந்து, சமூகம் சரியான பாதையில் செல்வதற்கு வழிகாட்டிகளாகவும் தலைவர்களாகவும் செயல்பட வேண்டும் என்பதே அந்த நோக்கம். நோக்கம் ஒன்று தான், ஆனால் இதை நிறைவேற்றுவதில் பிராமணர்களை விட பிக்குகளுக்கே அனுகூலமான காரணங்கள் இருந்தது.

ஒரு மனிதன் சமூகத்துக்கு உண்மையிலேயே தலைமை வகித்து நடத்த வேண்டுமென்றால், அவன் அறிவுரீதியாக சுயேச்சையாக இருக்கவேண்டும். சுயேச்சையாக இருக்கவேண்டுமென்றால், தனிச்சொத்துரிமை இருக்கக்கூடாது. இதை புத்தர் தெளிவாக உணர்ந்திருந்தார். சமூகத்தலைவனாக இருப்பவனுக்கு சொத்துரிமை இருக்குமானால், அதைப பரிபாலனம் செய்வதிலேயே நேரமும் உழைப்பும் விரயமாகும். வேத கால பிராமணர்களுக்கு என்றைக்குமே சொத்துரிமை தடை செய்யப்படவில்லை. சொல்லப்போனால், தங்களுக்கு அளிக்கப்பட சலுகைகளை கொண்டு, மேன்மேலும் வசதியைப் பெருகிக்கொண்டே தான் இருந்தார்கள். அதனால் தான், பிக்குகள் அறிவு சார்ந்த இயக்கமாக செயல்பட்டபோது, பிராமணர்கள் வெரும் கல்வி கற்ற வகுப்பாக மட்டுமே உருவாகி, தங்களுடைய உழைப்பும் கல்வியும் முழுவதும் மக்களின் நலன்களுக்கு எதிராக, தங்கள் சொந்த நலன்களைப் பாதுகாப்பதிலேயே, செலவிட்டார்கள்.

எந்த நாட்டிலும், எல்லா மக்களின் பொது நன்மையைப் பற்றி அக்கறை செலுத்தும் முற்றிலும் அறிவு சார்ந்த ஒரு வகுப்பு எங்குமே இருக்கவில்லை தான். ஆனால், மற்ற நாடுகளில், சமூகத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் கல்வி கற்ற பிரிவு இருந்ததன் மூலம், பலதரப்பட்ட கருத்துக்களை - நிலைப்பாடுகளைக் கொண்டிருந்ததால், தெளிவான ஒரு வழிகாட்டுதல் இல்லையென்றாலும், ஒரு வகுப்பு மற்ற வகுப்புகளை முழுமையான ஆக்கிரமிப்பு செய்ய இயலாவண்ணமாக, ஒரு பாதுகாப்பு இருந்தது. சமூகத்தின் ஒரே கல்வி கற்ற பிரிவாக பிராமண வகுப்பு இருந்ததால், இந்தியாவுக்கு அறிவுசார்ந்த வகுப்பின் பத்திரமான வழ்காட்டுதல் இல்லாமல் போய்விட்டது.

கல்விக்கும் அறிவுக்கும் உள்ள வித்தியாசம் பெரியது. 'இந்தியா நாகரிகம் உலகிலேயே மிகப்பழமையான நாகரிகம்' என்றும் பண்டைக்கால இந்துக்கள் பல ஆக்கப்பூர்வமான விஞ்ஞானத துறைகளில், அதாவது வானவியல், உயிரியல் வேதியியல் கணிதம் மருத்துவம் விமானவியல் என்று பல துறைகளில் முன்னோடியாய் இருந்திருக்கிறார்கள் என்று சொல்லக் கேள்விப்படுகிறோம்.

இப்படி விஞ்ஞானங்களில் முன்னோடியாய் இருந்தாலும் ஏன் முன்னேறாமல் நின்று போனோம் என்பது நியாயமான கேள்வி. இதற்கு ஒரே விடை தான். பண்டைய இந்தியாவில் பிராமணர்கள் மட்டுமே கல்வி கற்ற வகுப்பாக இருந்தார்கள். ஆனால் ஒரு அறிவு சார்ந்த வகுப்பு நடந்து கொள்வது போலன்றி, அறிவு வளர்ப்புச் செயல்களை எல்லாம் துறந்துவிட்டு, தங்களுடைய சமூக பொருளாதார அரசியல் நலன்களைப் பாதுகாப்பதில் மட்டுமே ஈடுபட்டு விஞ்ஞானத்தில் ஈடுபடுவதிற்குப் பதிலாக, (பௌத்த) சமூக சமத்துவ கொள்கையை முறியடிப்பதற்கு ஸ்மிருதிகள் எழுதினார்கள். விஞ்ஞான முன்னேற்றம் தடைப்பட்டுப் போனதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது ?

( இதே காரணத்தினால் தான், நமக்கு கிடைத்துள்ள சொற்ப கல்வெட்டுக்கள் மற்றும் ஆவணச் சான்றுகள் தவிர்த்து, உருப்படியான வரலாற்றுக் குறிப்புகளோ, அரசவை நடப்புக்களையோ நம் இந்து முன்னோர்கள் விட்டுச்செல்லவில்லை ? )



இந்து சமூகத்தில் இவ்வளவு அநீதிகளும் சமத்துவமின்மையும் அதுவும் நீண்ட காலம் இருந்திருக்குமானால், ஏன் எதிர்ப்போ புரட்சியோ உருவாகவில்லை ? ஒரு வேளை, சமூகம் வன்முறையின்றி அமைதியான வழியில் நடப்பதற்கு இந்தச சாதி அமைப்பு தான் காரணமோ ?

அப்படி இல்லை என்கிறார் அம்பேத்கர். எந்த ஒரு சமூகத்திலும் சமத்துவமின்மை நீண்ட காலம் நீடிக்காது. சமூகத்தில், சமத்துவமின்மையால் இரண்டு விஷயங்கள் உண்டாகும். ஒன்று, சமத்துவமின்மை பெரும்பாலருக்கு அதிருப்த்தியை உண்டாக்கி, புரட்சிக்கு வித்திடும். இரண்டாவது, பாதிக்கப்பட்டவர்கள் ஒரு பொது எதிரியை எதிர்த்து ஒரு பொதுத தீமையை ஒழிப்பதற்கு ஒன்று சேர்கிறார்கள்.

ஆனால், இந்து சமூகத்தில் நிலவியது சமத்துவமின்மை அல்ல, அதைக் காட்டிலும் கொடுமையான 'படிப்படியான சமத்துவமின்மை'. இதனால், புரட்சியோ, பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்வதோ இல்லாமலாகி விடுகிறது. இதை ஒரு சமுதாய நடைமுறை வழக்கைக் கொண்டு பார்ப்போம். எடுத்துக்காட்டாக, ஒரு பிராமணன், தனக்குக் கீழே உள்ள மூன்று வகுப்பிலிருந்தும் பெண் கொள்ள உரிமை உண்டு. க்ஷத்திரியனுக்கு அவனுக்குக் கீழே உள்ள இரண்டு வகுப்பிலிருந்து பெண் கொள்ளலாம், ஆனால் பிராமண வகுப்பிலிருந்து பெண் கொள்ள முடியாது. க்ஷத்திரியன், பிராமணனுக்கு இந்த உரிமை இருப்பது பற்றி குமுறுவான். ஆனால், அவன் கீழே உள்ள இரண்டு வகுப்பிலிருந்து பெண் கொண்டு திருப்த்தியுறுவான். க்ஷத்திரியன் அதிகம் பாதிக்கப்பட்டவன் அல்ல. மேலும், எல்லோரும் சமம் என்று ஆகிவிட்டால், வைசியனும் சூத்திரனும் அவன் நிலைக்கு உயர்ந்து விடுவார்கள் என்பதால், வைசியனுடனோ, சூத்திரனுடனோ சேர மாட்டான்.

இந்த வருணப்பிரிவு சமூகத்தில், ஒவ்வொரு வகுப்பினருக்கும் எதிரிகள் வெவ்வேறு, பொது எதிரி என்று யாருமில்லை.

பிராமணீயத்திற்கும் அதன் அநியாயங்களுக்கும் எதிராகப் புரட்சி எதுவும் நடக்காமல் போனதன் முக்கிய காரணங்களில் ஒன்று படிப்படியான சமத்துவமின்மை. ஒரு கொள்ளை முறையை உருவாக்கி, மற்றவர்கள் ஆதரிக்கச் செய்வதற்காக அவர்களுக்கு கொள்ளையின் லாபத்தில் பங்கு கொடுக்கும் கேவலமான சூழ்ச்சிகள் நிறைந்த ஏற்பாடு இது.

சமுதாயத்தின் கடைநிலை சாதிகளை நேரிடையாகவும் அதிகமாகவும் அடக்கி நடப்பது அவர்களுக்கும் சற்று மேலுள்ள கீழ்சசாதிகளேயன்றி உயர்ந்த சாதி மக்களல்ல என்று கருத வாய்ப்புண்டு. ஆனால், இது மிகவும் பலகீனமான கருத்து. ஆயிரம் ஆண்டுகளாக வேரூன்றிய பல அடுக்கு சாதிச் சமூகத்தில், மேல்சாதி மக்கள் கீழ்சாதி மக்களை நேரிடையாக ஆதிக்கம் செலுத்தவேண்டிய அவசியமே இல்லை. அதை இடைப்பட்ட சாதிகளே பார்த்துக்கொள்ளும். பிறப்பின் - சுரண்டலின் அடிப்படையில், சாதிகள் உருவானபோது தடுக்காது, அதை மேலும் தங்கள் சுயநல நோக்கத்திற்காக பல ஆயிரம் ஆண்டுகளாக வலுப்பெறவும் காரணமாயிருந்த சமூகத்தின் உயர்நிலை மக்கள், இந்த நியாயமற்ற அவல நிலைக்கு முக்கிய காரணமாகத்தான் இருக்கிறார்கள்.
இப்பொழுது பௌத்தம் இந்தியாவில் ஏன் வீழ்ச்சியடைந்தது என்று பார்ப்போம். முதலில், பௌத்தத்தின் வீழ்ச்சி இந்திய வரலாற்றையே திசை திருப்பி விட்டது என்று கூறினால் அது மிகையாகாது.

சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன் இந்தியாவிலிருந்து மறைந்த பௌத்தம், ஒருவேளை அழியாமல் இருந்திருக்குமானால், இந்து மதத்தையும் (முரணியக்கத்தால்) செழிப்படையச் செய்து, இன்று இந்தியா வந்து சேர்ந்திருக்கும் இடம் முற்றிலும் வேறுமாதிரியாய் இருந்திருக்கும்.இஸ்லாமியர்களின் இந்தியப் படையெடுப்பால் அதிகம் பாதிக்கப்பட்டது இந்து மதம் என்பது பொதுக்கருத்து. ஆனால், பௌத்தம் அழிந்தே போனது. கி.பி 1193-ம ஆண்டில் துருக்கிய முஸ்லிம் படையெடுப்பால் அழிந்த நாலந்தா பல்கலைக்கழகத்தின் நூலகம் 3 மாதங்கள் எரிந்தது பொது அறிவு. இன்னொரு தகவல்: கி.பி 1243 -ம ஆண்டில் பீகாரைத் திருமத் திரும்பத தாக்கிய ஒரு முஸ்லிம் தளபதி, கொள்ளையடித்து முடித்ததும், அங்கிருந்த பெரும் நூலகத்தின் புத்தகங்கள் எதைப்பற்றியவை என்று தெரிய விருப்பமுற்று, புத்த பிக்குவைத் தேடினால் ஒருவர் கூட மிஞ்சவில்லையாம்.

பௌத்தம் வீழ்ச்சியடைந்து இந்தியாவிலிருந்து மறைந்தே போனது. முஸ்லிம் படையெடுப்பு மட்டும் தான் காரணமா என்று ஆராய்ந்தால், இஸ்லாமியர்களின் தாக்குதலைத் தொடர்ந்து முற்றிலும் நலிவுற்று இந்தியாவிலிருந்தே மறைந்ததன் காரணம் பிராமணீயமே என்கிறார் அம்பேத்கர்.

இஸ்லாம் தாக்கியபோது பௌத்தம், பிராமணீயம் இரண்டுமே தான் பாதிக்கப்பட்டன. ஆனால் பௌத்த பிக்குகள் படுகொலை செய்யப்பட்ட அளவிற்கு இந்து சமய குருமார்கள் அழிக்கப்படவில்லை. பிக்குகள் அழிந்தபிறகு பௌத்தத்தைப பின்பற்றிய மக்களை வழிநடத்த குருமார்கள் இல்லை. ஆனால், பிராமணீயத்துக்கு இந்த கதி ஏற்படவில்லை. ஏனென்றால், அழிந்த இந்து குருமார்கள் போக, மிஞ்சிய ஒவ்வொரு பிராமணனும் புரோகிதத்தை எடுத்துக்கொள்ள முடிந்தது, பிராமணீயமும் தழைத்தது.

முன்னூறு ஆண்டு காலம் இஸ்லாமியப் படையெடுப்பு நடந்த போது இந்தியா முழுவதையும் ஆண்ட அரசர்கள் யாவரும் வைதீக பிராமண சமயத்தைச்ப பின்பற்றியவர்களே என்பதை மனதிலிறுத்திக் கொள்வது அவசியம். ஆனால் பௌத்தம் அரசின் ஆதரவைப் பெற்றிருக்கவில்லை. பெளததர்கள் பிராமணீயத்தை ஆதரிக்குமாறு இந்திய அரசர்களால் பெரிதும் கொடுமைப் படுத்தப்பட்டனர். தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு அவதிக்குள்ளான பௌத்தர்கள் இதனால் பெருமளவு இஸ்லாமைத் தழுவ வேண்டிய நிலை வந்தது. இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் முஸ்லிம்கள் இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். இந்துக்களை விட பௌத்தர்களே அதிகம் மதமாற்றம் செய்யப்பட்டார்கள் என்பது பெருமளவு யாரும் அறியாத சேதி என்கிறார் அம்பேத்கர்.

கி.மு 6 -ம நூற்றாண்டு தோன்றிய பௌத்தம் 1500 வருடங்களாக இந்தியாவில் வளர்ந்து கி.பி 10-ம நூற்றாண்டுக்கு மேல் இந்தியாவிலிருந்து அழிந்ததன் மற்றொரு காரணம பௌத்த மடங்களிலேயே இருந்தது என்கிறார் கோசம்பி. அது, பௌத்த மடங்கள் பின்னாட்களில், செல்வம் கொழிக்கும் வட்டி வியாபாரம் நடத்தும் கொழுத்த மடங்களாய் புரையோடிப போனதேயாகும் என்பார்.

[பாகம் 2 ]

1 comment:

Anonymous said...

Buy Tamil Books Online @ http://www.myangadi.com/

Post a Comment