Monday, September 30, 2013

ஞானமடைதல் என்ற புதிர் - பாகம் 1

ஞானமடைதல்   என்ற   புதிர்
 
யு ஜி கிருஷ்ணமூர்த்தி

கண்ணதாசன் பதிப்பகம்
விலை:  80 ரூபாய்


இருபதாம் நூற்றாண்டில்,   இந்தியாவிலிருந்து தோன்றிய மகத்தான தத்துவ ஞானிகளுள் ஜே கிருஷ்ணமூர்த்தியும் (ஜேகே),   யு ஜி கிருஷ்ணமூர்த்தியும் (யுஜி)  அடக்கம்.   ஜேகே  உலகப்பிரசத்தியானவர்;    யுஜியை அறிந்தவர்கள் சிலரே.    பெயரை மீறி, இருவருக்கும் சில ஒற்றுமைகள் உண்டு.   இருவரும் சமகாலத்தவர்கள். தங்கள் தத்துவ விளக்கங்களில் மரபை உடைத்தெறிந்தவர்கள். ‘உலகை மீட்க வந்த மீட்பர்’   எனத் தத்துவ உலகம் ஜேகே-யை கொண்டாடிய போது,   ‘முதலில் இந்த உலகை மீட்பர்களிடமிருந்து (ஜேகே உள்பட) மீட்க வேண்டும்’  என்று சொன்னவர் யுஜி.  


இவ்விருவரும் வாழ்க்கை பற்றி அளித்த தரிசனங்கள் முக்கியமானவை – புறக்கணிக்கமுடியாதவை.  யுஜி சொல்ல வருவதை தெரிந்துகொள்ளுமுன் ஜேகே சொன்னதைப் புரிந்து கொள்வது சிறப்பு.

நமக்கு எட்டாத விஷயமாக இருக்குமோ என்று எண்ணாதீர்கள்.  தொடர்ந்து படிக்க எந்தத் தத்துவ பரிச்சயமும் தேவையில்லை.


ஜே கிருஷ்ணமூர்த்தியின்   வாழ்க்கைத்   தரிசனம்:

ஜே கிருஷ்ணமூர்த்தி
 
ஜே கிருஷ்ணமூர்த்தியின் தத்துவத்தை ஒருவர் முதன்முதலில் அறியும்பொழுது (அதுவும் இளம் வயதில்),    ஆர்க்கிமெடிஸ் ஓர் அறிவியல் உண்மையைக் அறிந்த போது கொண்ட பெரும் மன எழுச்சியைப் போல,   வாழ்வின் ரகசியத்தையே தெரிந்து கொண்டது போல் உணரக்கூடும். ஜேகேவின் வாழ்க்கையைப் பற்றிய விளக்கங்களில், உதாரணப்புருஷர்கள் இல்லை, புனிதநூல்கள் இல்லை,   மேற்கோள்கள் இல்லை. சூத்திரங்கள்,   மந்திரங்கள் தேவையில்லை,  குண்டலினி தெரிந்திருக்கத் தேவையில்லை. எளிய சொற்களைக் கொண்டு ஜே கே நமக்குச் சொல்வது: 'முன்முடிவுகள் இல்லாது விழிப்புணர்வுடன் வாழ்க்கையை நோக்குங்கள்.  அதுவே நமக்குத் தெளிவையும், வழியையும் நல்கும்',   என்பதே.


உண்மையை தரிசிக்க விழையும் ஒருவர் முதலில் செய்ய வேண்டியது - வெளியுதவி எதையும் நாடாது இருப்பதே.   என் மதம் இவ்வாறு கட்டளையிடுகிறது,  என் குரு இப்படி போதித்திருக்கிறார்,   யோக சாஸ்திரம் இப்படி அறிவுரைக்கிறது - என அத்தனையும்  உதறி எறிவது அவசியம்.   மிஞ்சியிருப்பது நமது புலனறிவும், பிரக்ஞையும்  மாத்திரமே.   விருப்பமோ வெறுப்போ இன்றி, விழிப்புணர்வோடு, நடப்பதை உள்ளது உள்ளபடி காண்பது அடுத்த படியாகும். சொல்லப்போனால், இதுவே கடைசியுமாகும்.   நாம் செய்யக்கூடியது ஒன்றே: முன்முடிவுகள் இல்லாது, விருப்பு வெறுப்பு இல்லாது, விழிப்புணர்வோடு வாழ்க்கையை அணுகுவதேயாகும்.  ஜேகே, வாழ்க்கையை அறிவியல் பூர்வமாக அணுகினார் என்று சொல்லலாம்.  நாம் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் எல்லா பிரச்சனைகளையும் எதிர்கொள்ள விழிப்புணர்வு ஒன்றே பாதை என்றார்.  (ஒரே பாதை தான் இருக்கிறது என்றால் அங்கே தேர்வு செய்ய வேறு பாதை இல்லை.) அதனால்  இந்த விழிப்புணர்வை  ‘தேர்வற்ற விழிப்புணர்வு’  (Choiceless Awareness) என்கிறார்.


ஆக,   எந்த ஒரு பிரச்சனைக்கும் விடை,   அப்பிரச்சனையை நாம் எவ்வளவு கவனமாக,   உக்கிரமாக,   சார்புநிலையற்று விழிப்புணர்வுடன் காண்கின்றோமோ,   அந்த அவதானிப்பிலே,   அநத உணர்வு நிலையிலே, அந்த தரிசனத்திலேயே உள்ளது. பிரச்சனையின் தீர்வு சுமுகமாக முடியும் என்பதல்ல இதன் அர்த்தம்.  முடிவு எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கு,   உணர்வுநிலை அமைவதே தீர்வாகும்.


உதாரணத்திற்கு,  ஜேகே,   ‘பிறரிடம் அன்பாய் இரு’   போன்ற் பொன்மொழிகளை உதிர்த்தவரில்லை.   விழிப்புணர்வுடன் ஒருவர் இருந்தால்,  அன்பாய் இருக்க வேண்டிய அவசியத்தை அவரே உணர்ந்து இயல்பாய் அன்பாக இருக்கக்கூடும். உங்கள் குருமார்கள்,  பெற்றோர்கள்,  மதங்கள் இட்ட வரையறைகளின் பேரில்  நீங்கள் அன்பு செலுத்துவதற்கும்,   எந்தத் துணையுமின்றி,  உள்ளார்ந்து உணர்ந்து அன்பாக இருப்பதற்கும் உள்ள வேறுபாடு முக்கியமானதாகும்.


இன்னொரு உதாரணம்.   நீங்கள் பொறாமைப்படும் இயல்பு கொண்டவர் என்று வைத்துக்கொள்ளுங்கள்.   சிறுவயதுமுதல், பொறாமைப்படுதல் நல்லதல்ல என்று பல வழிகளில்  போதிக்கப்பட்டிருப்பதால்,  ‘நாம் பொறாமைப் படுகிறோம்’ என்ற பிரக்ஞை எழுந்த மறுகணமே, “பொறாமை கொள்வது தவறு” என்று எதிர்மறைக் கருத்தும் நம் மனதில் உடனே தோன்றுகிறது.  “இனிமேல் பொறாமை கொள்வதில்லை”, என நமக்கு நாமே உறுதி பூணுகிறோம், குருமார்களின் பேச்சைக் கேட்கிறோம், கோயிலுக்குப் போகிறோம். (இம்மாதிரி நாம் செய்வதை, ஜேகே,  மனம் செய்யும் சித்து விளையாட்டுக்கள் என்பார்).  நாம் செய்வது தற்காலிகமாக அவ்வுணர்விலிருந்து தப்பித்துக் கொள்ளுதலே.  பொறாமையுணர்வு நம்மில் உண்டாக்கும் மன சஞ்சலத்தை, அவஸ்தையைத் தவிர்க்க,  அவ்வுணர்வை நேருக்கு நேர் எதிர்கொள்ளத் திராணியில்லாமல்,  நம்மை மேம்படுத்துவதற்கு வெளியிலிருந்து உதவி கோருவதாக நம்மையே ஏமாற்றித் தப்பித்துக் கொள்ளுவதையே செய்கிறோம்.  ஆனால், இத்தகைய வெளியுதவிகள்  பொறாமையுணர்வை  போக்குவதில்லை.  அது நம்முள்ளே கங்கு போல கனன்று கொண்டுதானிருக்கிறது.  (பகல் கனவு காண்பது,  அதீத காம உணர்வுடன் இருப்பது,  தாழ்மையுணர்வுடன் இருப்பது போன்றவற்றிகும் மேலே சொன்னது பொருந்தும்.)


சரி,  பொறாமைகொள்ளுதல் என்பது சரியல்ல தானே ?   இதைத்தான் மறைநூல்கள், புத்தர், ஏசு என்று ஆரம்பித்து எல்லாரும் நமது நலனுக்காக சொல்லியிருக்கிறார்கள் ? நாம் ஏன் ஜேகே சொல்வதைப் போல,   இவ்வளவு பிரயத்தனப்பட்டு, விழிப்புணர்வுடன் நாமே உள்ளார்ந்து உணர வேண்டும் ?


பொறாமை தீது என்று நமக்கு முன்னர் ஆயிரம் பேர் அதை சொல்லியிருக்கலாம். சொன்னவர்கள் அதை  உண்மையாய் உணர்ந்தும் இருக்கலாம். உணர்ந்ததை நல்லெண்ணத்துடன் மற்றவர்களுக்காக போதித்தும் இருக்கலாம்.  ஆனால்,   நாம் அதைக் கேட்கும் போது,   அது ஒரு விஷய அறிவு மாத்திரமே.  அந்த விஷய ஞானத்தால்,   நமக்கு ஒரு பயனும் கிடையாது.   விஷய அறிவு என்றைக்கும் அது சுட்டும் ஞானத்திற்கு அழைத்துச் செல்லாது.   சொல்லபோனால், உண்மையை உணர்வதற்கு பெரும்பாலும் தடையாகவே அமையும்.


மாங்கனியின் சுவையையே அறியாத ஒருவன்,  அதன் சுவை பற்றி ஏராளமாய்ப் படித்திருந்தாலும்,   அச்சுவையை அவன் உணர்வது,   மாங்கனி அவன் கையில் கிடைக்கும் போதுதான்.  அக்கனியை சுவைக்கும்போது,  அச்சுவை பற்றி அவன் அறிந்திருந்த அனைத்தையும் இயல்பாகப் புறந்தள்ளுகிறான்;   சுவையைப் பிளவின்றி உணர்கிறான்.


மாங்கனியின் சுவையை உணர,   அதை நேரடியாக அனுபவிப்பது எவ்வளவு முக்கியமோ,   அது போல,   நம் வாழ்க்கையை சரியாக வாழ,   அதன் ஒவ்வொரு தருணத்தையும்,   நம்முள் எழும் எண்ணங்களையும்,   உணர்வுகளையும்,   நாமே உள்ளார்ந்து,   உள்ளது உள்ளபடி உணர்வது அவசியமாகும்.    பிறர் வாழ்ந்து துப்பிய எச்சங்களைக் கொண்டு,   நமது வாழ்க்கையை அணுகலாகாது.


நமக்கு விருப்பமானது (உதாரணமாக காமம்)  நடக்கும் பொழுதுமட்டும் நாம் அதை உள்ளார்ந்து அனுபவித்து உணர்கிறோம்.   ஆனால்,  நமக்குப் பிடிக்காதது நடக்குமெனில்,  மற்றவர்கள் அதற்கு என்ன தீர்வு சொல்லியிருக்கிறார்கள் என்று சடுதியில் குறுக்குவழியையே தேடுகிறோம். இங்கு தான் ஜேகே,   நம் எண்ண ஓட்டங்கள் அனைத்தையும்,  அது இன்பமானதோ,   துன்பமானதோ,   உள்ளது உள்ளபடி நேரிடையாக எதிர்கொள்ளும் துணிவு வேண்டும் என சலிக்காது வலியுறுத்தினார்.


சரி,  உள்ளது உள்ளபடி காண்பது என்றால் எவ்வாறு ?    ஒரு விஷயத்தை உள்ளது உள்ளபடி காண,   ஜே கிருஷ்ணமூர்த்தி பரிந்துரைக்கும் முறை பொய்மை களைதல்.   அதாவது, நம்முள் எழும் பொய்களை,   இதுவல்ல காரணம்,  இதுவல்ல காரணம் என்று தொடர்ந்து களைந்து வரும் போது,    எஞ்சுவதே உண்மை.


அடுத்த கேள்வி:   நம் எண்ணங்களை,   உணர்வுகளை இப்படி நேரிடையாக, விழிப்புணர்வுடன் எதிர்கொள்வதால் என்ன நடந்து விடப்போகிறது ? அது எப்படி நமக்கு சரியான பாதையைக் காட்டவல்லது ?    இதற்கான பதிலைச் சொல்வதை ஜே கிருஷ்ணமூர்த்தி தவிர்த்தார்.  ஆனால் அதன் சூட்சுமம்,  எப்படி பௌத்தத்தில் ‘மகாதர்மம்’   என்பது எங்கும் விரவி,   தர்மத்தை நிலைநாட்டுகிறதோ,  அது போல, நாம் விழிப்புணர்வுடன் செய்ய வேண்டியதைச் செய்தால்,  ஜேகே அடிக்கடி சுட்டும் ‘காலவரையற்றது’  அல்லது ‘அது’   என்பதானது நமக்கு சரியான பாதையைச் சுட்டும் எனக் கொள்ளலாம்.   ‘அது’ வானது பாதையைக் காட்டுகிறதோ இல்லையோ,   நாம் செய்ய வேண்டியது ஒன்றே:   விழிப்புணர்வுடன் இருப்பது என்பதில் ஜேகே மிகவும் கராறாய் இருந்தார்.


எளிய சொற்களால்,   எளிய வழிமுறை போலத் தோன்றினாலும், இவ்வணுகுமுறையைப் பின்பற்றி வாழ முற்படும்போதுதான் அதிலுள்ள நடைமுறைச் சிக்கல்களை ஒருவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.


 
ஜே கிருஷ்ணமூர்த்தியின்  தத்துவம்  –   நடைமுறைச்  சிக்கல்கள்



தொடக்கத்தில்,  இவ்வணுகுமுறையைப் பின்பற்றி,   நாம் நம் மனம் செயலாற்றும் விதங்கள் பற்றி நிறையவே அறிந்துகொள்கிறோம்.  ஆனால், நம்மில் மிகுதியோரை வதைபடுத்தும் நமது கோபங்கள்,  பொறாமை,  சபலங்கள் ஆகியவற்றை நேரடியாக எதிர்கொள்வதால் இவ்வுணர்வுகளை வென்றோமா என்றால் தயக்கத்துடன் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.   இவ்வுணர்வுகளை விழிப்புணர்வுடன் கவனிக்கையில் அவை வடிந்து அடங்கியது போலத் தோன்றினாலும் அவை மீண்டும் எழவே செய்கின்றன.  மீண்டும் விழிப்புணர்வுடன் எதிர்கொண்டாலும், அடங்கியது போல் இருந்து,  அவை திரும்பியும் வீறுகொண்ட நாகமென படமெடுக்கின்றன. எண்ணத்தின் தொடர்ச்சியான செயல்பாடு - நம்மை மிகுந்த சோர்வுக்கும்,  ஏமாற்றத்திற்கும் உள்ளாககுகின்றன.   சில சமயம், நாம் நம்மையே ஏமாற்றிக் கொள்கிறோமா என சஞ்சலம் கொள்ளவும் நேரிடலாம்.  ஜேகே சொன்னதைச் சரியாகத் தான் புரிந்து கொண்டோமா அல்லது ஏதாவது தவற விட்டோமா என்ற சந்தேகம்  அவரது புத்தகங்களையும், சொற்பொழிவுகளையும் மீண்டும் நாடத் தூண்டும்.    இந்தச் சுழற்சி நிற்காதது.


மேலும் வாழ்க்கையில் எந்நேரமும் விழிப்புணர்வுடன் இருப்பது ஒரு பாராங்கல்லை எப்பொழுதும் சுமந்து கொண்டிருப்பதைப் போன்ற ஒரு உணர்வாக ஒருவருக்குத் தோன்றலாம்.
 


ஜேகே, தான் கூறும் வாழ்க்கைத் தரிசனத்தை ஒருவர் உண்மையாகப் புரிந்து கொண்டாரெனில்,   அவரது எழுத்தையோ சொற்பொழிவையோ மீண்டும் கேட்க வேண்டிய தேவையே இராது என அடிக்கடி சொல்வார்.. ஆனால்,  அவரது வழிமுறையைப் பின்பற்றியவர்கள்,  மீண்டும்  மீண்டும் அவரிடமே தஞ்சம் புகுந்தனர்.



பிற்காலத்தில்,  ஜேகே,   தான் சொன்னதைப் புரிந்து அதன்படி வாழும் ஐந்து பேராவது இருப்பார்களேயானால்,   அதுவே எனக்குப் போதுமானது என்றார்.    எண்ணிக்கை முக்கியமல்ல என்று ஜேகே கூறுவதை நாம் ஆமோதித்தாலும்,   நம்மை அயரவைக்கும் கேள்வி:   ஐந்து பேராவது தேறினார்களா ?


ஆன்மிக உலகில் ஜேகே ஆற்றிய பங்களிப்பை கேள்விக்குரியதாய் உட்படுத்துவது இப்பதிவின் நோக்கமல்ல.  ஜே கிருஷ்ணமூர்த்தி காட்டிய பாதையைப் பின்பற்றியவர்கள், அவர் சுட்டிய தூரத்திற்கு செல்லவில்லை என்று கொண்டாலும்,  நிச்சயம் ஒரு மேம்பட்ட நிலையையே அடைந்திருப்பர்.  உலகெங்கும் ஜேகே-வழி நடக்கும் கல்வி மற்றும் அறச்சாலைகள் சிறப்பாகவே செயல்படுகின்றன.  ஏராளமான படித்த, உறுதியான, நல்ல உள்ளங்கள் அங்கே பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நடைமுறை உண்மை. 


இனி, அடுத்த பதிவில், யு ஜி கிருஷ்ணமூர்த்தி என்ன சொல்கிறார் என்பதைப் பார்ப்போம்.

2 comments:

G.Venugopalan said...

இனிய தமிழில் ஒரு சிறந்த பதிவு.

ஜே கே படிக்க ஒரு ஆர்வத்தை/உந்துதலை பலருக்கும் இது கொடுக்கக்கூடும். (எனக்கு சண்முகம் சார் 1990-ல் கொடுத்த ஜே கே புத்தகம் போல். ).

வாசகருக்கு ஜே கே ஐ அறிமுகப்படுத்தும் ஆர்வத்தில் ஜே கே கூறியவற்றின் சாராம்சத்தை பதிவாளர் கூற முனைகிறார். இது ஒருவகை கொடை மடம்.

ஜே கே 80+ ஆண்டுகள் வாழ்ந்தார்.

அதில் சுமார் ஐம்பதாண்டுகள், உண்மை ஒரு பாதையில்லா நிலப்பரப்பு, என் நோக்கம் மனிதனின் நிபந்தனையற்ற விடுதலை எனக்கூறி அவருக்காக உருவாக்கப்பட்ட ஒரு பெரிய அமைப்பை கலைத்த பிறகு வாழ்ந்தவை. உலகின் பல பாகங்களுக்கும் சென்று உரைகள்/கலந்துரையாடல்கள் பல பொருள்களில் பல வித கூட்டங்களில் நடத்தியுள்ளார்

அவரது போதனைகள் நேர்மறையாக சாராம்சப்படுத்த முடியுமா என்பதே கேள்விக்குறி. எதிர்மறையாக அவர் என்ன உண்மையில்லை எனக்கூறினார் என்பதை சாராம்சப்படுத்துவது முயலக்கூடியது.

வரைபடம் நிலப்பரப்பல்ல (map is not the terrain) என்பது போல் இந்த சாராம்சமும் ஒரு சுட்டியாக (pointer) எடுக்கப்பட்டு அவர் கூறியதை அவர் வாயிலாகவே கேட்பதே சிறப்பு.

இதற்கு jkrishnamurti.org செல்க.

சண்முகம் சார் இந்த மாணவனின் அதிகப்ப்ரசங்கித்தனத்தை பொருட்படுத்த மாட்டார் என அறிவேன்.

வேணுகோபாலன் கோவிந்தன்

king said...

Thank You...........

Post a Comment