Tuesday, September 23, 2014

ஆசிரியர்களுக்கு ஒரு சவால்




எனக்குரிய இடம் எங்கே?
கல்விக்கூடச் சிந்தனைகள்

11 ஆம் பதிப்பு
ச. மாடசாமி

கட்டுரைத் தொகுப்பு
விலை: ரூ. 60/-
பதிப்பகம்: அருவி மாலைப் பதிப்பகம்
aruvi.ml@gmail.com




இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் திரு. மாடசாமி, ஒரு கலைக் கல்லூரியில் 30 வருடங்களுக்கு மேல் ஆசிரியராகப் பணியாற்றியவர்.  ஆசிரியர் என்பவர் பாடத்திட்டத்தில் இருப்பதை,'நல்ல' முறையில் சொல்லித் தருவது தான் என்ற சராசரிப் புரிதலுக்கு விதிவிலக்காக, தான் சொல்லித் தரும் முறையை, பாரபட்சமின்றி தொடர்ந்து பரிசீலனை செய்தவர். அவரது அனுபவங்களின் தொகுப்பு தான் இந்த 125 பக்க அற்புதப் புத்தகம்.

ஆசிரியர்  வேலையில்  சேர்ந்த போது ஆசிரியத் தொழிலைப் பற்றித் தனக்கிருந்த 'புரிதலைப் ' பற்றி வருமாறு கூறுகிறார்: "கொஞ்ச காலம் பாம்புப் பிடாரன் வேலை.  (மாணவர்களை) மயக்கப் பார்ப்பேன்.  அவர்கள் மயங்க மயங்க மனசு துள்ளும்.  மயக்குகிற காலத்தில், மயங்காமல் சுய உணர்வொடு நெளிகிற பாம்புகள் மீது கோபம் பொங்கும்."  கஷ்டப்பட்டு சொல்லித் தர வேண்டும், என்பது தானே பெரும்பாலான நல்ல ஆசிரியர்களின் குறிக்கோள்?  இதே நிலையில் தங்கி விட்ட எத்தனை ஆசிரியர்களை நீங்கள் உங்கள் வாழ்வில் சந்தித்திருப்பீர்கள்? "நான் மாங்கு மாங்கென  சொல்லித்   தந்து கொண்டு இருக்கிறேன்.  இந்தப் பசங்கள் கேட்டாத் தானே?", என்று புலம்பிக் கொண்டே ஓய்வு பெரும் ஆசிரியர்கள் எத்தனை பேர்?  இவர்களில் இருந்து வித்தியாசமானவர் திரு. மாடசாமி.  வகுப்பறையில் தான் சொல்லித் தரும் முயற்சிகளில், தொடர்ந்து பல மாற்றங்களைச் செய்து வந்தவர்.  அந்த மாற்றங்களின் விளைவுகளை பாரபட்சமின்றி எடை போடுவதின் மூலம் தன்னைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டார். அந்தக் கற்றலின் தொகுப்பே இந்தப் புத்தகம்.

திரு. மாடசாமி, வகுப்பறைகள் மாணவர்களும், ஆசிரியர்களும் தொடர்ந்து மேற்கொள்ளக்கூடிய ஒரு விவாத களமாக இருக்க வேண்டும் என உறுதியாக நம்பியவர்.  ஆசிரியர்களுக்கும் சரி, மாணவர்களுக்கும் சரி, விவாதப் பயிற்சியே இல்லாத சூழலில், எப்படி அதை வகுப்பறைக்குள் கொண்டு வருவது?  இது பற்றி அவர் தனது அனுபவங்களை - முதலில் ஏற்பட்ட தோல்விகளை, பின்னர் அந்தத் தோல்விகளில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்களை, எந்த முலாமுமின்றி, கோஷங்களின்றி (without slogans), யதார்த்தமாகச் சொல்லுகிறார்.  இந்த நடைமுறை ஞானம் தான், பெரும்பாலான கல்வியாளர்களிடம் இருப்பதில்லை.

வகுப்பறையில் கவனிக்காமல் பராக்குப் பார்க்கும் மாணவர்களில் இருந்து, எந்தத் தலைப்பைக் கொடுத்தாலும் சற்றும் தயங்காமல் வார்த்தைகளைக் கக்கும் 'சூட்டிகை'யான மாணவர்கள் வரை எல்லா மாணவர்களிடமும் உறைந்திருக்கும் திறமைகளை அவரவர்களே கண்டறிய உதவுவது தான் ஒரு ஆசிரியரின் முக்கியப் பணி என்று சொல்கிறார் திரு. மாடசாமி.  இதற்கு, அவர் தம் வகுப்பறையில் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் - மாணவர்களையே  பாடம் நடத்தச் சொல்வது; அவர்கள் சிந்திக்கும் வகையில் சரி/தவறு என்றில்லாத கேள்விகளை அமைப்பது; அவர்களை வாய் விட்டு, உரக்கப் படிக்கச் சொல்வது; வகுப்பறைக்கு வெளியே பாடத்தை நடத்துவது; இப்படிப் பல முயற்சிகள்.  அவை எல்லாவற்றிலும், முடிந்தவரை, மிகக் கவனமாக, மாணவர்களின் செயலைக் கவனித்து, தத்தம் திறமைகளை அவர்களே கண்டறிய உதவுவது தான் அவரது இலக்காக இருந்திருக்கிறது.  இது பற்றி அவர் கூறுவது குறிப்பிடத்தக்கது, "சிலருக்கு ஒரு வாய்ப்புப் போதும்.  சிலருக்குத் திரும்பத் திரும்ப வாய்ப்புகளைக் கொடுத்துக் காத்திருக்க வேண்டும்.  குடும்பத்துக்கும் இது தான் பாடம்; கல்விக் கூடத்துக்கும் இது தான்", என்கிறார்.  இந்த வாய்ப்புகளை, வகுப்பறையில் உருவாக்குவது தான் ஆசிரியரின் உண்மையான பணி என்கிறார்.

மாணவர்களிடம் இருந்து ஆசிரியர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் தம் பாடம் நடத்தும் முறையை மேம்படுத்திக் கொள்ள மாணவர்களின் உதவியைக் கோர வேண்டும்.   வகுப்பறை பற்றிய விமரிசனத்தை ஆசிரியர்கள் உணர்ச்சி வசப்படாமல் பரிசீலனை செய்து, நல்ல கருத்திருந்தால் தயங்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். எத்தனை ஆசிரியர்கள், தம் மாணவர்களிடம் இதைக் கேட்பார்கள்?

மாணவர்களுக்கு மகுடி ஊதும் பாம்புப் பிடாரனாகத் தன் ஆசிரியப் பணியை ஆரம்பித்தவர்,  "மாணவர்களை ஆசிரியர்களாக்கி ஒத்தாசைக்குக் கூட இருப்பது தான் உண்மையான ஆசிரியப் பணி என்று சமீபத்தில் மனதில் படுகிறது. என் கவனம் முழுக்க இப்போது அந்தப் பக்கம் இருக்கிறது", எனச்  சொல்வது 30 வருட நேரடி அனுபவத்தின் முதிர்ச்சி.  இந்தப் பயணத்தை, கல்வி பற்றிய தன் நோக்கின் பரிணாம வளர்ச்சியின் ஆரத்தை, மிகையின்றி, இயல்பாக சொல்லி இருப்பது தான் இந்தப் புத்தகத்தின் வலு.  தன் பயணம் தடுமாறிய போதெல்லாம், தன் வழியை மாற்றி, மீண்டும், மீண்டும் புதிய முயற்சிகள் செய்து, சிக்கல்களை நேர்கொண்டு முன் நகர்ந்துள்ளார்.  இதெல்லாம் நடைமுறைக்கு ஒவ்வாதப்பா என்ற பொதுப் புத்திக்கும்,  நல்ல ஆசிரியராக இருப்பதெற்கெல்லாம் ஒரு சரஸ்வதி கடாட்சம் வேண்டும் என்று சொல்லி நழுவும் கையாலாகாத தனத்திற்கும், திரு. மாடசாமி விடும் ஒரு நேரடி சவால்.  மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும்  ஒரு சேரச் சொல்லும் ஒரு பாடம்.

இதைப் படித்து முடித்தபின் என் மனதிற்கு தோன்றியது இது தான்.  இவரை ஆசிரியராகப் பெற்ற மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.  இந்தப் புத்தகத்தின் தலைப்பு, கல்வியைப் பற்றிய அவரது முழு புரிதலையும் முன் வைக்கிறது, கல்வியின் ஒரே இலக்கு, ஒரு மாணவனுக்கு, "அவனுக்குரிய இடம் எங்கே?" என அடையாளம் காட்டுவது தான்.  தனக்குரிய இடத்தைத் தேட, ஒருவனுக்குத் தன்னைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும்".  அந்தத் தேடலுக்கு உதவுவது தான் உண்மையான கல்வி.  அதற்கு உதவக்கூடிய  கல்வி, உண்மையான விவாதத்தில் இருந்து தான் தொடங்குகிறது.  அந்த விவாதத்தின் விளைவாய் ஒருவன் அடையும் தெளிவே,  ஒருவனுக்கு தனக்குரிய இடத்தைத் தேடிக் கண்டடையத் தேவையான துணிச்சலையும், நடைமுறை அறிவையும் அளிக்கும்.  எவ்வளவு உண்மையான வார்த்தைகள்!

கல்வியைப் பொருத்த மட்டில், பெரும் சிந்தனையாளர்கள் ஜான் ஹோல்ட், மரியா மாண்டஸோரி, போன்றவர்கள், உலகெங்கும் பிரசித்தி பெற்றவர்கள்.  அவர்களுக்கு இனையாக, நம் நாட்டுச் சூழலில், அரசுக் கல்லூரிகளில் தொடர்ந்து வேலை செய்து கொண்டு,  ஒரு பணியாற்றியுள்ளவர், திரு. மாடசாமி, என்று சொல்வது மிகையாகாது.  அனைத்து ஆசிரியர்களும், பெற்றோர்களும், கல்வியாளர்களும் படிக்க வேண்டிய புத்தகம்.

தொடர்புடைய சுட்டிகள்:

1. இதுவா கணக்கு
2. கல்வி  பற்றிய நரம்பியல் சார்ந்த புரிதல்
3. பெருகும் வேட்கை
4. ஆளுக்கொரு கிணறு
5. கல்வி என்பது - ஜே.கிருஷ்ணமூர்த்தியின் கட்டுரை