Think on these things
J. Krishnamurthy
Edited by D. Rajagopal
Harper and Row Publishers
இவை குறித்து சிந்தியுங்கள்
ஜெ. கிருஷ்ணமூர்த்தி
இந்த கட்டுரைத் தொகுப்பில் ஜெ.கே யின் அற்புதமான கட்டுரைகள் உள்ளன.
கல்வியைப் பற்றி ஜெ. கேயின் கட்டுரையின் தமிழாக்கம்*
கல்வி என்பது ...
நாம் எப்போதாவாது கல்வி என்றால் என்ன என சிந்தித்திருத்திருக்கோமா? ஏன் பள்ளிக்குச் செல்கிறோம்? ஏன் பல்வேறு பாடங்களைக் கற்கிறோம்? ஏன் தேர்வுகளில் பிறரை விட நல்ல மதிப்பெண்கள் பெற போட்டியிடுகிறோம்?
நாம், கல்வி, கல்வி என்கிறோமே, அது உண்மையிலேயே என்ன? இது மாணவர்களுக்கு மட்டும் முக்கியமான கேள்வி அல்ல, பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், உலகை நேசிக்கும் அனைவருக்கும் முக்கியமான கேள்வி. கல்வி என்னும் போராட்டத்தில் ஏன் பங்கெடுக்கிறோம்? தேர்வுகளில் வெற்றியடைந்து ஏதோ ஒரு வேலையை அடைய மட்டுமா? இல்லை, கல்வி என்பது, நம் ஒட்டு மொத்த வாழ்க்கையையும், புரிந்து கொள்ள இளம் வயதிலேயே அளிக்கப் படும் பயிற்சியா? ஒரு வேலை செய்து, ஒரு மனிதனின் வாழ்வாதாரத்தைப் பூர்த்தி செய்து கொள்வது அவசியம் தான். - ஆனால் அது ஈட்ட உதவுவதற்காக மட்டும் தான் கல்வி கற்கிறோமா? நிச்சயமாக, வாழ்வென்பது வெறும் வேலையோ, தொழிலோ மட்டுமல்ல; வாழ்வென்பது அசாதராண விஸ்தாரமும், ஆழமும் கொண்டது; அது ஒரு பெரும் புதிர்; நாம் மனிதர்களாக உலவும் பெரும் சாம்ராஜ்யம். நாம் நம்மை ஒரு வாழ்வாதாரத்தை ஈட்டுவதற்கு மட்டும் தயார்படுத்தி கொள்வேமாயானால், நாம் வாழ்க்கையின் முழு அர்த்தத்தையும் தவற விட்டு விடுவோம். வாழ்க்கையைப் புரிந்து கொள்வது, வெறும் ஒரு தேர்வுக்கு தயார் செய்வதைக் காட்டிலும் மிக முக்கியமானது. கணிதத்தில், இயற்பியலில், இன்ன பிற பாடங்களில் விற்பன்னராவதை விட முக்கியமானது.
எனவே, நீங்கள் மாணவர்களாக இருந்தாலும் சரி, ஆசிரியர்களாக இருந்தாலும் சரி, நாம் ஏன் கற்கிறோம், ஏன் கற்பிக்கிறோம், என்ற கேள்வியைக் கேட்பது முக்கியமல்லவா? வாழ்வின் அர்த்தம் என்ன? வாழ்க்கை ஒரு அசாதரணமான நிகழ்வில்லையா? பறவைகள், பூக்கள், வளமான மரங்கள், வானம், நட்ச்த்திரங்கள், ஆறுகள், அதில் இருக்கும் மீன்கள் - இவை யாவும் வாழ்க்கை. வாழ்வென்பது ஏழ்மையும், செல்வமும்; வாழ்வென்பது குழுக்களிடையே, இனங்களிடையே, தேசங்களிடையே தொடர்ந்து நிகழும் போராட்டம்; வாழ்க்கை நம் மதம்; அது நம் மனதில் நுட்பமாக, ஒளிந்திருக்கும் பொறாமைகள், பேராசைகள், அச்சங்கள், நிறைவுகள், மற்றும் கவலைகளும் கூடத் தான். ஆனால், நாம் வாழ்க்கையின் ஒரு சின்னத் துண்டைப் புரிந்து கொள்ள மட்டுமே நம்மைத் தயார்படுத்திக் கொள்கிறோம். ஒரு சில தேர்வுகளில் வெற்றியடைகிறோம், ஒரு வேலையைச் செய்கிறோம், திருமணம் செய்து கொள்கிறோம், குழந்தைகள் பெற்றுக் கொள்கிறோம்; கொஞ்சம், கொஞ்சமாக இயந்திரம் போலாகி விடுகிறோம். நாம் வாழ்வை பதற்றங்களுடனும், கவலைகளுடனும், அச்சங்களுடனும் எதிர்கொள்கிறோம். ஆக, கல்வியின் இலக்கு, நம்மை வாழ்வின் அத்தனை பரிமாணங்களையும் எதிர்கொள்ள தயார் செய்வதா, இல்லை வெறும் ஒரு நம்மால் அடையக்கூடிய சிறந்த வேலைக்கு நம்மைத் தயார் செய்வதா?
நீங்கள் வளர்ந்த பின்னர் என்ன ஆகப் போகிறீர்கள் என்று உங்களை நீங்களே கேட்டுக் கொண்டதுண்டா? பெரும்பாலும், நீங்கள் திருமணம் செய்து கொள்வீர்கள்; நீங்கள் அறியுமுன்னரே ஒரு தாயாகவோ, தந்தையாகவோ ஆகி விடுவீர்கள்; உங்கள் வேலையோ, சமையலறையோ உங்களை கட்டிப் போட்டு விடும்; பிறகு, கொஞ்சம், கொஞ்சமாக உருக்குலைந்து இல்லாமலாகுவீர்கள். இது தானே நிகழப் போகிறது? இவ்வளவு தான் உங்கள் வாழ்க்கையா? இந்தக் கேள்வியை நீங்கள் உங்களையே கேட்டிருக்கிறீர்களா? இது கேட்கப் பட வேண்டிய கேள்வி இல்லையா? உங்கள் குடும்பம் வசதியான, பணக்காரக் குடும்பமாக இருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல சொகுசான இருப்பு நிச்சயமாகக் கிடைக்கலாம்; உங்கள் தந்தை உங்களுக்கு ஒரு நல்ல உத்தியோகத்தை ஏற்பாடு செய்யக் கூடும்; நல்ல பணக்காரக் குடும்பத்தில் திருமணம் செய்து கொள்ளலாம். இத்தனையும் இருந்தாலும், நீங்களும் உருக்குலைந்து, அழிவது தானே நிகழப் போகிறது? இது புரிகிறதா?
எனவே, விஸ்தாரமான வாழ்வை அதன் நுட்பங்களோடு, அதன் அசாதரணமான அழகோடு, அதன் சந்தோஷங்களோடு, துக்கங்களோடு புரிந்து கொள்ள உதவாத எதுவும் கல்வி அல்ல. நீங்கள் பெரும் பட்டங்கள் பெற்றுக் கொள்ளலாம்; உங்கள் பெயரின் பின் பல எழுத்துக்களைப் பொறித்துக் கொள்ளலாம்; நல்ல வேலையை அடையலாம்; அதன் பின்னர்? இதையெல்லாம் அடையும் முயற்சியில், உங்கள் மனம் சோர்வடைந்து, மளுங்கி, முட்டாள்தனமாகுமேயானால், அத்தகைய கல்வியால் என்ன பயன்? அதனால், நீங்கள் இளமையாக இருக்கும் போதே, கல்வியின் பயன் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? உங்களுக்கு அறிவாற்றல் என்றால் என்ன என்று தெரியுமா? அறிவாற்றல் என்பது நிச்சயமாக, சுதந்திரமாக, அச்சமின்றி, எந்த முன்முடிவுகளுமின்றி யோசித்து, எது உண்மையென்று நீங்களே கண்டுபிடிக்கும் திறன் தான். ஆனால், நீங்கள் அச்சத்தோடு இருந்தால், ஒருபோதும் அறிவாற்றல் கொண்டவராக இருக்க முடியாது. எந்த ஆசையும், ஆன்மிகம் சார்ந்ததாக இருந்தாலும் சரி, இன்ன பிறவற்றைச் சார்ந்ததாக இருந்தாலும் சரி, உங்களிடம் அச்சத்தையும், பதற்றத்தையும் உருவாக்கும்; எனவே ஆசை, தெளிவும், எளிமையும், நேரடித்தன்மையும் கொண்ட அறிவாற்றல் உள்ள மனதை அடைய உதவுவதில்லை.
கல்வி (from: http://goo.gl/GdhdHm ) |
ஆனால், இந்தப் போராட்டத்தில் நீ ஈடுபட வேண்டும் என்று யாரும் சொல்வதில்லை; கடவுள் என்றால் என்ன என்று நீயே கண்டுபிடி என்று யாரும் உன்னிடம் சொல்வதில்லை; ஏனெனில், நீ இப்படி ஒரு போராட்டத்தில் ஈடுபட்டால், உண்மையில்லாத அனைத்திற்கும் ஆபத்தானவானாகி விடுவாய். உன் பெற்றோர்களும், சமுதாயமும் நீ பாதுகாப்பாக வாழ வேண்டும் என்று ஆசைப் படுகிறார்கள்; நீயும் பாதுகாப்பாக இருப்பதையே விரும்புகிறாய். பாதுகாப்பான வாழ்வென்பது, போலியான நகலெடுக்கும் வாழ்க்கை. ஏனெனில் அதில் அச்சம் உள்ளது. நிச்சயமாக, கல்வியின் செயல்பாடு, நம் ஒவ்வொருவரும் அச்சமின்றி, சுதந்திரமாக இருக்க உதவுவது தானே? அச்சமற்ற சூழலை உருவாக்குவதற்கு உன் தரப்பிலும், உனக்குச் சொல்லித் தரும் ஆசிரியரின் தரப்பிலும் பெரும் கவனம் வேண்டும்.
அச்சமற்ற சூழலை உருவாக்குவது எவ்வளவு பெரிய மகத்தான காரியம்? அந்தச் சூழலை நாம் உருவாக்கியாகத் தான் வேண்டும். ஏனெனில், இவ்வுலகம் முடிவற்ற போர்களில் சிக்கித் தவிக்கிறது; இவ்வுலகம் அதிகாரத்தை விழையும் அரசியல்வாதிகளால் வழி நடத்தப்ப்டுகிறது; வக்கீல்களும், காவலதிகாரிகளும், இராணுவமும், அதிகாரத்தை பெறப் போட்டியிடும் ஆண்களும்/பெண்களும் நிறைந்த உலகமிது. அது மட்டுமின்றி, இப்பிறவியிலோ, அல்லது அடுத்த பிறவியிலோ, நல்ல இடத்தை/அதிகாரத்தை அடைய பிரயத்தனப்படும் சாமியார்களும், மத குருக்களும் -அவர்களைப் பின்பற்றுவோரும், நிறைந்த உலகமிது. பொதுவுடைமைவாதி முதலாளியை எதிர்த்துப் போராடுகிறான்; சோஸலிஸ்டு இரண்டு பேரையும் எதிர்க்கிறான்; எல்லோரும் யாராதொருவரை எதிர்த்துப் போராடி, ஒரு பாதுகாப்பான, வசதியும் அதிகாரமும் நிறைந்த இடத்திற்கு வரலாம் என்று எண்ணுகின்ற பைத்தியக்காரர்கள் நிறைந்த உலகமிது. இவ்வுலகம் முரண்படும் நம்பிக்கைகளால், சாதி/வர்க்க வேறுபாடு, தேச வேறுபாடு, என பல வகையான முட்டாள்தனமான பிளவுகளால், குரூரமான முறையில் சிதைகிறது. இந்த நிலையில் உள்ள உலகத்தின் கட்டமைப்பில் உங்களைப் பொருத்திக் கொள்ளத் தான் தற்கால கல்வி முறை உங்களைத் தயார் செய்கிறது; உங்கள் பெற்றொர்கள் அதைத் தான் விரும்புகிறார்கள்; நீங்களும் இப்படி உலகோடு ஒத்துப் போவதையே விரும்புகிறீர்கள்.
எனவே, கல்வியின் செயல், இப்படி நசிந்து போயிருக்கும் உலகில் உங்களைப் பொருத்திக் கொள்ள தயார் செய்வதா, இல்லை உங்களுக்கு முழுச் சுதந்திரம் - முற்றிலும் மாறுபட்ட உலகைப் படைக்க உதவும் சுதந்திரத்தை அளிப்பதா? நாம் இந்தச் சுதந்திரம் வேண்டும் என்று விரும்புகிறோம் - எதிர்காலத்தில் அல்ல, இப்போதே வேண்டும். இல்லையேல் நாம் அனைவரும் அழிந்து போகக் கூடும். நாம் இக்கணமே சுதந்திரமாக இருக்கக் கூடிய சூழலை உருவாக்க வேண்டும். அப்போது தான், எது உண்மை என நம் வாழ்க்கையின் மூலமே தெரிந்து கொள்ள முடியும். உண்மையான அறிவாற்றல் கொண்டவராக முடியும். வெறுமே உலகோடு ஒத்துப் போகாமல், உலகை எதிர்கொண்டு, புரிந்து கொள்ள முடியும். யாரொருவர், உள்ளூர, ஆழமாக, உளவியல் ரீதியாக தொடர்ந்து போராடுகிறார்களோ, அவர்களால் மட்டுமே உண்மை எது என கண்டு பிடிக்க முடியும். உலகோடு ஒத்துச் செல்பவனால் முடியாது; ஏதோ பாரம்பரியத்தைப் பின்பற்றுபவனால் முடியாது. எப்போது நீங்கள் தொடர்ந்து கேள்வி கேட்டுக் கொண்டு, தொடர்ந்து உற்று நோக்கிக் கொண்டு, தொடர்ந்து கற்றுக் கொண்டு இருக்கிறீர்களோ, அப்போது தான், கடவுளையோ, உண்மையையோ, அன்பையோ காண முடியும். நீங்கள் அச்சத்தோடு இருந்தால், உங்களால் கேள்வி கேட்கவோ, உற்று நோக்கவோ, கற்றுக் கொள்ளவோ, ஆழமான விழிப்புணர்வுடன் இருப்பதோ, முடியாது. எனவே, கல்வியின் செயல்பாடு, நிச்சயமாக, மனிதச் சிந்தனையை, மனித உறவுகளை, நேசத்தை சிதைக்கும், உள்ளும், புறமும் உள்ள அச்சத்தை வேரோடு அழிப்பது தான்!
* காப்புரிமை பதிப்பகத்திற்கே. இம்மொழிபெயர்ப்பு வாசகர்களுக்கு இந்த நூலை அறிமுகப்படுத்தும் முயற்சி மட்டுமே.
தொடர்புடைய பதிவுகள்:
1. ஞானமடைதல் என்ற புதிர் - பாகம் 1
2. ஞானமடைதல் என்ற புதிர் – பாகம் 2
3. பெருகும் வேட்கை
4. ஆளுக்கொரு கிணறு
5. இதுவா கணக்கு?
No comments:
Post a Comment