Tuesday, August 17, 2010

சாயாவனம்



சாயாவனம்
ஆசிரியர் : சா. கந்தசாமி
பதிப்பகம் : காலச்சுவடு
பரிந்துரை : ஜெகதீஷ் குமார் 

  


தக்கையின் மீது நான்கு கண்கள் என்கிற அபூர்வமான சிறுகதைதான் நான் வாசித்த சா. கந்தசாமியின் முதல் படைப்பு. தலைப்பு போலவே கதையும் தனித்தன்மை கொண்டிருந்தது. ஒரு தாத்தாவுக்கும், பேரனுக்கும் இடையில் ஓடையில் மீன் பிடிக்கையில் நடக்கும் போட்டியும், தாத்தாவுக்குப் பேரனின் மேலுள்ள ego clash கோபமாக வெளிப்படுவதும் மிக இயல்பாகவும் அழகாகவும் வெளிப்பட்டிருந்த கதை.

சா. கந்தசாமி என்ற பெயர் இலக்கிய வட்டாரத்தில் தவிர்க்க முடியாத பெயராதலால் எனக்கு அவர் பற்றி நீண்டகாலமாகத் தெரியும். ஆனால் ஒரு கதை கூடப் படித்ததில்லை. சாயாவனம்தான் நான் படித்த அவரது முதல் நாவல். அதற்கு முன்பு அவரது சிறுகதை தக்கையின் மீது நான்கு கண்கள். சாயாவனம் காலச்சுவடு கிளாசிக் வரிசையில் வெளியாகியுள்ளது. இப்பதிப்புக்கு பாவண்ணன் ஆழமான நீண்ட முன்னுரை ஒன்று எழுதியுள்ளார். நாவல் எழுதப்பட்ட காலகட்டம் மட்டுமின்றி, தற்காலச் சூழ்நிலையிலும் எப்படி சாயாவனம் ஒரு இன்றியமையாத படைப்பாகிறது என்பதை அழகாக விளக்குகிறது அம்முன்னுரை. நான் எழுதப் போவது, ஒரு வாசகனாக எனக்கு இந்த நாவல் கொடுத்த அனுபவங்களைப் பற்றி.  தன்னுடைய இருபத்தைந்தாவது வயதில் சா. கந்தசாமி இந்த நாவலை எழுதினார் என்பதையும், நாற்பதாண்டுகளுக்கு முன் இந்நாவல் எழுதப்பட்டது என்பதையும் கவனத்தில் கொண்டு நாவலுக்குள் புகுதல் நலம்.

தன் சுயநலத்துக்காக மனிதன் இயற்கையை எவ்வாறு சீரழிக்கிறான் என்பதற்கான உதாரணங்கள் ஒரு நாவலுக்கும் மீறிய சுவாரசியத்தோடு நம் கண் முன் தினந்தோறும் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. Clayrose கூட தன்னுடைய வரலாறு முக்கியம் தளத்தில் ஒரு பதிவில் மெக்சிகோ குடாப்பகுதியில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் செய்த அட்டூழியத்தைப் பற்றி எழுதியிருந்தார். விளைநிலங்கள் அழிக்கப்பட்டு பிளாட் போட்டு விற்கப்படுவது தினந்தோறும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. நாம் சேர்த்து வைத்த பணத்தில் ஒரு ஐந்து சென்டாவது அந்த நிலத்தை வாங்கிவிடவேண்டுமென்று எந்தக் குற்ற உணர்ச்சியுமின்றித் தயாராக இருக்கிறோம். ஈரோட்டில் காவேரிக்கு இரு கரைகளிலும் தொழிற்சாலைகள். ஒரு கரையில் ஆடை பதனிடும் தொழிற்சாலைகள். மற்றொரு கரையில் தோல். பகலில் கழிவு நீரைச் சுத்திகரிப்பதாக பாவ்லா காட்டிவிட்டு இரவு ஏழு மணிக்கு மேல் ஆயிரக்கணக்கான லிட்டர்கள் கழிவுநீரை நேரடியாகத் திறந்து விட்டு விடுவார்கள். தொழிற்சாலைகளுக்கு அருகாமையில் நதி பச்சை நிறத்திலிருக்கும். அந்நீரில் தொடர்ந்து குளித்தாலே புற்றுநோய் வந்துவிடும். அதிலிருந்துதான் குடிநீரும். தோல்கழிவின் வீச்சம் ஈரோட்டிலிருந்து சித்தோடு வழியாக பவானி செல்லும் வரை தொடரும். தன் மீதான எத்தனையோ அத்துமீறல்களை இயற்கை பொறுத்துக் கொண்டே இருப்பதைப் போலத்தான் தெரிகிறது.

தனக்கே உரிமையான வெறும் ஜடப் பொருளைப் போல இயற்கைச் செல்வத்தை மனிதன் எப்படிப்  பயன்படுத்தப்படுகிறான் என்பது பற்றிய ஒரு பதிவுதான் சாயாவனம். செல்லும் பாதையிலிருந்து கொஞ்சம் நகர்ந்தாலும் பிரச்சாரநெடி அடித்துவிடும் அபாயமுள்ள கதைக்கரு. ஆனால் மிகவும் கவனமாகக் கையாண்டிருக்கிறார் சா. கந்தசாமி. கரும்பு ஆலை அமைப்பதற்காக சாயாவனம் என்ற தோப்பும், அதன் உயிரினங்களும், தோப்பை ஒட்டிய மேலும் பல மரங்களும் வயல்களும் அழிக்கப்படுவது நுணுக்கமாக விவரிக்கப்பட்டிருக்கிறது. சிறுவயதிலேயே தாயோடு இலங்கைக்குப் போய்விடுகிற சிதம்பரம் தாய் ‘அம்மை வாத்துக் குளுந்து’ போன பிறகு சொந்த கிராமத்துக்கே திரும்பி வருகிறான். கையில் அயல் நாட்டில் சம்பாதித்த காசு நிறைய இருக்க, தன் ஊரில் ஒரு கரும்பாலை அமைக்க ஆசைப்படுகிறான். அதற்காக சாயாவனம் என்ற தோப்பை விலைக்கு வாங்கிப் போடுகிறான். துவக்கத்தில் உதவிக்கு யாருமற்ற நிலையில் தானே களத்தில் இறங்கி சாயாவனத்தின் மரஞ்செடிகொடிகளைக் கொஞ்சம் கொஞ்சமாய் வெட்ட ஆரம்பிக்கிறான். வனத்தை அழித்து ஆலை அமைக்கும் இம்முயற்சியில் அவனுக்கு அவன் மாமா முறையாகும் சிவனாண்டித் தேவர் துணையாக இருக்கிறார். ஆரம்பத்தில் சாம்பமூர்த்தி ஐயர் சிதம்பரத்துக்கு சாயாவனத்தை விற்றது சிவனாண்டித் தேவருக்குப் பிடிக்கவில்லை. ஆனால் சிதம்பரம் தன் பணிவான நடத்தையாலும், கனிவான சொற்களாலும் அவரைக் கவர்ந்து விடுகிறான். மேலும் இருவர் சேர்ந்து கொள்ள வனம் அழிக்கும் பணி தொடர்கிறது.

ஓர் ஆசிரியராகவோ, அல்லது ஏதேனும் ஒரு கதாமந்தரின் மூலமாகவேனுமோ தலையிட்டு இயற்கையை இந்த மனிதர்கள் இப்படி இரக்கமின்றிச் சிதைக்கிறார்களே என்று தன் ஆதங்கத்தை வெளிப்படையாகச் சொல்வதேயில்லை சா. கந்தசாமி. காட்டை அழிப்பதில் சிதம்பரம் மேற்கொள்ளும் தொழில்நுட்ப நேர்த்தியையும், தனக்குச் சாதகமான விஷயங்களைப் பிறரிடமிருந்து சாதித்துக் கொள்ளும் அவனது திறமையையும் சிலாகிப்பதைப் போலவே விவரித்துக் கொண்டு செல்கிறார். சிதம்பரத்தின் மனதில் கணந்தோறும் காட்டை அழிப்பது பற்றிய திட்டமே ஓடிக்கொண்டிருக்கிறது. இயற்கையோடு அவன் நிகழ்த்தும் போராட்டமாகவே அதை எடுத்துக்கொள்கிறான். முதலில் பணிய மறுக்கும் இயற்கை அவன் கொடுக்கும் தொடர்ந்த அடிகளால் பலவீனப்பட்டுத் தலை தாழ்ந்து விடுகிறது.

சிதம்பரத்தின் மனதில் கரும்பாலை தவிர வேறேதுமில்லை. கிராமத்தவர் கூட தங்கள் ஊருக்கு வரவிருக்கும் ஆலை பற்றிய எதிர்பார்ப்பிலிருக்கிறார்களே தவிர யாரும் ஒரு வனம் இப்படி அழிக்கப்படுகிறதே என்று வருத்தப்படுவதில்லை. மரங்கள் வெட்டப்பட்டுச் சாயும்போதும், வழியேற்படுத்துவதற்காக கொடிகள் அறுக்கப்படுவதும், தேனடைகள் உடைக்கப்படுவதும், மூங்கில் கூட்டம் எரிக்கப்படுவதும் வாசகனுக்குத்தான் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. வனத்துள் உறையும் பறவைகளும், சிறுவிலங்குகளும், வனத்துக்குள் யாரும் அறியாது இருந்த சமவெளியில் மேய்ந்து கிடந்த மாடுகளும் கூட நெருப்புக்கு இரையாகி தீய்ந்து கிடப்பதும் மனிதனின் பொறுப்பற்ற செயலின் உணராத தீவிரத்தை காட்டுகிறது.

சாயாவனத்தை ஒட்டிய பகுதியில் நிறைய புளிய மரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு முறை மரங்கள் காய்த்த பிறகும் சிவனாண்டித் தேவர் மரங்களைக் குலுக்கி புளி எடுப்பார். ஒவ்வொரு மரப் புளியும் ஒரு வீட்டுக்குச் செல்லும். ஒரு மரப்புளிதான் சுவையாக இருக்கும். கடையில் கிடைப்பதெல்லாம் எல்லா மரப் புளியும் கலந்தது. கிராமத்தாருக்கு அதெல்லாம் உவப்பாக இருப்பதில்லை. சாயாவனத்துக்கு வைக்கப்பட்ட தீ புளியமரங்களையும் அழித்து விடுகிறது. ‘அதான் எல்லாத்தையும் கருக்கிட்டியே? அப்புறம் எங்கிருந்து சுவையான புளி வரும்? என்று கேட்கும் கிழவிக்கு பதில் சொல்ல முடியாது சிதம்பரம் திகைத்து நிற்பதோடு நாவல் முடிகிறது. நம்மையும் பார்த்து இது போன்ற கேள்விகள் வீசப்பட்டுக் கொண்டுதானிருக்கின்றன. அதற்கு நாமும் திகைத்து நிற்கலாம் அல்லது கேள்விகளை உதாசீனப் படுத்தி விட்டு நம் சகஜ வாழ்வைத் தொடரலாம்.

சா. கந்தசாமி பாத்திரங்களின் உரையாடல் மூலமே கதையைப் பெரும்பாலும் நகர்த்திச் செல்கிறார். கதை சாயாவனத்தின் அழிவு என்ற ஒற்றைக் கோட்டிலேயே செல்வது சற்று அயர்ச்சியைத் தருகிறது. ஆனால் இந்த நாவலை பிரம்மாண்டமான நாவலாக மாற்றி விடும் சாத்தியக்கூறுகள் உள்ளே நிறையவே இருக்கின்றன. எண்ணற்ற கதை மாந்தர்கள் நாவலில் பிரசன்னமாகி உடனே மறைந்து விடுகிறார்கள். சொல்லப்பட்ட ஒரு சிலரின் கதைகளும் மையக்கதையின் போக்கிலிருந்து விலகிவிடக்கூடாதென்ற விழிப்புணர்வுடனேயே சிறுகதைக்குரிய கச்சிதத்துடன் கொடுக்கப்படுகின்றன. சிதம்பரத்தின் அயல் நாட்டு வாழ்க்கையும், அவனது போராட்டங்களும் விவரிக்கப்படுவதற்கான சாத்தியங்களும் புறக்கணிக்கப் பட்டிருக்கின்றன. சிவனாண்டித் தேவரின் மருமகள் குஞ்சம்மாவின் மகள் திருமணம் விஸ்தாரமாகச் சொல்லப்படுகிறது. கடைசிச் சில பக்கங்களில் இரண்டு நாவல்களுக்குண்டான கதையைப் படபடவென்று சொல்கிறார். எல்லாம் புதிதாக அறிமுகமாபவர்களின் கதைகள்.

மனிதர்களினூடே நிகழும் எந்தப் பெரிய சம்பவங்களுமின்றி, திருப்பங்கள் ஏதுமின்றி, பாத்திரங்களின் குணத்திரிபுகள் கதையின் போக்கை பாதிப்பது போன்ற எந்த நிகழ்வுமின்றி ஒரு நாவலைப் படிப்பது சாதாரண வாசகனுக்கு ஆச்சரியத்தையும், திகைப்பையும் அளிக்கும். ஆனால் பாவண்ணன் தன் முன்னுரையில் சொல்வதைப் போல ‘ஒன்றையழித்து ஒன்றாக, புதுயுகமென மாறிமாறி முகம் காட்டி முன்னகர்ந்தபடி இருக்கும் காலத்தை சுட்டிக்காட்டியபடி அழியாத குறியீடாக நிற்கிறது சாயாவனம்.’

4 comments:

Jegadeesh Kumar said...

எப்போது புதிய பரிந்துரை போடும்போது எங்களுக்குள் பரிமாறி கருத்துக்கேட்டுக்கொள்வது வழக்கம். அந்த உரையாடலை இங்கு தருகிறேன்.

அன்புள்ள பாஸ்கர், ராஜா, சண்முகம்,

சாயாவனம் பரிந்துரை தங்கள் பார்வைக்கு அனுப்பியுள்ளேன். இதை ஏற்கனவே என் தளத்தில் வெளியிட்டு விட்டேன்.

இனிமேல் புத்தகப் பரிந்துரைகளை முதலில் வாசகர் அனுபவத்தில் தான் வெளியிட வேண்டும். சில நாட்களுக்குப் பிறகு வேண்டுமானால் என் தளத்தில்

போட்டுகொள்ளலாம் என்று நினைக்கிறேன். அதுதான் சரி என்று எனக்குப் படுகிறது.

சாயாவனம் பரிந்துரை குறித்து தங்கள் கருத்துக்களையும் திருத்தங்களையும் எதிர்பார்க்கிறேன்.
ஜெகதீஷ்

அன்புள்ள ஜெகதீஷ்,
இந்தப் பரிந்துரை உள்ளது உள்ளபடி நன்றாகவே இருக்கிறது. செவ்வாய் அல்லது புதன் கிழமை வாக்கில் வெளியிடலாம். அதற்குள் ராஜா, சண்முகம் தங்கள் கருத்துக்களைச் சொல்லலாம்.
-- பாஸ்கர்

அன்புள்ள ஜெகதீஷ்:

அற்புதமான பரிந்துரை. சாயாவனம் சாய்ந்தது பற்றிய அழகான கதைக்கரு. என் மனதிற்கு, இந்த ஒரு வரி கொஞ்சம் நிரடலாக இருப்பதாகப் பட்டது:
"சாயாவனம் இயற்கை மனிதனின் கையில் ஒரு பண்டமாற்றுப் பொருளைப் போலவே எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதற்கான ஒரு பதிவுதான்."
பண்டமாற்றுதலில் ஏற்படும் பொருள் பரிமாற்றம் இங்கே மனிதனுக்கும், இயற்கைக்கும் இடையே நடப்பதில்லை. ஒரு வேளை, அந்தத் தொடரை எடுத்து விட்டு,

"சாயாவனம் இயற்கை மனிதனின் கையில் தனக்கு சொந்தமான வெறும் ஜடப் (?) பொருளைப் போல எப்படிப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதற்கான ஒரு பதிவுதான்"

என்று மாற்றினால் நன்றாக இருக்குமோ என நினைக்கிறேன்.

அருமையான புத்தகப் பரிந்துரை. வாங்க வேண்டிய, படிக்க வேண்டிய புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.

அன்புடன்,
ராஜா

think Jegadeesh meant " man uses natural resources as a barter commodity to get some other commodity. Man is not bartering 'with' nature "

- baskar

Baskar:

Thanks. Instead of learning to co-exist with nature, man's folly is to consider nature as a commodity that he is entitled to barter with. This idea of dominion over nature leads him to believe that he can subjugate nature for his immediate benefit, and not pay a price. It is indeed amazing that writers such as kandhasaamy, and vannanilavan, tackled these issues such a long time ago, when the price of such false ideas was not readily apparent to the scientific community as a whole.

Raja

அன்புள்ள ராஜா, கரிகாலன், சண்முகம்,

உங்கள் உரையாடல் சுவாரசியமாக இருக்கிறது. ராஜா, பாஸ்கர் என்ன அற்புதமாய் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள்.
தமிழில் ஆங்கில எழுத்தாளர்கள் மிகக் குறைவு. நீங்கள் எழுதினால் நன்றாக இருக்கும்.

உங்கள் கருத்து எனக்கு சரியே.
jegadeesh

அன்புள்ள ஜெகதீஷ்,

பாஸ்கர் சொன்னபடி உள்ளது உள்ளபடியே பதிவேற்றம் செய்வது நல்லது.
ராஜாவின் திருத்தத்தை ஏற்கலாம் என நினைக்கிறேன்.

- சண்முகம்


நிச்சயமாக ராஜாவின் திருத்தத்தை ஏற்கலாம்.

உண்மையைச் சொல்லப்போனால் அதை எழுதும்போது நானே அதைப்பற்றி அவ்வளவு சிந்திக்கவில்லை.

baskar please do it on your own
jegadeesh

virutcham said...

A review about this novel in another site http://koottanchoru.wordpress.com/

Jegadeesh Kumar said...

நன்றி விருட்சம்

Anonymous said...

buy this book here

http://www.myangadi.com/sayavanam-kalachuvadu-pathipagam?search=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D

Post a Comment