Wednesday, June 8, 2011

பண்டைய இந்தியா : பாகம் 5




பண்டைய இந்தியா : பண்பாடும் நாகரிகமும்
ஆசிரியர்: டி.டி.கோசாம்பி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
தமிழாக்கம்: ஆர். எஸ். நாராயணன் (எஸ்.ஆர்.என். சத்யா)
பரிந்துரை: சண்முகம் / கரிகாலன்
பாகம் 5







நிலப்பிரபுத்துவத்தின் வாசலில்

மகதப் பேரரசு ஒரு சில நூற்றாண்டுகளிலேயே மிக விரைவாக எழுந்தது.  அசோகரின் காலத்தில் அதன் உச்சத்தை அடைந்தது.  மகதப் பேரரசு பின் பற்றிய அரசியல் கொள்கைகள் ஆட்சி நீடித்து நிலைப்பதற்கான வழியை  வகுத்தது.  அசோகரின் ஆட்சியில் உச்சத்தில் இருந்த மகதப் பேரரசு, அடுத்த பதினைந்து நூற்றாண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக சீரழிந்தது.   அந்தச் சீரழிவின் முடிவில் இந்தியாவில் நிலப் பிரபுத்துவத்தின் விதைகள் விதைக்கப்பட்டு முளை விடத் துவங்கின என்கிறார் கோசாம்பி.  கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இருந்து, கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரையான வரலாற்றின் சாரத்தை இந்தப் பகுதியில் பார்ப்போம்.  இந்த காலகட்டத்தில் நிகழ்ந்த மாறுதல்கள் தற்கால இந்தியாவில் காணலாம்.  குறிப்பாக முன்று விஷயங்களைக் குறிப்பிடுகிறார் கோசாம்பி.   அவை: 1 இந்தியாவை கட்டமைத்ததில் சமயத்தின் பங்கு; 2 . நிலப்பிரபுத்துவத்தின் தொடக்கம்; 3. பக்தியும் விசுவாசமும். இவற்றை விரிவாகக் காண்போம்:

1 . இந்தியாவைக் கட்டமைத்ததில் புரோகிதத்தின் பங்கு

இக்காலத்தில் புத்த மதத்தின் வளர்ச்சி, பலிகளையும், சடங்குகளையும் போற்றி வளர்த்து வந்த பழைய பிராமண வாழ்க்கை முறையை முற்றிலும் வலுவிழக்க வைத்து விட்டது.  இருப்பினும், பழங்குடிகளின் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்த, பிறப்பு, இறப்பு, அறுவடை, திருமணம் போன்ற நிகழ்சிகளில் சடங்குகளுக்கு முக்கியத்துவம் இருந்தது.   சடங்குகளை வெறுத்த பெளத்தர்களோ, ஆசிவர்களோ இந்த வேலைகளை செய்ய முனையவில்லை.  இந்த வேலைகளை சடங்குகளில் மிகவும் பரிச்சயம் இருந்த புரோகிதர்கள் ஆர்வத்துடன் எடுத்து நடத்த ஆரம்பித்தனர்.


இதனால். எல்லாப் பழங்குடி குழுக்களிலும், தொழில் இனக் குழுக்களிலும் பிராமணர்கள் மட்டுமே படிப்படியாக ஊடுருவிச் சென்றனர்.  அவர்கள் சென்ற போது அந்தந்த பழங்குடிகள் வழிபட்ட தெய்வங்களை, இந்து மதத்தின் கடவுள்களுடன் இணைத்தனர்.  உதாரணமாக பழங்குடித் தெய்வமான நாகத்தை, சிவனின் கழுத்தில் படர விட்டனர்.  விஷ்ணுவின் படுக்கையாக நாகத்தைச் சிறப்பித்தனர்.  சிவனை வணங்கும் போது பழங்குடிகள் தம் தெய்வமான நாகத்தையும் வணங்கினர்.   பழங்குடிகளின் தெய்வங்கள் இங்ஙனம் உயர்நிலையை அடைந்தன.  பழங்குடிகளின் வழிபாட்டு முறைகளும் இந்து மத சடங்குகளுடன் ஏற்றுக்கொள்ளப் பட்டன. இத்தகைய ஒருங்கினைப்புக்குத் தேவையான கதைகள்/புராணங்கள் உருவாக்கப் பட்டன.   இத்தகைய நிலை மாற்றம், பழங்குடிகளும், அவர்கள் சேர்ந்த ஆரிய வழிச் சமூகமும் ஒருங்கிணைந்து வாழ வழி வகுத்தது.  பெரும்பாலும் இந்தப் பழங்குடிகள் சாதி வர்க்க அமைப்பில் சூத்திரர்களின் அந்தஸ்தைப் பெற்று புதிய உழுகுல (farmers) சாதியாக மாறியது.   பழங்குடி மன்னர்கள் வசதியானவர்களாக இருந்தால், சில யாகங்கள் செய்வதன் மூலம், அவர்கள் அந்தணர்கள் ஆகவோ, ஷத்திரியர் ஆகவோ, ஒரே சமயத்தில் இரண்டு சாதியனர் ஆகக் கூட  வழி இருந்தது! 

இந்த புரோகித்துவ நடைமுறை வேற்றுமைகள் நிறைந்ததாக இருந்தாலும், இந்தியச் சமுதாயத்தைக் குறைந்த வன்முறையின் மூலம் உருவாக்கியது.  அதுவே, இந்த புரோகிதக் குலத்தின் முக்கியப் பங்களிப்பு.  இந்த புரோகித முறை, இந்தியப் பண்பாட்டிற்கு மிக்க தீங்கையும் விளைவித்தது என்கிறார் கோசாம்பி. 

உதாரணமாக, இக்கால பிராமணர்கள் தாங்கள் போற்றி வந்த சாதித் சட்டங்களை எழுத்து வாயிலாக வெளியிட்டுக் கொள்வதில் ஒரு போதும் ஆர்வம் செலுத்தவில்லை என்கிறார்.   ஒரு பொதுச் சட்டத்தின் அடிப்படையை நிருவுவதில் எந்த ஆர்வமும் காட்டவில்லை.  அதே சமயத்தில் விந்தை மிகுந்த பித்துக் கொள்ளித்தனமான புராணங்களையும், கட்டுக் கதைகளையும் புனைவதில் வல்லவராகத் திகழ்ந்தனர் என்கிறார்.   இதனால் இந்தியாவில் இந்த கால கட்டத்தில் நிகழ்ந்த எதையும் உறுதியாக, ஆய்வுக்குரியதாக ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருக்கிறது என்கிறார்.

மேலும்,  பழங்குடி வாழ்க்கை முறை ஜனநாயகக் கூறுகள் நிறைந்ததாக இருந்தது.  உதாரணமாக, குழுத் தலைவனும், குழு உறுப்பினர்களும் உணவை சமமாகப் பகிர்ந்து உண்பது ('ஏக பாத்திர') மரபு, பழங்குடியினர் இடையே இருந்து வந்தது.   இது ஸ்பார்ட போன்ற கிரேக்க நாட்டு ஜனநாயக மரபுக்கு சற்றும் இளைத்ததில்லை.  இருந்தாலும், இக்கால பிராமணர்கள் கொண்ட அசட்டை மனப்பான்மை இந்திய வரலாற்றை மட்டுமல்லாது, உண்மையான இந்தியப் பண்பாட்டின் பெரும்பகுதியையும் அழித்து விட்டது என்று கடுமையாக சாடுகிறார் கோசாம்பி.  

பிராமணர்கள் போற்றி வந்த 'தருக்க இயல்' உண்மை நடப்புகளை ஒதுக்கித் தள்ளுவதில் குறிப்பாக இருந்தது என்கிறார் கோசாம்பி.   சங்கரரின் அத்வைத விளக்கம் உண்மை நடப்புகளை ஒதுக்கித் தள்ளும் முறையின் உச்சமாகத் திகழ்கிறது என்கிறார் கோசாம்பி.  இக்கால இறைமை நூலார் புற உலகைப் பொய் என்று கூறி, புலனுணர்வுகளுக்கு அப்பாற்பட்ட சொல் விளக்கக் கோட்பாடுகளில் தங்களைச் சிக்க வைத்துக் கொண்டனர்  என்கிறார் கோசாம்பி.  இந்த அணுகுமுறை இந்தியாவில் இருந்த அறிவியல் நோக்குப் பார்வையை முற்றிலும் மழுங்க அடித்து விட்டது.  இந்தியாவிலேயே வளர்ந்த மருத்துவ முறையான, ஆயுர்வேதம் போன்ற துறைகளில் கூட, ஆய்வுக்குரிய தரமான நூல்கள் இல்லை என்கிறார் கோசாம்பி.   இக்காலத்தில் மூட நம்பிக்கைகளின் வளர்ச்சி அதிகரித்தது என்கிறார் கோசாம்பி.

இக்கால கட்டத்தில் பௌத்தம் எப்படி இருந்தது என்று பார்ப்போம். 


பௌத்தத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்

ஆடம்பரங்களை ஒதுக்கி எளிமையான வாழ்க்கையை, சடங்குகள் இல்லாத வாழ்க்கையை முன்னிறுத்திய புத்த மதம், புத்தர் இறந்த ஒரு நூற்றாண்டிலேயே மிகவும் மாறியது.  கடுமையான கட்டுப்பாடுகளுடன் இருந்த புத்த பிக்ஷுக்கள் பெரும் மாளிகைகளை மடாலயங்களாக அமைத்துக் கொண்டு, பட்டுத் துணி அணிந்து சௌகர்யமாக, மெய்ம்மை (reality) பற்றிய தர்க்க வாதங்களில் ஈடுபட்டு வந்தனர்.  புத்த மதத்தின் பழைய பாலி மொழிக் குறிப்புகளில், எப்படி சிவனும், விஷ்ணுவும், கணேசரும், புத்தரின் அறிவுரைகளை கவனமாகக் கேட்டார்கள் என்று கூறப் பட்டு இருப்பதை சுட்டிக் காட்டுகிறார் கோசாம்பி.  புத்தர் இந்த புத்த பிக்ஷுக்களை வந்து பார்த்து இருந்தால், இவர்களை எள்ளி நகையாடி இருப்பார் என்று சாடுகிறார்.  புத்த மத மடாலயங்களில் இருந்த சிற்பங்கள், அழகிய பெண்களையும், அவர்களது துணைவர்களையும் காமரசம் ததும்பும் பாவனையில் செதுக்கி இருப்பது, எப்படி இந்த மடாலயங்கள் வாழ்க்கை முறையில் வசதியுடன் இருந்தன என்பதை குறிக்கிறது என்று கூறுகிறார் கோசாம்பி. இதற்கு, ஹுயூன்-சுவாங் எழுதிய நாலந்தா பல்கலைக் கழக குறிப்புகளை சுட்டிக் காட்டுகிறார். வெகு விரைவில் புத்த மதம் பல்வேறு பிரிவுகளாக பிரிந்தது.  

சாஞ்சி ஸ்தூபத்தில்  செதுக்கப்பட்ட மதுவருந்தும் யௌன ஜோடி

ஆனால், பொருளாதார ரீதியில், இந்த புத்த மடாலயங்கள் ஒரு பெரும் வர்த்தகத் தேவையைப் பூர்த்தி செய்திருக்கலாம் என்று யூகிக்கிறார் கோசாம்பி.  இந்தக் காலத்தில் பெரும் செல்வந்தர்கள், புத்த மதத்தை தழுவிக் கொண்டனர் என்பதற்கு பல எழுத்து ஆதாரங்கள் உள்ளன என்கிறார் கோசாம்பி.  இந்தச் செல்வந்தர்கள் புத்த மதத்தில் சேர்ந்த போது அவர்கள், செல்வம் சேர்க்கும் அறிவையும் தங்களுடன் கொண்டு வந்தனர்.  அவர்களது செல்வமும், நிலங்களும், கால்நடைகளும் மடாலயங்களுக்கு வந்தன.  ஒவ்வொரு ஊரிலும் இருந்த மடாலயங்கள், இந்த செல்வங்களை நிர்வகிப்பதில் பெரும் திறமை அடைந்தன.  இந்த நிர்வாகத்தில் சேர்ந்த உபரியை, பஞ்ச காலத்தில், சுற்றி இருந்த உழவர்களுக்கு, கடனாகக் கொடுக்கும் வங்கியாகவும் திகழ்ந்திருக்கலாம் என்று கூறுகிறார் கோசாம்பி.  இது மாத்திரமின்றி, பல்வேறு வர்த்தகக் குழுக்களை, ஆதரிக்கும் வேலையையும், இந்த புத்த மத மடாலயங்கள் செய்திருக்கலாம் என்கிறார் கோசாம்பி.   பல மடாலயங்களில் எந்த சன்னலும் இல்லாத, பலத்த கதவுகளைக் கொண்ட நிலவறைகள் இருப்பதை இதற்கு ஆதாரமாகச் சுட்டிக் கட்டுகிறார்.  வாழ்க்கையைத் துறந்த புத்த துறவிகள் இந்த நிலவறைகளில் சேமித்து வைத்தது என்ன என்ற கேள்வியையும் எழுப்புகிறார்.  அது மாத்திரமின்றி, பெரும் புத்த மடாலயங்கள் எழுந்த இடம் பெரும்பாலும், வர்த்தகர்களின் பாதைகளில் இருந்தது என்றும் குறிப்பிடுகிறார்.   வர்த்தகர்களின் பண்ட மாற்றுக்கு, இந்த நிலவறைகள் உபயோகப் படுத்தப் பட்டு இருக்கலாம் என்று கூறுகிறார் கோசாம்பி.

அழிக்கப்பட்ட நாலாந்தாவின் உள்ளே இருக்கும் எழில் மிகு சிற்பங்கள்

மொத்தத்தில், சடங்குகளையே முன்னிறுத்திய இந்து மதத்திற்கு மாற்றாக, கடுமையான, எளிய, வாழ்க்கை முறையை வலியுறுத்தி வளர்ந்த புத்த மதம், கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்து விட்டது.  இருப்பினும், புத்த மதம், சமுதாய முன்னேற்றத்திற்குத் தேவையான ஒரு கருவியாகவும் திகழ்ந்தது என்கிறார் கோசாம்பி.
இந்த கால கட்டத்தில் மதங்களுக்கு இருந்த அரசியல் செல்வாக்கின் ஒரு தனிப் பண்பையும் நாம் இங்கே குறிப்பிட வேண்டும்.  இந்த காலகட்டத்தில் வாழ்ந்த அரசர்கள், புத்த மதத்தையும், இந்து மதத்தையும் ஒருங்கே ஆதரித்தனர் என்பது பல்வேறு ஆவணங்களில் இருந்து தெரிய வருகிறது.

பெரும் அரசர்களின் ஆதரவுகள் தொடர்ந்து இருந்தும் புத்த மதம் இந்தியாவில் தொடர்ந்து வளராமல் போனதற்கு முகலாயர்களின் சூறையாடல் ஒரு முக்கியக் காரணம் என்கிறார் கோசாம்பி. மேலும்,  இந்து மதம் புத்த மதத்தின் கொல்லாமை போன்ற அஹிம்சைக் கொள்கைகளை தன்னுள் வாங்கிக் கொண்டது.     எளிய மக்களுக்குக் கூட புரியக் கூடிய விஷயங்களைச் சொல்லி வந்த புத்தரின் மரபு,  மெய்ம்மையைப் பற்றிய குழப்பம் மிகும் வாதங்களை இந்து மதத்தினிடம் இருந்து பெற்றுக் கொண்டது. 

மொத்தத்தில், எளிய வாழ்க்கை முறையை போதித்த புத்தரின் வழிமுறையில் இருந்து விலகியதும், பிற்கால இந்து மதம், புத்த மதத்தின் சில அடிப்படைக் கூறுகளை தன்னுள் உள் வாங்கிக் கொண்டதும், புத்த மதம் படிப்படியாக இந்தியாவில் நீர்த்துப் போனதற்கான காரணங்கள் என்கிறார் கோசாம்பி.

இந்த முடியரசுகளின் வீழ்ச்சி வேறு பல பொருளாதார, அரசியல் சிக்கல்களையும் உருவாக்கி, நிலப்பிரபுத்துவத்திற்கு வழி வகுத்தது.

2 .மையப் பேரரசுகளின் சீர்குலைவும், கிராமங்களின் தேக்கமும்


தொடக்கத்தில் உணவு சாகுப்படிக்குரிய எல்லா நிலங்களும் கிராமத்தின் பொதுக் கட்டுப்பாட்டில் இருந்தன.  நிலங்களுக்கு தனியான மதிப்புக் கிடையாது.  வெகு அரிதாகவே, பணத்துக்கு மாற்றாக நிலங்கள் பரிமாறி கொள்ளப் பட்ட சான்றுகள் கிடைக்கின்றன என்கிறார் கோசாம்பி. 

காடுகள் சீரமைக்கப் பட்டு, புதிய கிராமங்கள் உருவாக்கப்பட்ட காலத்தில், இந்த வளரும் கிராமத்திற்கு பல தேவைகள் இருந்தன.  உதாரணமாக, உழுவதற்கான ஏரின் முனை, செம்மட்டி போன்ற கருவிகள், உழு குலத்தோரின் வீடுகளுக்குத் தேவையான துணிகள், பாத்திரங்கள் போன்றவை.  இவற்றைச் செய்து விற்பதற்கு, பெரும் வணிக குழுக்கள், இருந்தன. இந்த வணிகர்கள் கூட்டம் பெரும் செல்வாக்குடன் திகழ்ந்தது - சாத்து வணிகர் கூட்டம்.  இந்தச் சாதவாகனர்களின் காலத்தில் இந்தியாவின், தெற்குப் பகுதியும், கிழக்குப் பகுதியும் வளமுற்றன.  சாதவாகனர்களைத் தொடர்ந்து குப்தர்களின் ஆட்சி வந்தது.  குப்தர்களின் ஆட்சியே, இந்தியாவில் கடைசியான பெரும் முடியாட்சி எனலாம்.  முடியரசு ஆட்சியில், முறைப்படி வசூலிக்கப்பட்ட வரிகள், மன்னரை அடைந்தன.  மன்னர்கள், தங்கள் படை வலுவால், பொருளாதார அடிப்படைகளை நிர்ணயித்தனர்.  பெரும் நீர்த்தேக்கங்கள், வணிகத்திற்கு தேவையான சாலைகள், கிராமங்களையும், பெருநகரங்களையும் இணைக்கும் வேலையையும் எடுத்துச் செய்தனர்.  பெரும் நகரங்களில் கச்சாப் பொருட்களை (raw materials), வணிகப் பொருட்களாக (commercial goods)  மாற்றும் தொழில் வல்லுநர் குழுக்கள் நிறைந்திருந்தன.  இந்த காலகட்டத்தின் ஆரம்பித்தில் பாட்னா ஒரு பெரும் நகரமாகத் திகழ்ந்தது.  ஆனால், தொடர்ந்து அடுத்தடுத்து வந்த முகம்மதியரின் சூறையாடல்கள், இந்த மைய ஆட்சியின் வலுவை பெருமளவில் குறைத்தன.  வலுவான மைய ஆட்சி இல்லாதது, தொடர்ந்து வளர்ந்து வந்த கிராமங்களின் வளர்ச்சியில் ஒரு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது.

வணிகத்தின் நசிவும், தொழில் சார்ந்த சாதி அமைப்பும் 

வலுவான  மைய ஆட்சி இல்லை என்றாலும் காடுகளைத் திருத்தி கிராமங்களை உருவாக்கும் வேலை தொடர்ந்து செய்யப்பட்டது. கிராமங்களின் இயல்பான வளர்ச்சிக்கு, இந்த கிராமங்களை, இந்த கிராமங்களின் வணிக/வர்த்தகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நகரங்களுடன் சேர்க்க வேண்டும்.  அதற்கு, நல்ல வர்த்தக அடிப்படையும், வர்த்தகப் பரிமாற்றத்திற்கு, மக்கள் நம்பக் கூடிய தரமான நாணயங்களும் தேவை.  அசோகரின் காலத்திற்குப் பின்வெள்ளிக் காசுகளின் புழக்கம் பெருமாறு குறைந்து விட்டது.  பெரும் நகரங்களை கிராமங்களுடன் இணைக்கும் சாலைகளை அமைக்கும் வேலையைச் செய்யும் மைய அரசுகள் வலுவிழந்து இருந்தன.  வணிகப் பொருள் உற்பத்தி இல்லாமல் ஒவ்வொரு கிராமத்தின் தேவைகளை, அந்த கிராமத்தின் மிகச் சொற்பமான உபரியைக் கொண்டே பூர்த்தி செய்வதே இக்கால கட்டத்தின் பெரும் பிரச்னையாக இருந்தது.  

இந்தப் பிரச்னையை, சாதியை அடிப்படையாகக் கொண்ட கைத் தொழிலாளிகளின் முறை தீர்த்து வைத்தது.  ஒவ்வொரு கிராமத்திற்கும், பனிரண்டு கைவினைஞர்கள் - கருமார், தச்சர், குயவர், புரோஹிதர், நெசவாளி - ஒதுக்கப்பட்டனர்.  இந்த கிராமத்தின் நிலங்களுக்குத்  தனியார் உரிமை இல்லை.  இந்தத் தொழிலாளிகளுக்கு ஒவ்வொரு கிராமமும், தன் விளைச்சலில் ஒரு குறிப்பிட்ட பகுதியை வழங்கி விட வேண்டும் என்ற கிராம கட்டு திட்டங்களும் உருவாக்கப் பட்டன.  வேறொரு கிராமத்தில் அதே வேலை செய்த (அதே சாதியைச் சேர்ந்த) வினைஞர்களுக்கு இடையே ஒற்றுமை இருந்தது.  இப்படி, கிராமத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய சாதி அமைப்பு ஏற்பட்டது.  கிராமத்தின் தேவைகளை சாதியைக் கொண்டு தீர்த்ததால் தொழிலினக் குழுக்கள் நசிந்து போயின.  அற்பமான உப்பு போன்ற பண்ட மாற்றங்களைத் தவிர்த்து கிராமங்கள் எதற்கும் வெளி உலகை நாட வேண்டிய அவசியம் இல்லாமல், தனி ஒதுக்க நிலையை அடைந்தன.  

 படை பலங்கள் எல்லாம் அரண்மனை அதிகாரிகள், அல்லது பிற்காலத்தில் அந்தந்த வட்டார ஜமீன்தார்கள் வசம் இருந்து வந்தது.  ஒரு கிராம எல்லைக்குள் ஒருவர் கொள்ளையடிக்கப்பட்டால் அவருக்குத் தகுந்த நஷ்ட ஈடு கொடுக்கப்படும் போன்ற வழக்குகள் இருந்தன.  இந்த வழிமுறைகளை எடுத்து நடத்தும் கிராம ஜமீந்தாருக்கு/அதிகாரிக்கு தனி சலுகைகள், வரிகள் மூலம் வழங்கப்பட்டன.  இந்த வரிகள் அரசு அதிகாரிகளைச் சேர்ந்தது என்பதை பல ஆவணங்கள் உறுதி செய்கின்றன.   படிப்படியாக, இந்த நில உரிமைகள் பொதுக் கட்டுப்பாட்டில் இருந்து, தனிக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.  இந்த மாற்றத்தை, கோசாம்பி, வருமாறு அழகாய் விவரிக்கிறார்: " ஜமீன் அல்லது பாளையக்காரரின் முக்கிய வேலை எதோ ஒரு பழைய பழக்கத்தை மிகுந்த சிரத்தையுடன் கட்டிக் காப்பதாகக் கூறி, நிலவரியைத் தானியமாக வசூலித்து அதன் ஒரு பங்கை ரொக்கமாக மாற்றி அரசுக்கு அளிப்பதே!".  இது தவிர, சில பாளையக்காரர்கள் ஒரு சின்னப் படையை நிர்வகித்து, அரசருக்குத் தேவையான போது சண்டையில் பங்கிட அனுப்பியும் வந்தனர்.  அந்தப் படையை நிர்வகிக்கும் செலவுக்கு பதிலாக, நில உரிமையை மன்னரிடம் இருந்து சாசனமாகப் பெற்றுக் கொண்டனர்.  இப்படி கிடைத்த நிலங்களை உழுவதற்கு, வேலை ஆட்கள் மட்டுமே வைத்துக் கொல்லப்பட்டனர்.  இந்த வேலை ஆட்களுக்கு, இந்த நிலத்தின் மீது எந்த உரிமையும் இல்லை.  

இப்படிச் சிதறிக் கிடந்த கிராமங்களினால், ஒரு பெரிய காரியங்களை எடுத்து நடத்தும் திராணி இல்லாமல் இருந்தது.  அதனால், பெரும் நீர் தேக்கங்களோ, அணைகளோ கட்டப்பட வில்லை.  ஆங்காங்கு ஒரு சில கோயில்களும், இன்ன பிற சிறிய காரியங்கள் மட்டுமே செய்யப்பட்டன.  நிலப்பிரபுத்துவம், இந்தியாவில் காலூன்றியது.

இந்த நிலப்பிரபுத்துவ காலத்தின் அறம் எதுவாக இருந்தது என்று பார்ப்போம்.

3 . பக்தியும் விசுவாசமும்

 கோசாம்பி ஒரு சில பக்கங்களிலேயே இந்த காலகட்டத்தில் இருந்த அனைத்து பெரும் இலக்கியங்களைப் பற்றிய ஒரு நல்ல கோட்டுச் சித்திரத்தை அளிக்கிறார். இக்கால கட்டத்தில் இந்தியாவில் எழுதப்பட்ட சிறந்த இலக்கியங்களில் ஒன்று, "கீதை".  இதன் இலக்கிய நடையில் இருந்து, இது கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் முடிவில், அல்லது கி.பி. நான்காம் நூற்றாண்டின் ஆரம்பித்தில் எழுதப்பட்டு இருக்கலாம் என்று கூறுகிறார் கோசாம்பி.  (இதற்கு மேல், கீதையின் மீது, அதீத மரியாதை கொண்டவர்கள் படிக்காமல் இருப்பது நலம்).  பிற்காலத்தில் எழுதப்பட்ட கீதை, இடைச்செருகலாக, மகா பாரதத்தில் வைக்கப்பட்டது என்கிறார் கோசாம்பி.  சாந்தோக்ய உபநிஷதத்தில் தேவகியின் மைந்தனாக வரும் கிருஷ்ணர், கோரா அங்கீரசா என்ற முனிவரின் மனிதச் சீடர்.  இவரை, ஆசானாக, எல்லாம் உணர்ந்த தெய்வமாக உயர்த்தியது கீதை என்கிறார் கோசாம்பி.  கீதை அது வரை இந்தியாவில் எழுந்த அனைத்துத் தத்துவங்களையும், எந்த தர்க்க முறையும் இன்றி, ஒன்றன் பின் ஒன்றாக, எல்லாவற்றையும் தானே தோற்றுவித்ததாக பறை சாற்றிக் கொள்கிறார் கிருஷ்ணர்.  மகா பாரத காவியத்தில் கபட யோசனைகளை இடைவிடாமல் அளித்து வரும் கிருஷ்ணர், தான் போதித்த எந்த ஒழுக்கத்திற்கும் தகுதியானவர் இல்லை.  கீதையின் மூலத்தில் இருந்து பலதரப்பட்ட மக்கள், பல்வேறு வைககளான முடிவுகளை எடுக்க முடியும்.  அந்த முடிவுகள் ஒன்றுக் கொன்று நேர் எதிர்மாறனதாகவும் இருக்க முடியும்.  இப்படிக் குழம்பிய மூலத்தைக் கொண்ட கீதை, மக்களிடையே பெரும் செல்வாக்கைப் பெற்றதற்கான காரணம் என்ன?

கீதையின் உருவாக்கம்

கீதையின் பெரும் வெற்றிக்கான காரணம், கீதை போற்றி வந்த புதிய பக்திக் கோட்பாடே என்கிறார் கோசாம்பி.  இந்த காலத்தில் நிலவி வந்த நிலப்பிரபுத்துவக் கோட்பாட்டிற்கு இது மிகவும் பொருந்தி வந்தது.  பண்ணை ஆட்களையும், உழையர்கலையும், அவர்களது ஜமீந்தார்களுடன் கட்டிப் பிணிக்கும் கருவியாக, ஜமீந்தார்களை அவர்களது அரசர்களுடன் பிணைக்கும் கருவியாக பக்தி அல்லது விசுவாசம் விளங்கியது.  இந்த பக்தியே நிலப்பிரபுத்துவ சமுதாயத்திற்கு உரிய அடிப்படைக் கொள்கையாய்த் திகழ்ந்தது.  எட்டாம் நூற்றாண்டில் எழுந்த கல்வெட்டுகள் இந்த கருத்துக்கு ஆதராமைத் திகழ்கின்றன.  எஜமானர் இறந்த அந்த கணமே தானும் இறந்து போக வேண்டும் என்று பல அடிமைகள் (vassals) சபதமெடுத்துக் கொண்டனர்.  சுடு காட்டில் அரச குடும்பத்தினரின் பிணம் எரிந்து கொண்டிருந்த போது, அந்தத் தீயில் பாய்ந்து தன்னை மாய்த்துக் கொண்டவர்களைப் பற்றி, மார்கோ போலோ குறிப்பிட்டிருக்கிறார்.  பல்லவர்கள், கங்கர்கள், போன்ற தென்னாட்டு அரசர்களின் அரசவைப் பிரபுக்கள், தம் அரசரின் நலனிற்காக தங்களது தலையைக் காவு கொடுத்ததற்கான ஆதாரக் குறிப்புகளும் எட்டாம் நூற்றாண்டில் இருந்து கிடைத்துள்ளன.  சங்கரரின் வரவுக்குப் பிறகு கீதை மேல் நிலைக்கு உயர்த்தப்பட்டது.  கோசாம்பி, கீதைக்கு இந்தியாவில் உள்ள பெரும் மதிப்பை கொஞ்சமும் அங்கீகரிக்கவில்லை என்பது கீழ்க்கண்ட வரிகளில் இருந்து தெரிகிறது: " நெருங்கி வரும் பிரச்னைகளைத் தீர்க்க இந்தியாவின் அறிஞர் குலம் இன்னும் துடிப்புடன் கீதையைப் புரட்டுகிறது.  கீதை பெரும்பாலும் படிக்கப்படாமலேயே போற்றப்படுகிறது.  கீதையைக் கொண்டு மக்களின் பிரச்னைகளைத் தீர்க்கும் வழிகளைக் காண முயலும் போது, கீதையின் கௌரவம் மங்கி விடுகிறது... கீதையின் சொல் நயம், தனி அழகுணர்ச்சி ஆகியவை படிப்போர்க்கு இலக்கிய இன்பம் அளிக்கக் கூடியவை", என்கிறார் கோசாம்பி. 


பத்தாம் நூற்றாண்டின் இறுதியுடன் பண்டைய இந்தியாவின் வரலாற்றை முடிக்கிறார் கோசாம்பி.  இந்தப் புத்தகத்திற்கு பரிந்துரை எழுத ஆரம்பித்த போது இவ்வளவு பெரிதாக நீளும் என்று நாங்கள் நினைக்கவில்லை.  இருப்பினும், கோசாம்பியின் 'பண்டைய இந்தியா' இந்தியாவைப் பற்றிய புரிதலை அதிகரித்தது.  பல கேள்விகளையும் எழுப்பியது. 

2 comments:

Anonymous said...

Buy Tamil Books Online @ http://www.myangadi.com/

VIZHIVAZHI said...

முதலில் இப்பதிவிற்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இந்தியாவின் கடந்த காலம் கூட்டு முயற்ச்சிக்கு எந்த அளவு தடையாக இருந்துள்ளது என்பதை கோசாம்பியின் மூலமாக புரிந்துககள்ளமுடிகிறதிறது அர்த்த சாத்திரம் மன்னனின் ஆட் சி வசதிக்காக ஏற்படுத்தி இருந்தால் கூடி வாழும் மறைக்குஎதிராக இருந்துள்ளது அதன் காரணமாகவே முகமதியர்களும் ஆங்கிலேயர்களும் நம்மை எளிதில் அடிமை படுத்தி விட்டனர் இனிஆவது கீதை போன்ற குப்பைகளை ஓரங்கட்டிவிட்டு ஐக்கியதிற்காகன அறிவவியலை போதிப்போம் . நன்றி

Post a Comment