Friday, October 25, 2013

கற்பித்தல் – ஒரு நரம்பியல் சார்ந்த புரிதல்

கற்பித்தல்  – ஒரு நரம்பியல் சார்ந்த புரிதல் (Teaching: A Neurological Perspective)

Learning to Love Math: Teaching Strategies That Change Student Attitudes and Get Results

Judy Willis, MD, MEd
Publisher: ASCD
Price: 16.00 USD


 கல்வியின் இலக்கு எதுவாக இருக்க வேண்டும் என்பது ஒரு முக்கியமான கேள்வி.   நீங்கள் எதைச் சொல்லித் தர முடிவெடுத்தாலும், அதை எப்படிச் சொல்லித் தருவதென்பது அதற்கிணையான இன்னொரு கேள்வி. முனைவர் ஜூடி வில்லிஸ் இந்தப் புத்தகத்தில் குழந்தைகளுக்கு எப்படிக் கற்பிப்பது என்ற கேள்விக்கு, நரம்பியல் அடிப்படையில் சில கருதுகோள்களையும்,  வீட்டிலும்/வகுப்பறைகளிலும் நடைமுறையில் பயன்படுத்தக் கூடிய வழிகளையும் முன்வைக்கிறார்.  



ஆசிரியர் ஜூடி வில்லிஸ்
ஜூடி வில்லிஸ் ஒரு நரம்பியல் மருத்துவர் (Neurologist). குழந்தைகள் எப்படிக் கற்கிறார்கள், என்பதை நரம்பியல் ரீதியாக புரிந்து கொள்ள, பெரும் வருமானம் அளிக்கக் கூடிய நரம்பியல் மருத்துவர் வேலையை விட்டு விட்டு, குறைந்த வருவாய் தரும் இடை நிலைப் பள்ளி ஆசிரியராகப் பல வருடம் பணியாற்றினார்.   அவரது நரம்பியல் சார்ந்த பின்புலம், மாணவர்கள் கல்வி கற்கும் முறையை கறாரான அறிவியல் சார்ந்த கோணத்தில் ஆய்வு செய்ய உதவியது.   நம் மூளை எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றிய அடிப்படைப் புரிதல்கள் இருந்தால், ஏன் சில கற்பித்தல் (போதனை) முறைகள் பயனளிக்கின்றன, ஏன் சில  பயனளிப்பதில்லை என்று புரிந்து கொள்ளலாம் என்கிறார். இந்தப் புத்தகம் ஆரம்ப/இடை நிலை மாணவர்களுக்கு (எட்டாம் வகுப்பு வரை) கல்வி அளிப்பது குறித்து எழுதப்பட்ட புத்தகம் என்றாலும், கற்பித்தலில் ஆர்வம் உள்ள அனைவருக்கும் பயனளிக்கும் புத்தகமிது.
  
நம் மூளை வேலை செய்யும் விதம்:  

அழுத்தம் மற்றும் சலிப்பு இல்லாத சூழல் குழந்தைகளின் கல்விக்கு அவசியம் என  வாதாடுகிறார் ஜூடிஅவர் சொல்வதைப் புரிந்து கொள்ளள முதலில் நம் மூளை எப்படி வேலை செய்கிறது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியம்.

ஐம்புலன்கள் வெளி உலகத்தைப் பற்றிய தகவல்களை நம் உடலெங்கும் விரவியுள்ள நரம்புகள் வாயிலாக மூளைக்குத் தொடர்ந்து அனுப்புகின்றன. வயிறு, இதயம், சுவாசம் போன்றவற்றில் இருந்து வரும் நரம்புகள் நம் உடலின் இருப்பை/இயங்கும் விதத்தைப் பற்றிய தகவல்களையும் தொடர்ந்து மூளைக்கு அனுப்புகின்றன.  இப்படி, ஒவ்வொரு வினாடியும், பல கோடிக்கணக்கான தகவல்கள் தண்டுவடம் வழியாக மூளையை நோக்கிச் செல்லுகின்றன.  ஆனால், நம் மூளையால் இத்தனைத் தகவல்களையும் ஒரே சமயத்தில் பயன் படுத்த முடியாது.  நம் மூளை இரண்டு விதமான தகவல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது – உடலுக்கோ, உயிருக்கோ ஊறு விளைவிக்கும் தகவல்கள், அல்லது நமக்கு பெரும் இன்பம் அளிக்கும்/அளிக்கக் கூடிய சாத்தியம் உள்ள தகவல்கள்.  அதனால், எந்தத் தகவல்கள் முக்கியமானவை, எந்தத் தகவல்களுக்கு உடனடி கவனம் செலுத்த வேண்டும், எந்தத் தகவல்கள் இன்பம் அளிக்கும் சாத்தியத்தைக் கொண்டவை, என்ற தகவல் தரம்பிரித்தல் வேலையை, இரண்டு நரம்புச் சுற்றிகள் (neural circuits) செய்கின்றன.  (தண்டுவடமும் (spinal cord), மூளையும் சேரும் இடத்தில் இந்தச் சுற்றிகள் உள்ளன.  ஓன்றின் பெயர், RAS (Reticular Activating System) எனப்படும் நுண்வலையியக்க குவிப்பு மையம், இன்னொன்றின் பெயர், அமிக்டாலா (Amygdala) எனப்படும் ஆதிபாலூட்டி மூளையின் (paleomammalian brain) ஒரு பகுதி.


இந்தச் சுற்றிகளின் முக்கிய வேலை , உடலுக்கோ, உயிருக்கோ ஆபத்து அளிக்கும் தகவல்கள் வந்தால், அதிகச் சிந்தனை செய்யும் சக்தி வாய்ந்த முன் மூளைப் புரணிகளுக்கு (frontal cortex) இந்தத் தகவல்களை அனுப்பாமல், உடனடியாக எதிர் செயலாற்றுவது தான்.  விலங்குகள் தன் குஞ்சைக் காக்க தன்னிலும் பெரிய எதிரியை எதிர்த்தலும் (fight), பாம்பை மிதித்த மனிதனின் அதிவேக விலகலும் (flight), அதீத வெளிச்சத்தைக் கண்ட மான் உறைந்து நிற்றலும் (freeze), பல லட்சக்கணக்கான வருடங்களின் பரிணாம வளர்ச்சியால் நுட்பமாக சீரமைக்கப்பட்ட இத்தகைய எதிர்ச்செயல்களின் வெளிப்பாடுகளே. 

ஆசிரியர் சொல்லித் தரும் முறையினாலோ, பெற்றோர்களின் அதீத எதிர்பார்ப்போலோ, தவறாக ஏதாவது சொன்னால் தண்டிக்கப் படுவோம் என்ற அச்சத்தாலோ, பெரும்பாலான மாணவர்கள் வகுப்பறைகளில் உள்ளூர மன அழுத்தம் கொள்கிறார்கள்.   வகுப்பறையில் மாணவர்களின் ஓழுங்கற்ற நடவடிக்கைகள் (fight), பராக்குப் பார்த்தல் (flight), கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் நிற்பது/வகுப்பிலிருந்து முற்றிலும் விலகி இருத்தல் (withdrawal/freeze), போன்ற செயல்கள், மாணவர்களின் மன அழுத்தத்தின் பிரதிபலிப்புகளே.  கடும் அழுத்தத்தைத் தரும் எந்தத் தகவலையும் RAS, மற்றும் அமிக்டாலா, தண்டுவட நிலையிலேயே வடிகட்டி நிறுத்தி விடும். உடனடியாக எதிர்த்தல் / விலகல் /உறைதல் எனும் மூன்று உணர்வுப் பூர்வமான எதிர்வினைகளை மட்டும் செய்ய உதவும்.  இந்த உணர்வுப் பூர்வமான எதிர்வினையை மீறி, தகவல்கள் சிந்திக்கும்/பகுத்தறியும், கற்கும் சக்தி வாய்ந்த முன்மூளைப் புரணிகளுக்கு (pre-frontal cortex) சென்றடைவதே இல்லை.  முன் மூளைப் புரணிகளில் தான் தகவல்கள், தொகுக்கப்பட்டு (categorized), முன் அனுபவங்களுடன் ஒப்பிடப்பட்டு (compared), பகுக்கப் பட்டு (analyzed), உங்களது சொந்த ‘ஞானமாக’ சேமிக்கப்படுகின்றன.   முன்மூளைப் புரணிகளுக்குச் சென்றடையாத முறையில் சொல்லித் தரப் படும் எந்தக் கல்வி முறையாலும் மாணவர்களுக்கு ஒரு பயனுமில்லை.  

சலிப்படையாமல், அழுத்தமில்லாமல் இருந்தால், எந்தத் தகவலினாலும், நமக்கு ஏதாவது ஆதாயம் இருக்குமா என்று பரிசீலிக்கும் இயல்பான விழைவு (natural curiosity) நம் அனைவரிடமும் உறைந்துள்ளது. பதற்றமற்ற மன நிலையில் மாணவர்கள் இருக்கும் போது, வந்து சேரும் தகவல்களை வடிகட்டாமல் RAS/Amygdala எளிதாக மூளையின் சிந்திக்கும்/பகுத்தறியும் சக்தி வாய்ந்த முன்மூளைப் புரணிகளுக்கு (pre-frontal cortex) பகுதிகளுக்கு அனுப்பி விடும்.  முன்மூளைப் புரணிகள், இந்தத் தகவல்களை பகுத்தறிந்து, தமக்கு உபயோகமான ஒன்றாக இருக்கும் பட்சத்தில், அத்தகவலைச் சேமித்து வைத்துக் கொள்ளும். 

அது மாத்திரமல்ல, அமிக்டலாவின் இன்னொரு முக்கியப் பங்கு, வரும் எந்த ஒரு தகவலையும் உணர்வு ரீதியாக மதிப்பிடுவது.  இன்பமளிக்கும் தகவல்கள், நரம்புகளிடையே மின்ரசாயன பரிமாற்றங்களால் பரவும் போது, நம் மூளையில் அதிக அளவு டொப்பமைன் (Dopamine) சுரக்கிறது, இந்த அனுபவங்கள் இன்பமானவை என்பது நம் நினைவில் ஆழப் பதிந்து விடுகிறது.  (டொப்பமைன் குறைவாக சுரப்பது தான் மனஅழுத்தம் போன்ற நோய்களின் முக்கியக் காரணி).  அத்தகைய இன்பமளிக்கும் செய்கைகளை, நாம் தேடிக் கண்டு பிடித்துச் செய்ய முனைகிறோம்.  உங்கள் கவனிக்கும் திறனும், தொடர்ந்து ஒரு காரியத்தைச் செய்யக் கூடிய உத்வேகமும் (sustained motivation) கிடைக்கிறது.  தொடர்ந்து செய்யும் எந்தக் காரியமும், அந்தக் காரியத்துக்கான மின்ரசாயனத் தொடர்பை ஏற்படுத்தும் வென்பொருளை (White matter) சுற்றியிருக்கும், மயலின் (myelin) எனப்படும் உறையை வலுப்படுத்துகின்றன. மயலின் உறைகள் வலுவாக இருக்கும் மின்ரசாயனப் பாதைகள் பெரும் திறமை கொண்ட கலைஞர்களை, விளையாட்டு வீர்ர்களை உருவாக்குகிறது. கடுமையான உழைப்பு என்பது இயல்பாக, ஒரு இன்பத்தைத் தேடும் செயலாக மாறுகிறது.  இதையே, “Practice makes Permanent”,  என்று குறிப்பிடுகிறார் – ஆசிரியர் ஜூடி வில்லிஸ்.  ஆக, அழுத்தமற்ற சூழலில், கற்றல் இயல்பாக நிகழ்வது மட்டுமல்ல, அத்தகையக் கற்றல், இன்பமளிக்கும் செயலாக இருப்பதால், அந்தக் கற்றலுக்கு நம் மூளை அதிக முக்கியத்துவமும் அளிக்கிறது; அதனால் தான் நீங்கள் எப்போதோ கேட்ட, சினிமாப் பாடல், 20 ஆண்டுகளுக்குப் பிறகு கூட உங்கள் மனதில் நிற்கிறது. ஆனால், சென்ற வருடம் கல்லூரியில் படித்த நுண்கணிதம் நினைவில் நிற்பதில்லை.  

அச்சத்தை பின்புலமாகக் கொண்டு மிக அழுத்தமான சூழலில் கற்பிக்கப்படும் கல்வி, முன் மூளைப் புரணிகளின் முழு சக்தியைப் பயன்படுத்திக் கொள்வதில்லை.  இத்தகைய கல்வி முறை ஒரு குறுகிய கால வெற்றியை/செயல்திறனை (short term success /performance) அளிக்கக் கூடும். இந்த முறையில், தகவல்களை மனனம் செய்து, கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும்.  அவ்வளவே.  முன் மூளைப் புரணிகளால் தொகுக்கப்படாத, முந்தைய அனுபவத்தோடு ஒப்பிடப்பட்டு, பகுக்கப்பட்டு, சுய அறிவாக மாறாத எதுவும், வெறும் தகவல்களாக, பிறர் கூறிய வாய்ப்பாடாக மட்டுமே இருக்க முடியும். கற்பிக்கப்படும் எதையும் குழந்தைகளின் மூளை அதனால் ஏதாவது இன்பம் கிடைக்கும் என்று உணர்ந்தால் மட்டுமே, அந்தத் தகவல்கள் உண்மையில் முன் மூளைப் புரணிகளால் மதிக்கப்படும்.  இந்த உயிரியல் ரீதியான கட்டமைப்பை நீங்களே விரும்பினால் கூட மாற்றியமைக்க முடியாது .  

ஆசிரியர் ஜூடி வில்லிஸ் வெறும் நரம்பியல் சார்ந்த கற்பித்தல் பற்றிய கோட்பாட்டை மட்டும் இந்தப் புத்தகத்தில் தரவில்லை.  இந்தக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, வகுப்பறைகளில் நடைமுறையில் செயல்படுத்தக் கூடிய, ஆசிரியர்களுக்குப் பயனளிக்கக் கூடிய பல  உத்திகளை இந்தப் புத்தகத்தில் முன் வைக்கிறார்.  அவர் சொல்லும் முறைகளின் சிலவற்றைப் பார்ப்போம்.

பதற்றமற்ற / சலிப்பற்ற வகுப்பறைளை உருவாகுவது எப்படி:

வகுப்பறைகளில் பெரும்பாலான மாணவர்கள் பதற்றத்தோடு அல்லது சலிப்படைந்த நிலையில் இருக்கிறார்கள்.  கொஞ்சம் சுமாராக படிக்கும் மாணவர்கள்: “இந்தக் கேள்விக்கு தவறான பதில் கொடுத்து விடுவோமா”, என்ற அச்சமும், “இது நமக்கு உண்மையிலேயே தெரியுமா?”, என்ற தன்னம்பிக்கைக் குறைவும்  உருவாக்கும் பதற்றத்தோடு இருக்கிறார்கள்.  அதே போல், நன்றாக படிக்கும் மாணவர்கள், “இதெல்லாம் எனக்கு முன்பே தெரியுமே” என்று சலிப்படைந்த நிலையில் இருக்கிறார்கள்.  இந்தப் பதற்றமும், சலிப்பும், தற்கால கல்விமுறை, தேர்வுகள்/மதிப்பெண்கள் மூலம் மட்டும் மதிப்பிடும் முறையில் இருந்து எழுகிறது.  இந்தச் சூழலில் கல்வி கற்பது நிகழாது.  இதை மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம், செயலுக்கும், அந்த செயலுக்கான பலனுக்கும் உள்ள தொடர்பை விளக்க வேண்டும்.  உதாரணமாக, குழந்தைகளிடம் அவர்களுக்கு பிடித்தமான விளையாட்டு, அல்லது பொழுது போக்கு என்னவென்று ஆசிரியர்கள் கேட்கலாம்.  உதாரணமாக, ஒரு குழந்தை,  “எனக்கு கூடைப் பந்து விளையாடுவது பிடிக்கும்”, என்று சொன்னால், அந்தக் குழந்தையிடம், “நீ முதலில் கூடைப்பந்து விளையாட ஆரம்பித்ததை விட, இப்போது நன்றாக விளையாடுவதற்கு என்ன காரணம்?” என்று கேட்கலாம்.  இந்த மாதிரி, மொத்த வகுப்பில் ஒவ்வொரு மாணவரும், அவர்கள் தங்களுக்கு பிடித்த காரியத்தை செய்ய ஆரம்பித்த போது இருந்த நிலைக்கும், தற்போது இருக்கும் நிலைக்கும் உள்ள வித்தியாசத்தைச் சொல்ல வைக்கலாம்.  ஆசிரியரும், தன் அனுபவத்தில் இருந்து ஒரு உதாரணத்தைக்  கூறலாம்.  இதன் முக்கிய பயன், “ஆரம்பத்தில் தடுமாறுவது கற்றலின் இயல்பான நிலை”, என்று மாணவர்கள் உள்ளூர உணர்வார்கள்.  இதை ஆசிரியர்கள் மென்மையாக ஆனால் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.  அதே போல், மாணவர்கள் முதலில் ஒரு புதிய பாடத்தைப் புரிந்து கொள்ள தடுமாறும் போது, ஆசிரியர் அவர்களது தடுமாற்றத்தை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.  மாணவர்கள் அதைப் புரிந்து கொண்ட பின்னர், அவர்களது தேர்வு முடிவுகளைச் சொல்லும் போது, “அட இந்த வகுப்பா, மூன்று வாரத்திற்கு முன்னால் இதை கற்றுக் கொள்ள தடுமாறிக் கொண்டிருந்தது?”, என்று விளையாட்டாக நினைவுறுத்தலாம்.  மாணவர்கள் தவறு செய்வது கற்றலின் இயல்பான நிலை என்று உணரும் போது, வகுப்பறையில் நிலவும் பதற்றம் வெகுவாக குறையும்.   அதே போல், குழந்தைகளிடம், “இந்தத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறாத எவரும் மீண்டும் இந்தத் தேர்வை எடுத்துக் கொள்ளலாம்”, என்று அனுமதி கொடுப்பதே அவர்களுக்கு தைரியத்தை அளிக்கும்.  தேர்வு குறித்த பதற்றத்தைக் குறைக்கும்.  இப்படிச் சொன்னால், மாணவர்கள் பொறுப்பில்லாமல் போய் விடுவார்கள், என்று கருதும் ஆசிரியர்களுக்கு, " இரண்டு தேர்வுகளின் சராசரியை, மதிப்பெண்களாக வழங்கலாம்", என்று ஆலோசனை அளிக்கிறார்.

அதே போல், தேர்வுகளில்/வகுப்பறைகளில், மாணவர்களுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும்.  தேர்வில், மாணவர்களை, உங்களுக்குப் பிடித்த 10 கேள்விகளுக்கு விடையளியுங்கள், என 15 கேள்விகள் கொண்ட வினாத் தாளை அளிக்கலாம்.  15 கேள்விகளுக்கும் விடையளிக்கும் வாய்ப்பை நன்றாகப் படிக்கும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பும் இருக்கும்.  நன்றாக படித்து, தேர்வுகளை விக வேகமாக முடித்து விடும் புத்திசாலி மாணவர்களுக்காக, தேர்வின் கடைசிக் கேள்வியாக “நேரமிருந்தால், நீயே ஒரு கேள்வியை/அதற்கான பதிலை உருவாக்கு”, என்ற சவாலை முன்வைக்கலாம். அந்த மாணவர்கள், உருவாக்கும் கேள்வி/பதிலை, அவர்களைக் கொண்டே, வகுப்பறையில் விளக்கச் சொல்லலாம்.  இத்தகைய அங்கீகாரம், மாணவர்களிடம், தங்கள் சிந்தனையை பிறருக்கு விளக்கிக் கூறும் முக்கியமான பயிற்சியை அளிக்கும்.   

இந்த மாதிரியான அணுகுமுறைகளை வகுப்பறையில் செயல்படுத்துவதற்கு அதிக பணச் செலவோ, பொருட்செலவோ கிடையாது.  ஆசிரியர்களின் முனைப்பு மட்டுமே தேவை.  எந்தச் சூழலில், கற்றல் நிகழ வாய்ப்பு உள்ளது என்ற புரிதல், கல்வி முறையின் செயல்பாட்டை மாற்றி அமைக்கும் சக்தி வாய்ந்தது.

வெல்லக்கூடிய சவால்கள் (Attainable challenges):

ஒரு பத்து நிமிடம் உட்கார்ந்து ஒரு பாடத்தைப் படிக்க மறுக்கும் தம் குழந்தைகள், மணிக்கணக்கில் உட்கார்ந்து முசுவாக கணினியில் விளையாடுவது எப்படி?  இது பெரும்பாலான பெற்றொர்களுக்கும் / ஆசிரியர்களுக்கும் புரியாத புதிர்.  ஆசிரியரகளும் / பெற்றோர்களும் கணினி விளையாட்டுகளில் இருந்து கல்வி அளிக்கும் முறையை கற்றுக் கொள்ள முடியும் என்கிறார்.

பிரபலமான எல்லாக் கணினி விளையாட்டுகள் அனைத்திற்கும் ஒரு பொது இயல்பு இருப்பதை நீங்கள் பார்க்க முடியும்.  அந்த விளையாட்டுகளில், ஒரு படி நிலையில் (Level) இருந்து இன்னொரு படி நிலைக்குச் செல்வதற்கு, முந்தைய படி நிலையில் குறைந்த பட்சம் 80 சதவிகித சவால்களை வெல்ல வேண்டும்.  அப்படி வென்றால் தான், அடுத்த படி நிலைக்குச் செல்ல முடியும். புதிய  படி நிலையில் சவால்களின் சிரமம் முந்தைய படி நிலையைக் காட்டிலும் கொஞ்சம் அதிகரிக்கிறது.  இந்தச் சவால்கள் அடையக்கூடியவை – ஆனால் எளிதானவையும் அல்ல.  இத்தகைய அடையக்கூடிய சவால்களே குழந்தைகளை ஈர்க்கின்றன.  அந்தச் சவால்களை வென்ற உடனேயே குழந்தைகளின் வெற்றி அங்கீகரிக்கப் படுகிறது.  அந்த உடனடி அங்கீகாரம், ஒரு நேர்மறையான/இன்பம் அளிக்கும் செயலாக இருக்கிறது. 
அதனால், சிரமமான ஒன்றாக இருந்தாலும், அது வெல்லக்கூடிய சவால் என்று நம் முன்மூளைப் புரணிகளுக்குத் தெரியும் போது, தொடர்ந்து அந்தக் காரியத்தைச் செய்வதில் முனைப்பு காட்ட முடிகிறது.   எனவே, ஒரு ஆசிரியரின் கற்பிக்கும் முறை, படிப்படியாக கடினமாகும் முறையில் அமைந்திருப்பது அவசியம்.  ஒவ்வொரு படி நிலையிலும், மாணவர்களுக்கே தம் முன்னேற்றம் புலப்பட வேண்டும்.   அவர்கள் அடையும் வெற்றிகள் கொண்டாடப்பட வேண்டும்.  அந்தக் கொண்டாட்டம், அது அவர்களுக்கு தொடர்ந்து படிப்பதற்கான உத்வேகத்தை அளிக்கும் என்று ஆசிரியர் ஜூடி கூறுகிறார்.  

இதன் தொடர்ச்சியாக, இன்ன பாடத்தை படிப்பதால், இன்ன  பயன் என்பது மாணவர்களுக்குப் புலப்பட வேண்டும். அதற்கேற்ற முறையில் கேள்விகளை அமைக்க வேண்டும்.   ஏன், வட்டத்தின்  பரப்பளவை கணக்கிடுவதில் பல கலாச்சாரங்கள் ஆர்வத்துடன் இருந்தன, என விளக்கும் போது அந்தக் கல்வியின் தேவை மாணவர்களுக்குப் புரியும்.  அத்தகைய கல்வி, தகவல்களை மட்டும் அளிப்பதில்லை; இந்த மாதிரியான கடினமான கல்விக்கான தேவைகள் எப்படி எழுகின்றன?  அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்ய எழுந்த கருத்துக்கள் எப்படி உருவாகின என்ற பகுத்தல்/தொகுத்தல்/ஒப்பிடுதல் போன்ற உயர் நிலை சிந்திக்கும் திறனையும் இயல்பாக வளர்க்கிறது.   

பல்லுணர்வுக் கல்வி முறை (Multi-Sensory Education):

40 வயதுக்கு மேலானோர் கற்ற கல்வி முறைக்கும், தற்கால தலைமுறையைச் சார்ந்த குழந்தைகள் கற்பதற்கும் இடையே பெரும் வேறுபாடுகள் உள்ளது என சமகால நரம்பியல் ஆய்வு கூறுகிறது.  சென்ற தலைமுறையில் கல்வி கற்ற முறை, செவி வழி (auditory), வாய் வழி (verbal), மொழி வழி (linguistic) சார்ந்தது. நீங்கள் வாய்பாட்டை, சத்தமாய் ராகத்தோடு சொல்லிக், கேட்டுத் தானே கற்றீர்கள்?  ஆனால், இந்தத் தலைமுறை மாணவர்கள், கற்கும் வழி, கண் வழி (visual), தொடு வழி (tactile), உடலசைவு (kinesthetic) சார்ந்தது என்கிறார் ஜூடி.   எனவே, நீங்கள் கற்ற முறையில் அவர்களுக்கு கல்வி கற்றுத் தர முயல்வது, பெரும் ஏமாற்றத்தையே அளிக்கும்.  இந்தத் தலைமுறை குழந்தைகள் கற்றுக் கொள்ளும் விதத்திற்கு ஏற்ப கல்வி முறை மாற வேண்டும்.  கணினிகளையும், விளையாட்டுப் பொருட்களையும், கல்விக்காக பயன்படுத்தத் தயங்கக் கூடாது.  

நம் மூளையில் உள்ள RAS வடிகட்டி, எப்போதும் இன்பமளிக்கக் கூடிய சாத்தியமுள்ள ஒரு புதிய வாய்ப்பிற்கு (novelty seeking) காத்திருக்கிறது.  அதனால், ஆசிரியர்கள் சொல்லித் தரும் போது, வித்தியாசமான குரலில் பேசுவது, பாடுவது, கணினியில் ஒளிப்படங்கள் காட்டுவது, போன்ற வித்தியாசமான செய்கைகள் மாணவர்களை வகுப்பறையில் கவனம் கொள்ளச் செய்யும்.  அதே போல், மாணவர்களை, பெஞ்சில் கட்டிப் போட்டு வைக்காமல், அவர்கள் உடலசைவையும் கல்வி முறையில் எளிதாகக் கொண்டு வரலாம்.  ஆசிரியர் ஒரு பந்தை மாணவர்களிடம் எறியலாம்.  அதைப் பிடிக்கும் மாணவர், அந்த வகுப்பில் சொல்லித் தந்த ஒரு கருத்தை சத்தமாகச் சொல்ல வேண்டும்.  சொல்லி முடித்த பின்னர், அவர் அந்தப் பந்தை இன்னொரு மாணவரிடம் எறியலாம். அதைப் பிடிக்கும் மாணவர், அந்தப் பாடத்திலிருந்து இன்னொரு கருத்தைச் சொல்ல வேண்டும்.  இப்படிச் செய்வது, மாணவர்களை வகுப்பறையில் இயல்பாகவே கவனம் செலுத்த வைக்கும்.  

வகுப்பறையில் ஆசிரியரின் கேள்விக்கும், மாணவர்கள் பதிலளிப்பதற்கும் இடையே குறைந்த பட்சம்  ஐந்து /பத்து வினாடிகள் கட்டாய இடைவெளி அளிப்பது எல்லா மாணவர்களையும், அந்த இடைவெளியின் போது சிந்திக்க வைக்கும்.    சிந்திக்கும் மூளையில் மட்டுமே தகவல்கள், ஞானமாக மாறும் வாய்ப்பு உள்ளது.  இல்லாவிட்டால், நன்றாக படிக்கும் ஒரு சில மாணவர்கள் கையைத் தூக்கிக் கொண்டு பதிலளிக்கக் காட்டும்  அதி ஆர்வம் பிற மாணவர்களைச் சோர்வடையச் செய்யும்.  அவர்களின் கற்றலுக்கு அது  ஒரு தடையாக அமையும். இப்படிப் பல நடைமுறையில் எளிதில் பயன்படுத்தக் கூடிய யோசனைகளை, ஆசிரியர் ஜூடி, வழங்குகிறார்.

முக்கியமாக, இந்த அணுகுமுறை, கல்வியை எளிமைப் படுத்தும் முயற்சியில்லை. கல்வியின் தரத்தை குறைக்கும் முயற்சி இல்லை. புத்திசாலித்தனமாக, குழந்தைகள் மனதில், தகவல்களைத் திணிக்கும் உத்தி இல்லை.  பல லட்சக் கணக்கான வருடங்களின் பரிணாம வளர்ச்சியில், நம் மூளையில் சில அடிப்படை செயல்பாட்டுக் அலகுகள் (functional units) நுட்பமாக அமைக்கப் பட்டுள்ளன. இந்த அலகுகளை மீறி, கற்பிப்பது என்பது கடினமான செயல்.  அதைத் தான் நாம் பெரும்பாலும் கல்விக் கூடங்களில் பெரும் செலவில் (பண/நேர/உணர்வு) செய்ய முயற்சிக்கிறோம்.  அத்தகைய கல்வி முறையில் வெற்றியடைவோர் சிலரே.  அப்படி, வெற்றியடைபவர்களிலும் வெகு சிலரே, கற்றலை ஒரு இன்பமளிக்கும் செயலாக, வாழ் நாள் முழுவதும் தொடரக் கூடிய ஒரு செயலாகக் கொள்கிறார்கள்.  உங்களைச் சுற்றியுள்ள கல்வியில் 'வெற்றியடைந்த' பலரைப் பாருங்கள்.  படித்து, நல்ல மருத்துவராகவோ, பொறியாளராகவோ, ஆன பின்னர், எத்தனை பேர், தொடர்ந்து கற்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள்?  இது ஏன் என்று யோசித்தால், அது நம் அழுத்தம் நிறைந்த கல்வி முறையைத் தான் சுட்டும் என்பதில் சந்தேகமில்லை. 


கற்றலைப் பற்றிய நரம்பியல் சார்ந்த புரிதல், நம் கல்வி முறையை எளிதாக்கும். தங்களது மூளை எப்படி வேலை செய்கிறது, என்பதை அறிந்து கொண்ட மாணவர்கள், வகுப்பறையில் தாம் கொள்ளும் பதற்றத்தின்/சலிப்பின் மூலத்தை உணர்ந்து கொள்வார்கள்.  அந்தப் புரிதலே, அவர்களது RAS/Amygdala வின்,  உயர் நிலை சிந்தனையற்ற எதிர்வினையாற்றும் இயல்பை குறைத்து விடும்.  முன் மூளைப் புரணிகளுக்கு தகவல்கள் செல்வது இயல்பான ஒன்றாக மாறி விடும், என்கிறார் ஜூடி வில்லிஸ். 

இதில் என்ன புதுமை இருக்கிறது?  இதைத் தானே கல்வியாளர்கள் நீண்ட காலமாக சொல்லி வருகிறார்கள், என்ற கேள்வி எழுவது நியாயமே.  நல்ல கல்வியாளர்கள் சொன்ன உத்திகள், பெருமளவு வகுப்பறைகளில் பயனளிக்கின்றன என்றாலும், ஏன் அந்த உத்திகள் பயனளித்தன என்ற கேள்விக்கு, என்பதற்கு ஊகங்களும், தனி மனித அனுபங்களும் மட்டுமே பதிலாக இருந்தன.  ஜூடி வில்லிஸ் போன்றவர்கள், இந்தக் கேள்விகளுக்கு புறவயமாக நிர்ணயிக்கப் படும் சாத்தியம் கூடிய, ஒரு பதிலை அளிக்க முயல்கிறார்கள்.  இதை இப்படிச் சொல்லலாம்.  ஒரு கருவி எப்படி வேலை செய்கிறது என்பதைப் புரிந்து கொள்ளாமலே கூட, அந்தக் கருவியைத் (திறமையாகக் கூட) பலரால் பயன்படுத்த முடியும்.  ஆனால், அந்தக் கருவி எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்து கொள்ளும் போது, அந்தக் கருவியின் முழு சாத்தியத்தையும், அந்தக் கருவியின் குறைகளயும் உணர முடியுமல்லவா? இத்தகைய நரம்பியல் சார்ந்த புரிதல், கல்வி முறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.  ஆனால்,  மனிதர்களின் மனத்தை வெறும் மூளை பற்றிய புறவயமான ஆய்வுகளால் புரிந்து கொள்ள முடியாது என்பது, இத்தகைய நரம்பியல் சார்ந்த புரிதல்களின் எல்லை.   இத்தகைய புறவயமான நரம்பியல் சார்ந்த அணுகுமுறைகைளை கடுமையாக நிராகரிக்கும் கல்வியாளர்களும் உண்டு.  அத்தகைய கல்வியாளர் ஒருவரின் கருத்துக்களை  இன்னொரு பதிவில் பார்ப்போம்.  ஜூடி வில்லிஸ் இந்தச் சச்சரவுக்குள் நேரடியாக நுழையாமல், தன் கருத்துக்களை, அவற்றின் எல்லையை உணர்ந்து முன்வைத்துள்ளார்.  




இந்தப் புத்தகம், ஆரம்ப நிலை/இடை நிலைக் கல்வி சொல்லித் தரும் அனைத்து ஆசிரியர்களும், கல்வி மீது அக்கறை கொண்ட அனைவரும், அவசியம் படிக்க வேண்டிய ஒன்று.  ஆரம்ப நிலை/இடை நிலை வகுப்பில் படிக்கும் குழந்தைகள் உள்ள பெற்றோர்களும் பயனளிக்கும். 

கற்றுக் கொள்வதை முழுமையாக  விரும்பிச்  செய்யும் மாணவன் (கல்வியை ஒரு பொருளீட்டும் மார்க்கமாக  சுருக்காமல்), இயல்பாகத் தன் வாழ்க்கையை வாழவும் கற்றுக்கொள்வான்.  அதுவே உண்மையான கல்வியும் கூட!


தொடர்புடைய சுட்டிகள்:

1. ஆசிரியர் ஜூடி வில்லிஸ்.
2. ஆசிரியர் ஜூடி வில்லிஸின் சில ஒளிப் படங்கள்
3. கணிதக் கல்வி பற்றி ஆசிரியர் ஜோ போளர்.
4. ஆளுக்கொரு கிணறு
5. பெருகும் வேட்கை
6. கல்வி என்பது .. (ஜெ. கிருஷ்ணமூர்த்தி)

3 comments:

senthildyfi said...

Mikka nari

senthildyfi said...

Puthakam Tamilakkam Kitaikuma Thozhaa

Raja M said...

புத்தகம் இன்னும் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை. முடிந்த வரை புத்தகத்தின் சாரத்தை தமிழில் சொல்ல முயன்றிருக்கிறேன். இது பற்றி ஏதாவது மேலதிகத் தகவல்கள் கிடைத்தால் அவசியம் இங்கே பதிவு செய்கிறேன்.

அன்புடன்
ராஜா

Post a Comment