Thursday, April 29, 2010

வானம் வசப்படும் (சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நாவல்)

வானம் வசப்படும்
(சாகித்ய அகாதமி பரிசு பெற்றது)
எழுத்தாளர்: பிரபஞ்சன்
பதிப்பகம் : கவிதா பப்ளிஷர்ஸ்
பக்கங்கள்: 706

புதுச்சேரி பற்றிய வரலாற்று நாவலான 'மானுடம் வெல்லும்' என்ற  நூலின் தொடர்ச்சியாக வந்தது 'வானம் வசப்படும்'.  இதைத் தனி நாவலாகப் படிப்பதை விட, தேவையான பின்புலங்கள்  அடங்கிய முதல் நாவலின் தொடர்ச்சியாகப் படிப்பது உத்தமம்.  சிறந்த நூலுக்கான இந்திய அரசின் சாகித்ய அக்காதமி பரிசுடன், மாநில அரசுகளின் பல்வேறு பரிசுகளையும்
வென்றது.  தகவல் தொடர்பு இல்லாமலேயே, பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வந்த வெள்ளையர் இந்தியாவில் கடைக்கால் நாட்டிய  சூட்சுமத்தை அறிய விரும்புவோர் வாசிக்க வேண்டிய அற்புதமான சமூக அரசியல் நாவல் இது. புதுச்சேரி கவர்னருக்கு அடுத்தபடியாக இருந்து அதிகாரம் செலுத்திய துபாஷ் ஆனந்தரங்கரின் நாட்குறிப்பை ஒட்டி எழுதப்பட்ட நூலாகையால், ஒரு மிக முக்கியமான (1742 -1754 ) வரலாற்றுக் காலக்கட்டத்தின் 'insider -view ' வாசகருக்குக் கிடைக்கிறது.  வரலாறு என்றில்லாமல், ஓர் இலக்கிய நூலாக வாசித்தாலும், வாசகருக்குப் பரமானந்தம் கிட்டும் (இதற்கு ஞான் கியாரண்டி).  ஆனந்த ரங்கர் தம்முடைய நாட்குறிப்பில் அன்றன்று நிகழ்ந்த அரசியல், சமூக செய்திகள், மற்றும் தாம் கண்ட அனைத்தையும் பதிந்து வைத்ததால் அவரது நாட்குறிப்பு ஒரு சமூக வரலாற்று ஆர்வலருக்கு மாபெரும் பொக்கிஷமாகத் திகழ்கிறது.  அதையொட்டி பிரபஞ்சனும் இந்த நாவலில் அரசியல் கதைக்கு இடையில் ஆங்காங்கே அதையொட்டி வந்த சமூக நிகழ்வுகளையும் நாம் சுவைக்குமாறு நெய்து கொடுத்திருக்கிறார். அக்காலத்திய புதுச்சேரி வட்டார வழக்கில் கதை மாந்தர்கள் உரையாடுவது  இந்த நாவலில் காணப்படும் ஒரு விசேஷம்.

அரசாங்க வேலை, சமுதாய சேவை, வாணிபம் இவைகளுக்கு மத்தியில் ரங்கப்பரின் இலக்கிய நாட்டம் பற்றியும் பிரபஞ்சன் இந்தப் புதினத்தில் அழகாகப் பதிந்து வைத்திருக்கிறார்.  ஆனந்தரங்கரிடம் பொருள்நாடி வந்திருக்கும் கவிராயரின் நிலையை வரைகிறார் பாருங்கள்.
"பாடலுக்குப் பொருள் சொல்கிற வியாஜ்ஜியமாக கவிராயர் தாம் வந்த உத்தேசத்தை வெளிப்படுத்திவிட்டு, தரையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். சொல்லி முடித்த பிறகு, பிள்ளையின் முகத்தைப் பார்க்கக் கவிராயரால் இயலவில்லைதான். ஒவ்வொரு முறையும்  நேர்கிற அனுபவம்தான் அது.  வாய்விட்டு யாசகம் கேட்ட பின்பும், கேட்கப்பட்ட பிரபு தம் பதிலைச் சொல்லு முன்னமும் ஆகிய இடைப்பட்ட சில கணங்களில் அவர் உயிர் துடித்து, மரணாவஸ்தை கொள்ளும். "
"கவிராயரே எதுக்குப் பறக்கிறீர், இருமேன், விடிஞ்சி போகலாம் " என்று ரங்கப்பர் கேட்டதற்கு,

"கொக்குப் பறக்கும்;புறா பறக்கும்
    குருவி பறக்கும் குயில் பறக்கும் 
நக்குப் பொறுக்கிகளும் பறப்பர்
    நானேன் பறப்பேன் நராதிபனே..?

திக்குவிஜயம் செலுத்தி, உயர்
    செங்கோல் நடத்தும் அரங்கா! நின்
பக்கம் இருக்க ஒரு நாளும்
    பறவேன், பறவேன், பறவேனே.

என்று ஆனந்த ரங்கர் மீது கவிராயர் பாடிய பாடல் இன்றளவிலும் புகழ் பெற்றது.

அரசியல் சேதிக்குறிப்புகள்
புதுச்சேரிக்குப் புதியதாய் வந்திருக்கும் குவர்னர் துய்ப்ளெக்சை ஆனந்தரங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்பதில் ஆரம்பிக்கிறது இந்த நாவல்.  அதிலிருந்து, இந்திய மண் எப்படி அந்நிய ஆதிக்கத்துக்குள் செல்லத் தொடங்குகிறது என்பதை அற்புதமாக விவரிக்கிறது மீதம். துய்ப்ளெக்ஸ் குவர்னராக இருந்த காலத்தில் புதுச்சேரியே இந்தியாவின் அரசியல் தலைநகராக இருந்தது.  அப்போதைய இந்தியாவின் பெரும்பகுதியை ஆண்ட மராத்தியரும் ஆர்க்காட்டு அரசரும் இந்த பிரெஞ்சு ஆட்சியாளரிடம் கொஞ்சம் பயத்துடனே இருந்து வந்தனர். கிளியோபாத்ராவின் மூக்கு சற்று வளைந்திருந்தால் உலக வரலாறே மாறியிருக்கும் என்பது போல, ஒன்றிரண்டு விஷயங்கள் மாறி நடந்திருந்தால், இந்தியா முழுமையும் பிரெஞ்சு நாட்டவரிடம் அடிமையாகி இருந்திருக்கும். வரலாறு அப்படி ஒன்றும் 'multiple சாய்ஸ் ' கொடுத்துப் பாடம் நடத்துவதில்லைதானே. ஆனால், எப்படியும் ஒரு வெள்ளையரிடம் அடிமைப்படப் போவது நாட்டின் தலைவிதியாக இருந்திருக்கிறது. சொல்லிவைத்தாற்போல் பிரெஞ்சு காலனியின் துய்ப்ளெக்ஸ் மற்றும் ஆங்கிலக் காலனியின் ராபர்ட் கிளைவ் ஆகியோரின் வரவு இந்தக் காலக்கட்டத்தில்தான் நிகழ்கிறது. அப்போது வடக்கே மராத்தியரும் வலுவிழக்க ஆரம்பித்த நேரம், நாடு அன்னியர் வசம் செல்லக் கனிந்த நேரம்.

புதுச்சேரி மண்ணில் கால் வைத்த துய்ப்ளேக்சுக்கு தில்லி சுல்தானிடமிருந்து 'நவாப்' பட்டத்துக்கான பர்வானா வருகிறது. அதிலிருந்தே அவருக்கு 'கர்நாடக ராஜா' என்ற  ராஜகளை வந்து விடுகிறது.  தம் தந்தையர் நாடான பிரான்சுக்கு இந்தியாவில் பெருமளவு பூமியைப் பெற்றுத் தருவதையே தன்னுடைய தலையாய கடமையாக எண்ணிய துய்ப்ளேக்சுக்கு, அந்தக் கனவை நிறைவேற்றித் தரக் கூடிய திட்டங்களையும் உதவிகளையும் சுதேசிகளே அளித்தனர்.  இடையில் வந்து சேர்ந்த வியாதி போல, துய்ப்ளேக்சுக்கு ழான் என்ற மனைவி வாய்த்திருந்தாள். ழான் ஆல்பர்ட்  தன் முதல் கணவன் மரிக்கும் வரை வாழ்ந்ததில் பதினோரு பிள்ளைகள் பெற்று, யவ்வனம் கழிந்து, பின்னரே துய்ப்ளக்சைக் கைப்பிடித்தாலும், கவர்னர் தம் மனைவியின் சொல்லைத் தட்டாமல் அவள் விருப்பபடி அரசாங்கத்தின் செயல்பாடுகளில் தலையீட்டை அனுமதித்திருந்தார். அவரது வீழ்ச்சிக்குப் பெருமளவு இதுவும் காரணமாக இருந்திருக்கிறது. குறுக்கு சால் ஓட்டி அவள் செய்யும் திரிசமன்களும், பதவியை வைத்துப் பணம் பண்ணிய விதத்தையும் பார்த்தால், தற்போதைய மக்களாட்சியில் தலைவிகள், அவர்தம் தோழியர் நடத்தும் வித்தைகளை செய்தித்தாளில் படிப்பது போல இருக்கிறது. சேசுசபை பாதிரிகளின் ஆலோசனையின் பேரில் தனக்கென்று ஒரு தனிப்படை வைத்துக்கொண்டு கணவனையே வேவு பார்ப்பது, அரசுப் பதவிகள், நிர்வாகம், நீதிமன்றம்,  எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்துப் பணமும் தேவ ஊழியமும் பார்ப்பது என்றெல்லாம் ஜாஜ்வல்யமாக இருந்திருக்கிறாள்.  ழான், தாதா கணக்காக அறுவடை நடக்கும் களத்துமேடுகள், தனவந்தர்கள் வீடுகள், இங்கெல்லாம் ஆளனுப்பி, வராகன்கள்,  நெல் மூட்டைகள் வசூல் செய்வது, பூட்டியிருக்கும் வீடுகளை ஆக்கிரமிப்பது என்று கண்டபடி அடாவடி செய்கிறாள்.  தொல்லை தாங்காத மகாநாட்டார் அதுபற்றி கவர்னரின் காதில் போட்டுவைக்க ரங்கப்பரிடம் கேட்கிறார்கள்.
"குவர்னரிடம் இது பற்றிப் பிராது பண்ணலாமே..."
"பாவம், சதையை வென்றவனுக்கு அல்லவோ பொண்டாட்டிக்கு இடம் நிர்ணயிக்கக் கூடும்? மனுஷர் தார தம்மியம் பெண்பிள்ளை சகவாசத்தால் நாசமடைகிறது"


இன்றும் புதுச்சேரி பெரிய மனிதர்களுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு வீடுகளை அபகரிப்பதுதான்.  பூட்டிய வீடுகளின் பத்திரங்கள் மிக பத்திரமாக அவர்கள் கைக்கு மாறும் கலை பிரமிக்கத் தக்கது. சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு புதுவை கவர்னர் சகோதரியின் மனையை இவ்விதம் அபகரித்தப் பின் காவல்துறை எடுத்த நடவடிக்கைகளுக்குப் பின்னர்தான் இந்தத் திருவிளையாடல்கள் கொஞ்சம் குறைந்திருக்கின்றன.  ஆட்சி முறைகள் மாறினாலும், ஆட்சியாளர்களும் அவர்தம் உறவினர்களும் அவ்வளவாக மாறுவதில்லை. 

'அஞ்ஞானி' ரங்கப்பரை ழான் எப்போதும் விரோத பாவத்துடன் நடத்தி வந்தாலும், கவர்னர் எல்லா முக்கிய விஷயங்களையும் பிள்ளையைக் கலந்தே செய்து வந்தார்.  அரசனுக்கு ஆலோசனை சொல்லும் இடத்தில் இருப்பவர்கள் அகலாது அணுகாது காரியமாற்றும் வித்தையை ரங்கப்பிள்ளை செய்து வந்தது அவர் 'எப்பேர்க்கொத்த' மதியூகி என்று நிரூபிக்கிறது. அடையாற்று யுத்தத்தில் தோற்றுத் தன் தலைப்பாகையை இழந்து ஓடிய ஆர்க்காட்டு நவாப் குமாரர் பெரும் படையுடன் மீண்டும் வந்தபோது, சமாதானப் பேச்சுக்காக ரங்கப்பிள்ளை தனி ஆளாகப் போன விதம் இந்த நாவலில் வெகு சுவை பட விவரிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் நடந்த ஆங்கிலோ-பிரெஞ்சு யுத்தம் வியாபாரம் செய்ய வந்த இடத்துக்கும் கசிந்து, பரஸ்பரம் கப்பல்களை அழிப்பதாக இருந்தார்கள்.  புதுச்சேரி கவர்னருக்கு உதவியாக பிரான்சின் தலை சிறந்த கப்பல் படைத்தலைவன், மொரீஷியஸ் தீவின் கவர்னர் லபூர்தொன்னே வந்து சேர்கிறான்.  இவர்கள் இருவருக்கும் நடக்கும் 'நீ பெரியவனா, நான் பெரியவனா' விளையாட்டில் துய்ப்ளேக்சின் 'பேரரசு நிறுவும் திட்டம்' மண்ணானது.  1746 -இல் நடந்த ஆங்கிலோ-பிரெஞ்ச் யுத்தத்தில் சென்னையை இலகுவாகக் கைப்பற்றிப் பின்னர் தனிப்பட்ட பேரத்தில் ஆங்கிலேயர்களிடமே திரும்ப விற்று விடுகிறான் லபூர்தொன்னே.  சென்னைப் பட்டின விஷயமாக ஆர்க்காட்டு நவாபிடம் இரட்டை விளையாட்டு விளையாடிய துய்ப்ளேக்சின் நிலைதான் சங்கடமானது.  லபூர்தொன்னே பின்னாளில் கைது செய்யப்பட்டு பிரான்ஸ் கொண்டு செல்லப்படுகிறான்.  புதுச்சேரி கடற்கரைக்கு அருகில் இன்றும்  'லபூர்தொன்னே வீதி' இருந்து கொண்டு வரலாற்றுக்கு மௌன சாட்சி சொல்கிறது.

சென்னையில் நடந்த முதல் முற்றுகையின்போதுதான் அங்கு குமாஸ்தாவாகப் பணியாற்றி, வாழ்க்கையை வெறுத்துத் தற்கொலைக்கு முயன்று, அதிலும் தோல்வியுற்ற ராபர்ட் கிளைவ் அறிமுகம் ஆகிறார். சென்னையிலிருந்து தப்பி மாறுவேடத்தில் கடலூர் தேவனாம்பட்டினக் கோட்டைக்குச் சென்று, அங்கிருந்துதான் தன் வாழ்க்கைக்குத் தாமே ஒரு திருப்புமுனையை ராபர்ட் கிளைவ் ஏற்படுத்திக் கொள்கிறார்.  அந்த ஆங்கிலோ-பிரெஞ்சு யுத்தத்தில் சாமான்ய மக்கள் தம் சொற்ப இருப்பையும் இழந்து எஞ்சிய மக்களோடும் பொருளோடும் ஊர் விட்டு ஊர் போவது கொடுமையான நிகழ்ச்சி.  யுத்தத்தில் 'collateral -damage ' ஆன  இவர்களை எல்லாம் எந்தக் காலத்தில் யார் பார்த்தார்கள்?
"மயிலாப்பூர், பிரம்பூர் என்று சுற்றிலும் இருக்கிற ஊர்களில் எல்லாம் ஏகக் களேபரமாய்  ஆச்சு.  ஜனகள் குஞ்சு குளுவான்களுடன் கூட்டம் கூட்டமாகக் கையில் அகப்பட்ட தட்டு முட்டுச் சாமான்களுடனே அலைந்தும், ஊரை விட்டு வெளியேறி செங்கழுநீர்ப் பட்டுக்கும் வந்தவாசிக்கும் ஆர்காட்டுக்கும் அலைந்ததென்ன?  தப்பித்து ஓடிச்சென்ற மனுஷ்யர் பலர் அடையாற்றங்கரைய்லே தங்கி இருக்க, அங்கும் பிரஞ்சியர் போய் அடாவடித்தனம் பண்ணி பெண்டுகளை வம்பு செய்கிறது, அவர்களின் கூந்தலை அறுக்கிதுமாக, நகைகளைக் கொள்ளை அடிக்கிறதுமாக இருந்தார்கள்."
"ஜனங்களை இவர்கள் என்னதான் நினைத்தார்கள்?
வரிகட்டவும், அவர்கள் தின்னப் பயிரிடவும் ஆன ஜடப் பொருளாக நினைக்கிறார்கள்"


நிஜாம், ஆர்க்காட்டு நவாப் ஆகியோரோடு உள்குத்து அரசியல் செய்து நர்மதை முதல் குமரி வரை பிரெஞ்சுக் கொடியைப் பறக்க விட முயற்சி செய்கிறார் துய்ப்ளெக்ஸ்.   கீழ்காணும் அற்புதமான வரிகளுடன் 'வானம் வசப்படும்' புதினம் முடிகிறது.
"குவர்னர் மிகுந்த நம்பிக்கையோடு கடலைப் பார்த்தார், பின்னர் நிலத்தைப் பார்த்தார்.
பிரெஞ்சு தேசத்தின் கொடி, கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, விரிந்து, கர்நாடக மண்ணையே மூடுவதாக அவருக்கு ஒரு பிரமை தோன்றியது. அப் பிரமை தந்த ஆனந்தக்களிமயக்கில் ஆழ்ந்தார் குவர்னர் துய்ப்ளெக்ஸ்."


வானம் வசப்படும் என்று கனவு கண்டது மற்றும் அதற்குண்டான வழிமுறைகளைக் கண்டு முயற்சித்தது துய்ப்ளெக்ஸ்,  ஆனால் அது வசப்பட்டதோ ராபர்ட் கிளைவுக்குத்தான்.  பிரெஞ்சு நாட்டவர் இந்தியாவில் பரவலாகக் காலூன்றாததற்கு முக்கிய காரணங்கள் பிரெஞ்சிந்தியக் கம்பெனி விதிகள் மற்றும் எல்லா விஷயங்களுக்கும் பிரான்ஸ் தேச மந்திரிகளின் உத்தரவையும் உதவியையும் எதிர்பார்த்தது.  ஆங்கிலேயரின் கிழக்கிந்தியக் கம்பெனிக்குக் கட்டற்ற சுதந்திரம் இருந்ததோடு, ராபர்ட் கிளைவு போன்றோரும் கிடைத்தார்கள்.

சமூக  சேதிக்குறிப்புகள்
ஆதிக்க சாதியினர் கொடுமையிலிருந்து தப்பிக்க பாவப்பட்ட சேரி சனங்கள் கிறித்து மார்க்கத்தில் சேர்கிறார்கள். அப்படி மதம் மாறியவர்கள், குவர்னர் போன்றோரிடம் செல்வாக்குடன் இருந்தது கண்டு, ஏராளமான மேல்சாதிக்காரர்களும் மதம் மாறி, அரசு அதிகரிகளாகி இருக்கிறார்கள்.  மதம் மாறினாலும் இவர்கள் தீண்டாமையை விடாமல், தேவாலயத்துக்குள் கீழ்சாதியினரைத் தம் பக்கம் அமர விடாமல் செய்த வித்தைகள் எல்லாம் அருமையாகப் பதியப்பட்டுள்ளன.
 பண்டிதர்,"மாட்டுக்கறி தின்பவன் புலையன் அன்றோ " என்றார். அதற்கு துரை, "அவன் ஆடு, கோழி தின்னமாட்டேன் என்று உம்மிடம் சொன்னானா?  ஏழைகள் காசு கொடுத்து  வாங்கித் தின்னமாட்டாமல் அன்றோ அதைத் தின்கிறது?  அத்தோடு, நாங்கள் பரம்பரையாய் மாடு தின்கிற புலைக் கூட்டம்தானே?  எங்கள் காலை, சப்பாத்துக் காலை நக்கிக் கொண்டு எப்படிச் சேவகம் பண்ணுகிறீர் ? அது ஆச்சாரக் கெடுதல் இல்லையா?"

இந்த நாவலில், ஒரு கிறித்துவ, ஒரு வெள்ளையர், ஒரு செட்டி, ஓர் ஏழை, மற்றும் ரங்கப்பிள்ளையின் இல்லத்துத்  திருமணங்கள் விபரமாக வர்ணிக்கப்பட்டிருப்பது படிக்க சுவையாக இருக்கிறது.  அக்காலத்திலும் பெண்கள் கொஞ்சம் அப்படி இப்படி இருந்திருக்கிறார்கள்.  அரசாங்க நிர்வாகத்துக்கு வெளியில், தமிழர்கள் சம்பத்தப்பட்ட சமூக வழக்குகளை எல்லாம் ஆனந்த ரங்கர் தீர்த்து வைத்தது மிக விவரமாக இந்த நாவலில் உள்ளது.  அக்காலத்தில் நிலவிய குடும்ப உறவுகள், பிரச்சினைகள், சொத்து விவகார வியாஜ்ஜியங்கள், வியாபாரிகள் விவகாரம் உள்ளிட்ட சிவில் விவகாரங்களை அறிய அது உதவுகிறது.  சமூகத்தின் எல்லா விசேஷங்களுக்கும் அவசியமாகத் தேவைப்பட்ட, ஆனால் கறிவேப்பிலை போலப் பாவிக்கப்பட்ட கோயில் தாசிகள் பற்றி புதினத்தில் பரவலாகக் காணக் கிடைக்கிறது. 

"செட்டியார் கைவிட்டு விட்டார். இப்போது வில்லியனூர் முதலியார் வந்துபோய்க் கொண்டிருக்கிறார்.  அவர்தான் நம்மை சம்ரட்சணம் பண்ணுகிறார்."
"செட்டியார் ரொம்ப நல்லமாதிரிப் பட்டவர் ஆச்சுதே.  உன்மேல் ரொம்பவும் அன்பாக இருந்தாரே. உன் ஜென்ம நட்சத்திரத்துக்கு அர்ச்சனை பண்ணினாரே."
"இருந்தார், இப்போ இல்லை...தாசி உறவு, மாசி நிலவு இரண்டும் சுகப்படாது என்கிற சொலவடை இருக்கத்தானே செய்கிறது சுவாமிகளே!  எங்களையெல்லாம் தாலி கட்டிக் கொண்டா வைத்திருக்கிறது.  சித்ரான்னங்கள் கட்டிக் கொண்டு ஆற்றங்கரைக்குச் சாப்பிடப் போவதில்லையா? அந்த மாற்றம் ஒரு மகிழ்ச்சிக்குத்தானே?  அதுக்காக எப்போதும் ஆற்றங்கரையிலேயே குடித்தனம் பண்ணச் சொனனால் எப்படி..? "

 
துபாஷ் பதவிக்குப் பேயாய் அலையும் அன்னபூரண அய்யருக்கு, ஏராளமான லஞ்சப் பணம் கொடுப்பதோடு அல்லாமல், சம்பாக்கோயிலை ஒட்டி இருக்கும் வேதபுரீஸ்வரர் கோயிலையும் இடிக்க ஏற்பாடு செய்தால் பதவி கிட்டும் என்று ஆசை காட்டுகிறாள் கிறித்து மதத்தின் தீவிர அபிமானியான ழான். தமிழர் தலைவர்களைக் கலைத்து, வேதபுரீஸ்வரர் கோயில் இடிக்கப்பட்டது மிக முக்கியமான சமூக நிகழ்வு.  கோயில் இடிக்கப்பட்ட சமயம் ரங்கப்பிள்ளை அதைத்தடுக்க எந்த முயற்சியும் செய்யாமல் வருத்தத்துடன் வீட்டுக்குள் முடங்கி இருந்து தம் அரச விசுவாசத்தைக் காட்டுகிறார்.  அதே சமயம், மீரா பள்ளிவாசலையும் இடிக்கச் சென்ற சொல்தாதுகள், அங்கிருந்த துருக்க மக்களின் வீரத்தைக் கண்டு பயந்து பின்வாங்குகிறார்கள். வேதபுரீஸ்வரர் கோயில் விக்கிரகங்கள், விரிவாக்கப்பட்ட சம்பாக்கோயிலின் படிக்கட்டுக்களாக மாறின.  பாண்டிச்சேரி செல்வோர், அங்குள்ள 'மாதாகோயில் தெரு'வில் உள்ள பெரிய மாதா கோயிலைப் பார்த்தால் சில இடங்களில் சிவன் கோயில் சுவடுகளைக் காணலாம்.  தற்சமயம், அதே தெருவில் சில குறுக்குத் தெருக்கள் தள்ளி வேறொரு வேதபுரீஸ்வரர் கோயில் உள்ளது.  இப்போதெல்லாம், புதுச்சேரியின் உதிரி இந்துக்கட்சிகள் தங்களுடைய கட்சி ஊர்வலங்களை அங்கிருந்து தொடங்குவது என்று வழக்கம் வைத்திருக்கின்றன.

இந்த நாவலில் பழைய அருமையான தமிழ் வார்த்தைகளை ஆசிரியர் ஏராளமாக எடுத்து உபயோகப் படுத்தியிருக்கிறார்.  அவற்றுக்குப் பொருள் கொடுத்திருந்தால் வாசிப்பவருக்கு உதவியாயிருந்திருக்கும்.  உ.ம்: 'வலசை வாங்கிச் சென்றார்கள்' = 'இடம் பெயர்ந்து சென்றார்கள்'.  ( வலசை = migration ) .

சில விக்கிப்பீடியா பதிவுகள்:
பிரான்சிஸ் துய்ப்ளெக்ஸ்
லா பூர்தொன்னே 




1 comment:

Anonymous said...

Buy Tamil Books Online @ http://www.myangadi.com/

Post a Comment