இது விமர்சனம் இல்லை. விமர்சனகளின் தொகுப்பு.
நான் புதிதாக ஒரு புத்தகம் படிக்க நினைத்தால் படிப்பதற்கு முன் நெருங்கிய நண்பர்களிடமோ அல்லது நல்ல ஒரு மதிப்புரையையோ படித்த பின்தான் படிக்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்வேன். சமீபத்தில் வெளி வந்த காவல் கோட்டம் ஆயிரம் பக்கத்திற்கும் மேலான நீண்ட புத்தகம். புத்தகத்தை எழுதியவர் சு. வெங்கடேசன். இளம் வயதுக் காரர், அவரது முதல் புத்தகம். கள்ளர்கள் வாழ்க்கையைச் சித்தரிக்கும் பெரும் நாவல் என்று மட்டும் மேலோட்டமாகத் தெரிந்திருந்தது.
தமிழில் தரமான இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்கள் எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன் இருவரும் காவல் கோட்டத்திற்கு, முகப்புரை எழுதியிருந்தார்கள். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், எஸ். ராமகிருஷ்ணன் இந்தப் புத்தகத்தை,
ஆயிரம் பக்க அபத்தம் என்று ஒரே காய்ச்சு, காய்ச்சு விட்டார். எஸ்.ரா தன் முகப்புரையில் இந்தப் புத்தகத்தைப் கொஞ்சம் காட்டமாகவே எழுதியிருந்தார். எஸ்.ரா எழுதியது அவர் இயல்புக்கு மாறாக இருந்தது என்று எஸ். ராவின் எழுத்துக்களை ஆர்வமுடன் படிக்கும் என் நண்பர் ஒருவர் கூடக் கூறினார்) எஸ். ராவின் விமரிசனத்தை மறுத்து கீற்று பத்திரிக்கையில் திரு. மணிமாறன் அதே காட்டத்துடன்
எழுத்து வியாபாரியின் அபத்த அரசியல் என்று எதிர்வினை எழுதி இருந்தார். அட, இந்தப் புத்தக விமரிசனம் இவ்வளவு காட்டமாக இருக்கிறதே விமரிசகர்கள் மத்தியில் - என்று நினைத்தேன்.
அப்புறம் ஜெயமோகனின் விமரிசனம் வந்தது. காவல் கோட்டத்தைச் சிலாகித்து விரிவாக
விமரிசனம் ( ஐந்து பாகங்கள்) செய்திருந்தார். தனக்கே உரித்தான முறையில் காவல் கோட்டத்தின் பல படிமங்களை முன் வைத்தார். அதைப் படித்தபின் அவசியம் காவல் கோட்டத்தை வாங்கிப் படிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். சமீபத்தில் இந்தியா சென்ற நண்பர் ஒருவரை வாங்கி வரச் சொல்லி இருக்கிறேன். படித்தவுடன் என் எண்ணங்களை எழுதுகிறேன்.
காவல் கோட்டத்தை படித்தவர்கள் என்ன நினைகிறீர்கள்?
குறிப்பு 1 :
புத்தக விவரம்:
காவல் கோட்டம்
சு. வெங்கடேசன், தமிழினி பதிப்பகம்
குறிப்பு 2:
காவல் கோட்டத்தை எழுதிய சு. வெங்கடேசன்,
ஒரு காலத்தில் ஜெயமோகனின் விஷ்ணுபுரத்தை கிழி, கிழி என்று கிழித்து எழுதியது பலருக்கு நினைவிருக்கலாம். பிறர் தன்னைப் பற்றிக் கூறும் சிறு குறைகளைக் கூட ஏற்றுக் கொள்ள முடியாத மெல்லிய தோல் கொண்டவர்களாக பல எழுத்தாளர்கள் இருக்கும் காலத்தில், ஜெயமோகன் போன்ற பாரபட்சமற்ற விமரிசகர்கள் இருப்பது மிகவும் பாராட்டத்தக்கதே!